அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன்

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலகில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று அவரது வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.

பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய ஆர்.எம்.வீரப்பன், பின்னர் எம்.ஜி.ஆருடன் இணைந்து அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் பணியாற்றிய இவர், 1977 முதல் 1996 வரை ஐந்து முறை தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக மூன்று முறையும், சட்டப்பேரவை உறுப்பினராக இரண்டு முறையும் பதவி வகித்துள்ளார்.

அரசியலுடன் இணைந்து திரைத்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஆர்.எம்.வீரப்பன், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்ததுடன், பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட எம்.ஜி.ஆர். படங்களையும், ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களையும் வழங்கியுள்ளார்.

ஆர்.எம்.வீரப்பனின் மருமகனும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன் விழாவை முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவில் பேசிய பல்வேறு பிரமுகர்கள், ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் நாகரிகம், தனிமனித ஒழுக்கம், திரைத்துறைப் பங்களிப்பு மற்றும் வாழ்வியல் மதிப்புகளை நினைவுகூர்ந்தனர்.

சென்னை கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் விழாவில் உரையாற்றினர். தமிழக அரசு, ஆர்.எம்.வீரப்பன் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் விழாவில் முன்வைக்கப்பட்டது.

இயக்குநர்கள் பி.வாசு உள்ளிட்ட திரையுலகினர், கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் ராமலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

அரசியல் மற்றும் திரைத்துறை என இரு தளங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்த ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, அவரது நினைவுகளையும் பங்களிப்புகளையும் போற்றும் நிகழ்வாக அமைந்தது.

R.M. Veerappanwho left his unique mark in both politics and cinema
Comments (0)
Add Comment