விஜய் மக்கள் இயக்கம் பெற்றது உண்மையான வெற்றியா?

370

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தன.

153 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்

1421 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்

3007 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும்

23211 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நடை பெற்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான்.

அதிமுக மீதான மக்களின் கோபம் இன்னமும் குறையவில்லை.

திமுக மீது அதிருப்தி அலை உருவாக வில்லை.

இன்னொரு பக்கம், பாஜக, பாமக, நாம் தமிழர்கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய தோல்வி.

இதுதான் தேர்தல் நிலவரம்.

இதற்கிடையில், 23211 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 169 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு 110 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் அறிவும் புரிதலும் இல்லாத அவர்களை விடுங்கள், சில ஊடகங்களும் இதை ஊதிப்பெரிதாக்கி பரபரப்பு செய்திகளாக்குவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.

இந்த ஊராட்சி மன்றங்களில் 99 ஆயிரத்து 324 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகள் உள்ளன.

ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை – 388. வார்டுகள் எண்ணிக்கை – 6,471

மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை -31. வார்டுகள் எண்ணிக்கை – 655

கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஒன்றியங்களின் தலைவர் பதவிகள் மட்டுமே – 12,943

கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு மெம்பர்கள், மாவட்ட வார்டு மெம்பர்களின் மொத்த எண்ணிக்கை – 1,06,450

இவை தவிர, தமிழ்நாட்டில்

528 பேரூராட்சிகளில் 8,288 வார்டுகள் உள்ளன.

121 நகராட்சிகளில் 3468 வார்டுகள் உள்ளன.

15 மாநகராட்சிகளில், 1064 வார்டுகள் உள்ளன.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை – 12,820

தமிழ்நாட்டில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை -1,19,270

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வார்டுகள் இருக்கும் கிராம ஊராட்சிகளில் 110 இடங்களை வென்ற விஜய்க்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தது ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சியும் கூட.

கடந்தகாலங்களில் விஜயகாந்த் மன்றத்தினர் 1000 இடங்களுக்கு மேல் போட்டியிட்டு 420க்கும் மேல் வென்றார்கள்.

பொதுவாக, கிராம ஊராட்சிகளில் நான்கைந்து தெருக்கள்தான் வார்டுகளாக இருக்கும்.

ஒரு வார்டுக்கு 1000 வாக்காளர்கள் இருந்தாலே அதிகம்.

தனிப்பட்ட செல்வாக்கும் லோக்கல் பிரச்சனையும் வார்டு மெம்பர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவை.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றி அவர்களின் தனிப்பட்ட வெற்றிதானே தவிர இயக்கத்தின் வெற்றி அல்ல.

விஜய்யின் சாதனையும் அல்ல. அவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப் பட்ட வேட்பாளர்கள் இல்லை. குறுக்கு வழியில் களத்துக்கு அனுப்பப் பட்டவர்கள்.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவில்லை.

போட்டியிட்டிருந்தால் டெப்பாசிட் கிடைத்திருக்காது.

இதையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கத்துக்கு மிகப்பெரிய செல்வாக்கு ஏற்பட்டிருப்பதாக இருந்தால் மாநகராட்சி தேர்தலில் தன் மக்கள் இயக்க நிர்வாகிகளை களத்துக்கு அனுப்பட்டும்.

காணொலி வடிவத்தில் காண…

https://youtu.be/0yMB9yxOQDs