வேடதாரி வேட்பாளர்களை நிராகரிப்போம்…

177

தன் இயல்புக்கு மாறாக எவன்ஒருவன் பணிவுகாட்டுகிறானோ… கூழைகும்பிடு போடுகிறானோ… அவன் ஆபத்தானவன்.

அவன் நினைக்கும் காரியம் கை கூடிய பிறகு எட்டி உதைக்க தயங்கமாட்டான்.

இது வேட்பாளர்களுக்கு 100 சதவிகிதம் பொருந்துகிற உளவியல்.

அரசியல்வாதிகளுக்கு 2 முகம். தேர்தல் நேர முகம். தேர்தலுக்குப் பிறகு வேறு முகம். இதுதான் அவர்களுடைய நிஜமுகம்.

தேர்தல் நேரத்தில் மக்களிடம் காட்டும் பணிவு, பரிவு எல்லாமே வேஷம்.

தேர்தலில் வெற்றிகிடைத்த பிறகு அமைதிப்படை அமாவாசையாக நிச்சயமாக மாறிவிடுவார்கள்.

எந்த மக்கள் ஓட்டுபோட்டு எம்எல்ஏ ஆனார்களோ அந்த மக்களையே சந்திக்க மறுப்பார்கள்.

இன்றைக்கு மக்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக ஓட்டுக்காக கூனிக்குறுகி, கும்பிடுபோடும் இவர்கள் போடுகிற வேஷம், நாடகங்களை பார்க்க சகிக்கவில்லை.

இப்படி எல்லாம் செய்தால் மக்கள் நமக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

அவர்களின் நம்பிக்கையில் நாம் மண்ணை அள்ளிப்போடவேண்டும்.

டீகடையில் டீ குடித்தவர்கள் – எடப்பாடி, ஓபிஎஸ், கமல், பொன்முடி, செல்லூர் ராஜூ

ஜெயக்குமார் – அம்மா உணவகம் – கபடி விளையாடினார்.

கோகுல இந்திரா – சூப் கடையில் சூப் ரெடி பண்ணினார்..

ஒரு வேட்பாளர் – அயர்ன் பண்ணினார்.

நாகை அதிமுக வேட்பாளர் நாகூரில் – துணி துவைச்சுக்கொடுத்தார்.

உணவகத்தில் தோசை சுட்ட வேட்பாளர்

வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக் – பரோட்டா மாஸ்டர்

தொன்டா முத்துர் தொகுதியில் மன்சூரலிகான் மீன் வெட்டிக்கொடுத்தார். பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து, நாயைக் கொஞ்சினார்.

நரிக்குறவர்களின் தட்டு ரிக்ஷா ஓட்டிய வேட்பாளர்..

நரிக்குறவ மக்களுடன் நடனம்..

அதிமுக வேட்பாளர் பெண்களுக்கு பொன்னாடை போத்துகிறார்…

சைக்கிளில் பயணிக்கும் வேட்பாளர்

கமல் – நகரப்பேருந்து, மெட்ரோ ரயில், ஆட்டோவில் பயணித்தார்

வானதி சீனிவாசன் – ஆட்டோவில் பயணம்

குஷ்பூ – வயதான பெண்கள், சிறுவர்களுக்கு முத்தம்.

உதயநிதி – சிறுவர்களுடன் கொஞ்சல், செல்பி

ஹெச். ராஜா பட்டியலின மக்களின் வீட்டில் டீ குடிக்கிறார். புதிய டம்ளர். விலை கூட அழியவில்லை. கொண்டையை மறைக்க முடியவில்லை.

விவசாயியாக தன்னை காட்டிக்கொள்வதற்காக பச்சைத்துண்டு – எடப்பாடி, ஸ்டாலின், ஒபிஎஸ்

இதை எல்லாம் பார்க்கும்போது – கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்த கவிஞர் க.சந்திரகலா எழுதிய தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே

தேளின் கொடுக்கில்

தேன் வரும் என்பான்

தெருக் குழாயில்

பால் வரும் என்பான்

நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே

காலென்று சொல்லி உன்

கையை பிடிப்பான்

காரியம் ஆனதும்

கழுத்தையே நெரிப்பான்

நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே

குடிசைக்குள் கால் வைப்பான்

குழந்தைக்கும் பேர்வைப்பான்

தேர்தல் முடிந்தால் உன்

கூரைக்கு தீ வைப்பான்

நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே

விவசாயி தினக்கூலி

குறை கேட்டு கதறிடுவான்

கும்பிட்டு ஜெயித்து விட்டால் உன்

கோவணத்தை உருவிடுவான்

நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே

கல் வெச்ச மூக்குத்தி

கணிசமான தொகை தருவான்

அவன நம்பி வாக்களிச்சா

தாலிக்கொடி அறுத்திடுவான்

நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே

ஆராய விடாம உனக்கு

சாராயம் தர பார்ப்பான்

ஆகாது நாளை அவன்

ஜனநாயகத்தை கொலை செய்வான்

நம்பாதே அவனை நம்பாதே

நம்பாதே எவனையும் நம்பாதே

தேர்தலென்று வந்து விட்டால்

நீயே தான் எஜமானன்

சபலம் கொண்டு சாயாதே அது

அஞ்சு வருஷத்துக்கு அவமானம்!

நினைவில் வையுங்கள் மக்களே…. இதுபோன்ற வேடதாரிகளை விரட்டியடிப்போம்…