இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். அவரது இசையில் இதுவரை கேட்டிராத வித்தியாசமான இசை அனுபவமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
80-களின் இசை உலகை கண்முன் கொண்டு வரும் வீடியோ
80-களின் புகைப்படங்களும், அக்காலகட்ட இசையும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், ‘மகளே’ பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவின் தொடக்கமே 80-களில் ஒரு திரைப்படப் பாடல் ரெக்கார்டிங் எப்படி நடைபெற்றிருக்குமோ, அதனை அப்படியே கண்முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மகளை கொண்டாடும் அழகான பாடல்
ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேதாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்து, பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.
சாய் அப்யங்கரின் மென்மையான இசையும், அவரது குரலும், கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகளும் இணைந்து ‘மகளே’ பாடலை, ரசிக்க வைக்கும் அனுபவமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, வழக்கமான இளமைத் துள்ளல் இசையிலிருந்து விலகி, மனதை வருடும் மெலடி பாணியில் சாய் அப்யங்கர் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வித்தியாசமான கூட்டணியில், வித்தியாசமான களத்தில் வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Star Studio18, A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.