ஓபிஎஸ் உடன் நேருக்குநேர் மோதிய செல்லூர் ராஜூ

170

மீம்ஸ் கிரியேட்டர்களைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு காமெடி பீஸ்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, அன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, வைகை அணையின் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தண்ணீரின் மீது தெர்மகோலை மிதக்கவிட்டார்.

அன்று முதல் தெர்மகோல் விஞ்ஞானி என்று மீம்களில் செமயாய் அவரை கலாயத்து வருகிறார்கள்.

சொல்லப்போனால் வடிவேலுவுக்கு அடுத்தபடியாக சமூகவலைத்தளங்களில் எண்டர்டெயின்மெண்ட்டே செல்லூர் ராஜூதான்.

வெளிப்பார்வைக்கு காமெடிபீஸுபோல் தெரியும் செல்லூர் ராஜூ உண்மையில் மானரோஷமுள்ள மனிதர் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

கடந்த 10 அண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு அமைச்சர்களும் கொள்ளையடித்த குறைந்தபட்ச தொகையே 100 கோடியைத்தாண்டும்.

முதல்வராக இருந்த எடப்பாடியும், துணை முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸும் கமிஷன், கட்டிங் மூலம் நிச்சயமாக 1000 கோடிக்கு மேல் சேர்த்திருப்பார்கள்.

அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம், வழக்குத்தொடுப்போம், சிறையில் அடைப்போம் என்று வாய்கிழிய பேசினார்.

திமுக ஆட்சியில் உட்கார்ந்து ஆறு மாதங்களை நெருங்கும்நிலையில் ஊழல் செய்த, மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர்கூட இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.

வேலுமணி, எம்ஆர் விஜயபாஸ்கர், வீரமணி என ஒன்றிரண்டு அமைச்சர்கள் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. ஆனால் அவர்கள் மீது வழக்குத்தொடுக்கும் அளவுக்கு யாதொரு ஆதாரமும் சிக்கவில்லை. லஞ்சஒழிப்புத்துறை சோதனை என்பதே கண்துடைப்போ என்றும் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், பாஜகவின் ஆசி பெற்றவர் என்பதாலேயே முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது தமிழ்நாடு அரசு.

ஆவின் பணத்தை ராஜேந்திரபாலாஜி கொள்ளையடித்து ஏப்பம்விட்டது தெரிந்தும் கூட அவர் மீது ஒரு எப்ஐஆர் கூட போடாமல் பம்மிக்கொண்டிருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க, லஞ்சஒழிப்புத்துறையின் நடவடிக்கை தன் மீது பாய்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஓபிஎஸ். அதனால் உஷாராக சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் திமுகவையும், ஸ்டாலினையும், கருணாநிதி யையும் பாராட்டித்தள்ளிக் கொண்டிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் துரைமுருகனை பாராட்டி தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது திமுகவினரைவிட அதிகமாக துரைமுருகனை புகழ்ந்து தள்ளியது ஓபிஎஸ்தான்.

இதற்கெல்லாம் ஒரே காரணம்தான். திமுக உடன் இணக்கமாக இருந்தால் நம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்ற கணக்குதான்.

ஓபிஎஸ் இப்படி நினைத்தாலும், அதிமுக தொண்டர்கள் அவரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்கள்.

தன்னுடைய சுயலாபத்துக்காக அதிமுகவை அடமானம் வைக்கிறார் என்று ஓபிஎஸ்ஸை திட்டாத அதிமுக தொண்டனே இல்லை.

அதிமுக முன்னாள் அமைச்சர்களோ, ஓபிஎஸ்ஸை எதிர்க்க திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அடிமைகளுக்கு மத்தியில், முதுகெலும்புள்ள, மானம் ரோஷம் கொண்டவராக இருப்பது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுதான்.

“அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும் அதனை வளர்க்க வேண்டியதும் அவசியம்.

அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் கொடுக்க வேண்டும்.

தலைமையை நம்பி இந்த இயக்கம் இருந்ததில்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது” என்று சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் செல்லூர் ராஜு

அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க வேண்டும் என்பதைத்தான் இப்படி மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் செல்லூர் ராஜு.

காமெடி பீஸான செல்லூர் ராஜுவுக்கு இப்படி ஒரு தைரியம் எப்படி வந்தது? என்று நீங்கள் கேட்கலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது சம்பவத்தைக் கேட்டால் ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள்.

சட்டமன்றத்தில் தொடர்ந்து திமுகவுக்கு ஓபிஎஸ் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து அவர் மீது செம கடுப்பில் இருந்திருக்கிறார் செல்லூர் ராஜு.

கூட்டத்தொடர் நடைபெற்றபோது ஒருநாள் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் கேண்டீனில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அங்கே ஓபிஎஸ்ஸும் டீ சாப்பிட வந்திருந்தார். ஏற்கனவே அங்கிருந்த செல்லூர் ராஜு, ஓபிஎஸ்ஸை பார்த்ததும் கடுப்பாகிவிட்டார்.

“மானம்போகுது. வெளியே தலைகாட்ட முடியலை. வழக்குக்கு பயந்துகிட்டு கட்சியை அடமானம் வக்கிறாங்க.” என்று சகட்டுமேனிக்கு ஓபிஎஸ்ஸை திட்டத்தொடங்கினார் செல்லூர் ராஜு.

அவருக்கு ஆதரவாக அங்கே நின்றிருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏவும் ஓபிஎஸ்ஸை நோக்கி குரல் உயர்த்த, ஓபிஎஸ்ஸுக்கு குப்பென்று வியர்த்திக்கொட்டியது.

ஆனாலும் செல்லூர் ராஜுவை எதிர்த்துப் பேச பயம். அதனால் கடலூர் மாவட்ட எம்எல்ஏவைப் பார்த்து, “நீ கடலூர் மாவட்டத்தில் கட்சியை அழிக்கப்பார்த்தவன் நீ.. என்னைய குறை சொல்ல வந்துட்டியா?” என்று எகிறியிருக்கிறார் ஓபிஎஸ்.

அந்த எம்எல்ஏவோ ஏற்கனவே எம்பியாகவும் இருந்தவர்.

“செல்லூர் ராஜூ சொல்வது கரெக்ட்தான்.. துரைமுருகன் தீர்மானம் குறித்து சட்டசபையில் நீங்கள் ஏன் பாராட்டிப் பேசணும்? கட்சிக்காரங்க அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்காங்க.”

என்று ஓபிஎஸ்ஸுக்கு செமத்தியாய் பதிலடி கொடுக்க, வெவெலத்துப்போனாராம் ஓபிஎஸ்.

அதன் பிறகு அங்கிருந்த மற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினார்.

அன்று முதல் கட்சியிலிருந்து ஓபிஎஸ்ஸை ஒழிக்காமல்விட மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறார் செல்லூர் ராஜூ.

அந்த கோபத்தில்தான் “அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும் அதனை வளர்க்க வேண்டியதும் அவசியம். தலைமையை நம்பி இந்த இயக்கம் இருந்ததில்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் செல்லூர் ராஜு.

அவர் சொன்னது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ ஓபிஎஸ்ஸுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

 

காணொலி வடிவத்தில் காண…

https://youtu.be/2prifviudgI