இன்று காலை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

31

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.

கட்சியின் அமைப்பு ரீதியிலான மாவட்டச் செயலர்கள் 65 பேரும் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதன்படி, திமுகவில் உள்ள 65 மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு, தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் கூடும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எப்படி சந்திப்பது, வெற்றி வியூகங்களை எப்படி வகுப்பது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

அதேபோல், சட்டப்பேரவை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதுடன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரிடம் செயல் தலைவர் ஸ்டாலின் மனு அளித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.