‘கான் சிட்டி’ படத்தின் நன்றி அறிவிப்பு விழா

அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் …

“இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் இயக்குநர் ஹரிஷுடன் இணைந்து பயணித்து வருகிறேன். இன்று இந்த வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஹரிஷுக்கு மிகப்பெரிய விஷன் இருக்கிறது. இது அவரது பயணத்தின் தொடக்கம் மட்டுமே. அவர் நினைத்த உயரத்தை நிச்சயம் அடைவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் வைத்த இலக்கை இறுதி வரை அதே அர்ப்பணிப்புடன் பின்பற்றியதால்தான் இன்று இந்த வெற்றியை கொண்டாடுகிறோம்.

மிகவும் பிஸியான ஷெட்யூலிலும் நடன ஒத்திகைக்காக நேரம் ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

வடிவுக்கரசி அம்மா இந்த வயதிலும் காட்டிய அர்ப்பணிப்பு எங்களை வியக்க வைத்தது. எந்தக் காட்சிக்கும் உடனடியாக தயாராகி நடித்தது அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தது.

ஆர்.சி. மற்றும் எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட அனைவரும் ஒவ்வொரு கட்டத்திலும் முழு ஒத்துழைப்பை வழங்கினர். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

எடிட்டர் அருள் மோசஸ் …

“‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், மக்களிடையே பெரிய ரீச்சையும் கிடைக்கச் செய்தது ரசிகர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும்தான். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்தப் படம் ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நல்ல கருத்துகளை பகிர்ந்து மற்றவர்களும் படத்தைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என் உதவியாளர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. குறிப்பாக இறுதிக்கட்டப் பணிகளில் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.

விநியோகஸ்தர் ஐயப்பன் …

“‘கான் சிட்டி’ மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் பாராட்டுகள்.

அர்ஜூன் தாஸிடம் ஒரு வேண்டுகோள். இதுபோன்ற தரமான கதைகளுடன் சேர்த்து, குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான குடும்பப் படங்களிலும் அதிகமாக நடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் கல்கி ராஜா …

“இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்காக அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

ஏற்கனவே ‘கைதி’ படத்தில் அவருடன் பணியாற்றியிருந்தேன். தற்போது ‘கான் சிட்டி’ போன்ற வெற்றிப் படத்திலும் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது.

வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். அதேபோல், எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் பரத் அவர்கள் படப்பிடிப்பு முழுவதும் அளித்த வழிகாட்டுதலுக்கும் நன்றி.”

நடிகர் ரகு …

“‘கான் சிட்டி’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அர்ஜூன் தாஸ், வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

எடிட்டர் அருள் மோசஸ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் மற்றும் மோகன்ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் ஹரிஷ் ஏராளமான காட்சிகளைப் படமாக்கியிருந்தார். இரண்டு மணி நேர படத்திற்காக ஆறு மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றை சிறப்பாக ஒருங்கிணைத்து திரையில் கொண்டு வந்த எடிட்டிங் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞருக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு நாள் நடித்த கதாபாத்திரங்கள்கூட ரசிகர்களின் மனதில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த வெற்றி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

நடிகர் ஆதித்யா கதிர் …

“இயக்குநர் ஹரிஷ் ப்ரோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிக்காக அவர் கடந்துவந்த கடினமான பயணத்தை நாங்கள் அறிவோம். அந்த உழைப்புக்கான பலன்தான் இன்று கிடைத்திருக்கிறது.

அர்ஜூன் தாஸ் வில்லனாக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார். அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஒரு படத்தின் போஸ்டரில் நடித்த அனைவருக்கும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் ஹீரோக்கள் மிகவும் அரிது. அந்த நல்ல மனசுதான் அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வில்லனாக தொடங்கி உச்சத்தை அடைந்தது போல, அர்ஜூன் தாஸும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”

நடிகர் இமான் அண்ணாச்சி …

“‘கான் சிட்டி’ திரைப்படம் 25-வது நாளை எட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அந்த வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வெற்றிக்கு காரணம் இதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களை வழங்கி சிறந்த படைப்பாக உருவாக்கிய இயக்குநர் ஹரிஷுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

நடிகர் சதா …

“இது என்னுடைய முதல் திரைப்படம். இந்த ஒரு படத்திற்கே எனக்கு கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.

படம் வெளியான பிறகு சென்னை, சேலம், மதுரை, திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு இடத்திலும் கிடைத்த அன்பும் ஆதரவும் மறக்க முடியாதது. ஒரு அம்மா வந்து என் நெற்றியில் திருநீறு வைத்து, ‘நீ நல்லா இருக்கணும்’ என்று ஆசீர்வதித்தார். என் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் எனக்காக அப்படி செய்ததில்லை. அந்த தருணம் என்னை மிகவும் நெகிழச் செய்தது.

எங்கு சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு பாராட்டுவது மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியதைவிட, இந்த வெற்றி விழாவில் பேசுவது எனக்கு இன்னும் உணர்ச்சிகரமாக உள்ளது.

இந்தப் படத்தின் ஒவ்வொரு துறையுடனும் நெருக்கமாக பயணித்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் ஒளிப்பதிவு, இசை, டப்பிங், சவுண்ட் டிசைன், சவுண்ட் மிக்சிங் என அனைத்து துறைகளிலும் இருந்து திரைப்படம் உருவாகும் முறையை கற்றுக்கொண்டேன்.

அதன் பலனாக தற்போது எனக்கு அடுத்த இரண்டு, மூன்று படங்களுக்கான வாய்ப்புகள் வந்துள்ளன. அதற்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும் இருக்கிறேன்.”

குழந்தை நட்சத்திரம் அகிலன் …

“அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அகிலன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றி.

அதேபோல் தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றிகள். எனக்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

பாடலாசிரியர் மோகன் ராஜ் …

“முதலில் இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் பங்கு மிக முக்கியமானது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் நானும் இணைந்தால் அது வெற்றிக் கூட்டணி என்று அனைவரும் சொல்வார்கள். அந்த நம்பிக்கையை ‘கான் சிட்டி’ மீண்டும் நிரூபித்துள்ளது.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் என் நண்பர். இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் இன்று இந்த வெற்றி மேடை வரை அவர் கடந்த பயணம் எனக்குத் தெரியும். இது அவரது முதல் வெற்றிப்படி மட்டுமே. இன்னும் பல உயரங்களை அவர் அடைவார்.

இந்தப் படத்தில் இரண்டு தத்துவப் பாடல்களை எழுதும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கினார். அந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

‘ஏமாற்றாதே… ஏமாறாதே…’ மற்றும் ‘கண்ணா ப்ரோ’ பாடல்களில் இடம்பெற்ற,

வெற்றி பெற்ற செடியும் இங்கு விழுந்து வீழும் காலம் உண்டு…
தோற்று தோற்று நின்றவரும் வாழும் காலம் உண்டு…

என்ற வரிகள் வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும் வரிகள்.

ரசிகர்களிடம் ஒரு மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். ‘ஃப்ராடு பையலே’ பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. அது நேரக் குறைவால் நீக்கப்பட்ட பாடல் அல்ல; ஆரம்பத்திலிருந்தே படத்தில் இடம்பெறாது என்று திட்டமிடப்பட்ட பாடல். இருப்பினும், அந்தப் பாடலுக்காகவே பலர் படம் பார்க்க வந்ததாக சமூக வலைதளங்களில் பார்த்தபோது, அதை சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கும் வந்தது. அந்தப் பாடலை நேசித்த ரசிகர்களிடம் படக்குழு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அர்ஜூன் தாஸுக்கு இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக பெண் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆக்ஷன் மட்டுமல்லாமல், காதல் கதைகளிலும் அவர் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவரை முழுமையான காதல் நாயகனாக ரசிகர்கள் பார்க்கும் நாள் விரைவில் வரும்.

சதா, கல்கி ராஜா, ஆதித்யா கதிர், ரகு, அகிலன் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். குறிப்பாக அகிலனின் இறுதிக்காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இமான் அண்ணாச்சி, சந்தோஷ் மாஸ்டர், அருள் மோசஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.

Power House Pictures நிறுவனத்திலிருந்து இன்னும் பல தரமான படங்கள் வர வேண்டும். ஹரிஷின் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் …

“இன்று எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு சிறந்த கலைஞன் உருவாக முடியும் என்பதை நிரூபிக்கும் நாளாக இருக்கிறது. அந்த வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கும் சாவியாக நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். அதற்காக ஹரிஷின் சார்பிலும், அவரது சகோதரனாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உண்மையைச் சொன்னால், இந்தப் படத்திற்கு இன்னும் பெரிய வரவேற்பை எதிர்பார்த்திருந்தேன். இருப்பினும், ஹரிஷின் முதல் திரைப்படமே வெற்றியடைந்திருப்பது அளவில்லா மகிழ்ச்சியை தருகிறது.

ஹரிஷ் மிகவும் கூர்மையான சிந்தனை கொண்ட இயக்குநர். அவர் முதன்முதலில் கதையைச் சொன்னபோது, இவ்வளவு கதாபாத்திரங்களையும் இரண்டு மணி நேரத்தில் எப்படி அழகாக சொல்லப் போகிறார் என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதை மிகவும் நேர்த்தியாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம் வரை அனைவருக்கும் நினைவில் நிற்கும் தருணங்கள் உள்ளன. ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர்களின் கைதட்டல்கள் கிடைத்தன. அதுவே ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி. எதிர்காலத்தில் பான் இந்தியா, பான் வேர்ல்ட் அளவிலான படைப்புகளை ஹரிஷ் நிச்சயம் உருவாக்குவார்.

இது அவரது பயணத்தின் தொடக்கம் மட்டுமே. இன்னும் அவர் செய்யப் போகும் படைப்புகள் மிகப் பெரிய அளவில் இருக்கும்.

எடிட்டர் அருள் மோசஸ் பின்னணி இசைக்காக ஒவ்வொரு காட்சியையும் மிகத் துல்லியமாக வடிவமைத்தார். இசையமைப்பாளர்களின் தேவையை புரிந்துகொண்டு பணியாற்றும் அருமையான எடிட்டர் அவர்.

நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். என்னால் செய்ய முடியும் என்று நினைக்காத விஷயங்களைக்கூட என்னிடம் இருந்து வெளிக்கொண்டு வந்தவர் அவர். குறிப்பாக குழந்தைகளுடன் அவர் பணியாற்றிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து குணச்சித்திர நடிகர்களும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒரு கதையின் வெற்றிக்கு தரமான துணைக் கதாபாத்திரங்கள் மிகவும் அவசியம்.

குறிப்பாக சதாவின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் நான் சொன்னேன், ‘நீங்கள் மிகவும் அழகாகவும், சிறந்த திரைப்பரிமாணம் கொண்டவராகவும் இருக்கிறீர்கள். எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் நிச்சயம் வரும்’ என்று. அவருடைய வெற்றிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

பாடலாசிரியர் மோகன் ராஜனுடன் உருவான இந்தக் கூட்டணி இயல்பாக உருவான ஒன்று. அதற்காக இறைவனுக்கு நன்றி.

இந்தப் படம் ஓடிடி வெளியீட்டிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்தில் உழைத்த என்னுடைய இசைக் குழுவினருக்கும், இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”

நடிகர் அர்ஜூன் தாஸ் …

“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படத்தின் முதல் காட்சி முடிந்த பிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது. படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்.

படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த வெற்றிக்கான முழுப் பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும்.

இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது இன்று நிஜமாகியுள்ளது. இவ்வளவு திறமையான மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்.

எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அகிலன்… இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை ‘அப்பா’ என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. உன்னுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். எதிர்காலத்திலும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

சதாவுக்கும் என் வாழ்த்துகள். படப்பிடிப்பின் போதே படம் வெளியாகும் வரை வேறு வாய்ப்புகளை ஏற்க வேண்டாம்; இந்தப் படத்திற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என்று சொன்னேன். இன்று அது நிஜமாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மோகன் ராஜன் சார், ஷான் ரோல்டன் அண்ணா ஆகியோருடன் இந்தப் பயணம் தொடர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். குறிப்பாக ஷான் அண்ணா, இந்தத் துறையில் நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர்.

யோகி பாபு சார் இன்று இங்கு இல்லை. ஆனால் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அனுபவம். அவர் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் சிரிப்பால் நிரப்பிவிடுவார்.

வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து பணியாற்றியது ஒரு பெரிய கற்றல் அனுபவம். சமீபத்திய புரமோஷன் பயணங்களில் அவருடைய உற்சாகத்தையும் எளிமையையும் நெருக்கமாகப் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியையும் ஒரே டேக்கில் முடிக்கும் அவரது அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருடைய நடிப்பைப் பாராட்டியதை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். இந்தப் படத்தின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் வடிவுக்கரசி அம்மாதான் என்று நான் நம்புகிறேன்.

பரத், ஐயப்பன் சார், முத்துக்குமார் சார் ஆகியோருக்கும் நன்றி. இந்தப் படத்தை உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிட நீங்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது.

‘கைதி’ திரைப்படத்திலிருந்து தொடரும் லல்லுவுடனான பயணத்திற்கும், அம்சா நிறுவனத்திற்கும் என் நன்றிகள். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெளியீட்டை வழங்கியது எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது.

இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். இந்த அன்பும் ஆதரவும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பை எனக்கு அளித்துள்ளது. தொடர்ந்து நல்ல படங்களை உங்களுக்காக வழங்குவேன்.”

நடிகை வடிவுக்கரசி …

“நான் இன்று உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்தது போன்ற உணர்வாக இருக்கிறது. அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவிய ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணிரத்னம் சார், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், ஏ.சி.எஸ். சண்முகம், சரத்குமார் சார், ராதிகா உள்ளிட்ட அனைவருக்கும் நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இன்று ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில் 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள் என வெற்றி விழாக்கள் நடந்தன. இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவில் இருக்கிறது.

படம் வெளியான பிறகு ரசிகர்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் பார்த்தேன். ‘ஒரு நிமிடம்கூட சலிக்காமல் படம் பார்த்தோம்’ என்று கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை மீண்டும் மீண்டும் படித்தேன்.

ஆனால் ஊடக நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். ‘வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்’ என்று மட்டும் எழுதாமல், ‘இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்’ என்றும் எழுதுங்கள். அந்த ஒரு வரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத் தரும்.

இந்தப் படத்தின் மூலம் என்னை வேறு கோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ‘வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார்’ என்ற எண்ணத்தை மாற்றி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் புதிய வரவேற்பைப் பெற்றுத் தந்தார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.”

நடிகர் விடிவி கணேஷ் …

“முதலில் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குநர் என்னை அழைத்து, முன்பே கூறிய வாக்குறுதியை மறக்காமல் ஒரு ஐஃபோனை பரிசாக வழங்கினார். அந்த நேர்மைக்கும், நன்றியுணர்வுக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை ஒரு சிறிய படம் என்று நினைத்தேன். ஆனால் தயாரிப்பு, திட்டமிடல், விநியோகம், ஓடிடி ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்தையும் பார்த்தபிறகுதான் ஹரிஷின் சிந்தனை எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன். அதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

ஹரிஷ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல; திரைப்படத்தின் ஒவ்வொரு துறையையும் நன்றாகப் புரிந்துகொண்ட படைப்பாளர். அதுவே இந்த வெற்றிக்குக் காரணம்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்று பேசப்படும் நிலையில், ‘கான் சிட்டி’ நல்ல வசூலைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.

ஹரிஷின் அடுத்த திரைப்படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.”

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் …

“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், சிறிய படங்களை திரையரங்கிற்கு வரவழைப்பது மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது.

ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அந்தப் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. ‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கும் அந்த ஆதரவை வழங்கிய ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவிப்பதற்காகவே இந்த நன்றி அறிவிப்பு விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.”

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் …

“இப்போது பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. சில நாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அந்த சூழலில், கான் சிட்டி திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்த அன்புக்கும், வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

முதலில், திரைக்கதை உருவான நாளிலிருந்து இன்று வரை என்னுடன் துணையாக இருந்த குணா (Post Office), விஜய் (Silver Tree) ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.

இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து நிதி உதவி செய்த MRP Entertainment நிறுவனத்தின் மகேஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மணிகண்டன் சார், PTG Studios, வெண்ணி, ஜென்னி, என் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

என்னுடைய இணை தயாரிப்பாளர் சித்து, கதை கேட்ட மறுநாளே எந்த தயக்கமும் இல்லாமல் முதலீடு செய்தார். அதேபோல் Cloud Studios நிறுவனத்தின் அருண் அண்ணா, எந்தக் கேள்வியும் கேட்காமல் ‘நான் உன்னுடன் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையுடன் இந்தப் படத்தில் இணைந்தார். அவர்களது நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இணை தயாரிப்பாளரான விஜய் அவர்களுக்கும், வெளிநாட்டு வெளியீட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த T-Series மற்றும் என் வணிகக் கூட்டாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற Netflix நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.

Delta Studios நிறுவனத்தின் ஐயப்பன் சார், நடிகரின் சந்தை மதிப்பை மட்டுமல்லாமல், கதையின் உள்ளடக்கத்தை நம்பி இந்தப் படத்துடன் இணைந்தார். அவரது நம்பிக்கையும் ஆதரவும் இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒன்று.

55 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பும், 95 கால்ஷீட்களில் உருவான இந்தப் படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர், மிக்ஸிங் இன்ஜினியர் உதய், சவுண்ட் டிசைனர் சச்சின், சிறப்பு மேக்கப் கலைஞர் அப்துல், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜ்கமல், எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்த வெற்றியின் அடித்தளமாக அமைந்துள்ளது. குறிப்பாக அருள் மோசஸ், இறுதி மிக்ஸிங் வரை என்னுடன் இருந்து இந்தப் படத்தை முழுமையாக்கினார்.

வடிவுக்கரசி அம்மாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞர், இன்றும் ‘எனக்கு வேலை வாங்கிக் கொடுங்கள்; நான் இன்னும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்வது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது.

மருத்துவமனையில் அவரைச் சந்தித்தபோது, அவர் என்னிடம் சொன்ன ஒரு வரி இன்னும் என் மனதில் இருக்கிறது.

நான் இறந்தாலும், படப்பிடிப்பு தளத்தில்தான் இறக்க வேண்டும்.

அந்த வார்த்தையை கேட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. சினிமா மீது இவ்வளவு அர்ப்பணிப்புடன் வாழும் ஒரு கலைஞருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம். படம் வெளியான பிறகு அனைவரும் அவரைப் பற்றித்தான் பேசுவார்கள் என்று நான் சொன்னேன். இன்று அது உண்மையாகியுள்ளது.

அன்னா பென் நடித்த மித்ரா கதாபாத்திரமும் இந்தப் படத்தின் மிக முக்கியமான பலங்களில் ஒன்று. ஒரு தாயின் வலியையும், வாழ்க்கையின் சுமைகளையும் எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற அவரது அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அன்னா பெனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

யோகி பாபு அண்ணா இந்தப் படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு. அவருக்கு இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் என் மீது வைத்திருந்த அன்பிற்காகவும் நம்பிக்கைக்காகவும் அவர் இணைந்தார். குறிப்பாக வடிவுக்கரசி அம்மாவின் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக வெளிப்பட வேண்டும் என்பதில் அவர் காட்டிய பெருந்தன்மை மறக்க முடியாதது.

இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடித்தார். போஸ்டர்களில் என் பெயருடன் அனைத்து நடிகர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்று முதலில் கூறியவரும் அவர்தான். அந்த பெருந்தன்மைக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.

கான் சிட்டி திரைப்படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்திற்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

concity thanks meetஅர்ஜூன் தாஸ்இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்கான் சிட்டிபவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
Comments (0)
Add Comment