காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜர் ஆவணப்படம்

0

“முதல்வர் விஜய்க்கு மக்களும் அரசியல் கட்சிகளும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்” – இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன்

“’காமராஜ்’ திரைப்படத்தை மாதம் ஒருமுறையாவது பார்த்தால் நல்ல மனிதராக மாற முடியும்” – இயக்குநர், நடிகர் சுப்பிரமணியம் சிவா

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் – இரண்டாம் பாகம் திரைப்படத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் …, தனது வாழ்நாளின் மூன்று தசாப்தங்களை அர்ப்பணித்து உருவாக்கிய “காமராஜ்” திரைப்படத்தை தமிழ்நாடு அரசு அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

1994-ஆம் ஆண்டு காமராஜரின் உதவியாளர் வைரவன் மூலம் ஜி.கே. மூப்பனாரை சந்தித்ததாகவும், அவரது ஊக்கத்திலேயே படப்பணிகள் தொடங்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். பின்னர் ஜி.கே. வாசனின் ஆதரவுடன் திரைப்படம் நிறைவு செய்யப்பட்டு 2004-ல் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

காமராஜரின் வாழ்க்கையை முழுமையாக பதிவு செய்ய தனது வாழ்க்கையின் 30 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திரைப்படத்தின் செயற்கைக்கோள் உள்ளிட்ட பல உரிமைகள் இதுவரை விற்கப்படாமல் இருப்பதாகவும், தற்போது யூடியூபில் மட்டுமே படம் கிடைப்பதாகவும் கூறினார்.

இதனால், காமராஜரின் வாழ்க்கை வரலாறு அடுத்த தலைமுறையினருக்கும் சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு திரைப்படத்தை வாங்கி அரசுடமையாக்கி, அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் குறித்த கருத்து

அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஏ.ஜெ. பாலகிருஷ்ணன், 1967-ல் புதிய அரசு பொறுப்பேற்றபோது, “அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்; உடனே விமர்சிக்க வேண்டாம்” என்று காமராஜர் கூறியதை நினைவுகூர்ந்தார்.

அதேபோன்று, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய்க்கும் மக்களும் அரசியல் கட்சிகளும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்த்த பிறகே முடிவுகளுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், காமராஜரின் நேர்மை, மக்கள் சேவை மற்றும் நல்லாட்சியின் சிந்தனைகள் இன்றைய அரசியல் மாற்றங்களுக்கும் ஊக்கமாக உள்ளன என்றும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் சிவா பாராட்டு

விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணியம் சிவா, காமராஜர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, மனித உருவில் வாழ்ந்த தெய்வம் எனக் குறிப்பிட்டார்.

“காமராஜ்” திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனிதநேயம், நேர்மை மற்றும் மக்கள் சேவையின் உயரிய மதிப்புகளை உணர்த்துவதாகவும், அந்தப் படத்தை ஒருவர் மாதம் ஒருமுறையாவது பார்த்தால் நல்ல மனிதராக மாற முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியலில் இருப்பவர்களும், அரசியலுக்கு வர விரும்புபவர்களும் கட்டாயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும், மக்களுக்கு சேவை செய்வதன் உண்மையான அர்த்தத்தை காமராஜரின் வாழ்க்கை கற்றுத்தருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், திருக்குறள் – இரண்டாம் பாகம் திரைப்படத்தின் மாதிரி காட்சியையும் பாராட்டிய அவர், திருக்குறள் உலக மனிதகுலத்திற்கு வழிகாட்டும் பொதுமறை என்றும், அந்தப் படைப்பை திரைப்படமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் தெரிவித்தார்.

இறுதியாக, நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும், குறிப்பாக ஊடகத்துறையினருக்கும், இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.