தேர்தல் ஆணையம் இதைச் செய்யுமா?

105

25 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தல்களோடு ஒப்பிடும்போது, வாக்குகளுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுக்கும் கேவலமான விஷயத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், இப்போது நடைபெறும் தேர்தல் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு பரவாயில்லை.

· தனியார் சுவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது.

· சொத்துக்கணக்கு, வழக்குகள் விவரத்தை வேட்புமனுவில் தெரிவிக்க வேண்டும்.

· வேட்பாளர்கள் செலவு வரையறை.

· இரவு 10 மணிக்குமேல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது

· தேர்தல் முடிந்த பிறகு வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்.

போன்ற சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இவற்றில் பல விஷயங்களை யாரும் பின்பற்றுவது இல்லை. அதுபற்றி ஆணையமும் கண்டுகொள்வதில்லை. உதாரணத்துக்கு சொத்து மதிப்பு விவரங்கள்.

உண்மையில் இது எல்லாவற்றையும்விட தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேறுசில கடமைகளும் இருக்கின்றன. அதுதான் முக்கிய கடமை.

அவற்றை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன், அந்தக்கடமைகள் என்ன என்று பார்க்கலாம்.

அரசாங்கத்தின் நிதிஆதாரத்தில் மக்களிடமிருந்து பெறப்படும் வரிகளே முக்கிய பங்காற்றுகின்றன. அரசாங்கம் செய்யும் அத்தனை செலவுகளும் யாருடைய அப்பன்வீட்டு சொத்தும் அல்ல, பல்வேறுவரிகளாக நாம் வாரிக்கொடுத்த பணம்தான். நம்முடைய வியர்வை. நம்முடைய ரத்தம்.

அந்த பணத்தை கொண்டே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

அப்படி நடத்தப்படும் தேர்தல்களிலும் நம்முடைய பணம் விரயமாக்கப்படக் கூடாது அல்லவா?

எல்லா திட்டங்களிலும் மக்களின் பணம் விரயமாக்கப்படுவதைப்போலவே தேர்தல் நடத்துவதிலும் நம்முடைய பணம் நாசமாக்கப்படுகிறது.

பல்வேறு வழிகளில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டாலும் 2 விஷயங்களை மட்டும் முக்கியமாக மட்டும் சுட்டிக்காட்ட நினைக்கிறேன். காரணம் இந்த இரண்டு விஷயங்களை தவிர்த்தாலே கோடிக்கணக்கிலான நம்முடைய வரிப்பணம் விரயம் செய்யப்படுவது தவிர்க்கப்படும். தடுக்கப்படும்.

அது என்ன?

ஒன்று… ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது.

இரண்டு… வேறு ஒரு முக்கிய பதவியில் இருப்பவர். அந்த பதவியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிடுவது.

அதாவது எம்எல்ஏ பதவியில் இருந்து கொண்டே எம்பி பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார். எம்பியாக இருந்து கொண்டே எம்எல்ஏ பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார்.

இந்த இரண்டு விஷயங்களையும் நம் நாட்டின் சட்டமும், விதியும் அனுமதிக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

RPA, 1951 இன் பிரிவு 33 (7) இன் கீழ், ஒரு நபர் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலில் போட்டியிட முடியும், ஆனால் இரண்டிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டால், முடிவு அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அவர் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,
இப்படி ஒரு சட்டம் இருப்பதால்தான் ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது, ஒரு பதவியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிடுவது போன்ற அபத்தங்களும் அயோக்கியத்தனங்களும் தொடர்ந்து நடக்கின்றன.

உடனடியாய் இதை தடை செய்ய வேண்டும்.

கட்சியில் தலைவர்கள் தோல்வி பயத்தில் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிடும் வழக்கம் பலகாலமாகவே இருக்கிறது. இந்திராகாந்தி கூட 2 தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்.

மோடியும் இதற்கு விதிவிலக்கில்லை.

2014 தேர்தலின்போது இந்தியாவின் ரட்சகராக சித்தரிக்கப்பட்ட மோடிக்கே தோல்விபயம் இருந்துள்ளது.

அதனால்தான் 2014 மக்களை தேர்தலில் – வாரணாசி (உபி), வதோதரா (குஜராத்) என 2 தொகுதியில் போட்டியிட்டார் மோடி. வாரணாசியில் மோடியை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டதால் தோல்வி பயத்தில் 2 தொகுதிகள் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வென்றார். கடைசியில் வதோதரா எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

2019 மக்களவை தேர்தலில் – கேரளாவில் உள்ள வயநாடு, உபியில் உள்ள அமேதி என 2 தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல்காந்தி.

அமேதி ராகுல்காந்தியின் தொகுதி. அங்கு நாம் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் நினைத்ததுபோலவே அமேதியில் தோல்வியடைந்தார்.

நம்ம ஊரில் ஜெயலலிதா கூட – 1991 சட்டசபை தேர்தலில் பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி. காங்கேயம் தொகுதியை ராஜானாமா செய்தார். உடனே இடைத்தேர்தல் வந்து ஆர்எம் வீரப்பன் வெற்றிபெற்றார்.

2001 சட்டசபை தேர்தலில் டான்சி கேஸ் காரணமாக ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்கப்படாது என்ற நிலையில், ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி புதுக்கோட்டை என 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் நிக்க முடியாது. அதனால் 4 வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜெயலலிதா போட்டியிட வில்லை. ஆனாலும் முதலமைச்சர் ஆனார். டான்சி நிலத்தை திருப்பிக் கொடுத்து பரிசுத்த ஆவியான பிறகு ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கதமிழ்செல்வனை ராஜினமா செய்ய வைத்து 2002 இடைத்தேர்தலில் – ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதேபோல், 2015 ல் – ஆர்.கே.நகர். எம்எல்ஏ வெற்றிவேலை ராஜினமா செய்ய வைத்து இடைத்தேர்தலில். ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி.

ஒன்றுக்கு மேற்பட்ட தொகுயிர்ல போட்டி என்ற இந்த கேலிக்கூத்தை தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை தவிர மற்ற தலைவர்கள் யாரும் செய்யவில்லை.

பாண்டிச்சேரியில் இப்படியொரு கேலிக்கூத்தை தற்போது அரங்கேற்றியுள்ளார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி – தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

பாண்டிச்சேரியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்க இருப்பது என்ஆர் காங்கிரஸ் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லிவரும்நிலையில் ரங்கசாமிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது ஆச்சர்யம். அல்லது யாராவது ஜோசியக்காரரின் பேச்சைக்கேட்டு 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தாரா என்று தெரியவில்லை.

தோல்வி பயமோ.. ஜோசியக்காரரின் ஆருடமோ… ஒருவேளை 2 தொகுதி களிலும் ரங்கசாமி வெற்றியடைந்தால் நிச்சயம் ஒரு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும். அதைத்தொடர்ந்து அங்கே இடைத்தேர்தல் நடைபெறும். யார் அப்பன் வீட்டுப்பணத்தில் அந்த தேர்தல் நடத்தப்படும்?

மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கும் இந்த செயல்கள் நீடிக்கலாமா?

இரண்டு தொகுதியில் போட்டியிட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் இப்படிப்பட்ட வீணர்கள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம், எம்எல்ஏவாக இருப்பவர் அந்த பதவியில் இருந்து கொண்டே எம்பிக்கான தேர்தலில் போட்டியிடுவது. எம்பியாக இருப்பவர் எம்எல்ஏவுக்கான தேர்தலில் போட்டியிடுவது என்று நம்முடைய பணத்தை வீணடித்து வருகின்றனர். இதுவும் ஒருவகையில் அயோக்கியத்தனம்தான்.

இப்படிப்பட்ட கேலிக்கூத்து தப்போது நடைபெறும் தேர்தலில் அதுவும் தமிழ்நாட்டிலேயே நடக்கிறது.

அதிமுக ராஜ்யசபா எம்பியான கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக ராஜ்யசபா எம்பியான வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே எம்பி பதவி இருக்கும்போது அதைவிட அந்தஸ்துகுறைவான எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடுவது ஏன்?

எம்பி பதவியைவிட எம்எல்ஏ அந்த்ஸ்து குறைவான பதவிதான். ஆனால் ஒருவேளை அதிமுக வெற்றியடைந்தால் அமைச்சராகிவிடலாமே? அந்த கணக்கில்தான் அதிமுகவில் முக்கியபுள்ளிகளாக இருக்கும் வைத்திலிங்கமும் கேபி முனுசாமியும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஏற்கனவே மறைந்த ஹெச். வசந்தகுமார் இதேபாணியில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்திருக்கிறார்.

2006 தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார் வசந்தகுமார். ஆனால் 2014 கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். நல்லவேளையாக தோல்வியடைந்தார்.

பிறகு 2016 தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். ஆனால் 2019 ல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்,
அவர் ராஜினாமா செய்ததால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தனிப்பட்ட ஒரு மனிதரின் பதவி ஆசைக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது.

எம்எல்ஏ எம்பி பதவிக்கு போட்டியிடுவதுபோலவே, எம்பி எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடுவதுபோலவே பஞ்சாய்த்து தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்.. எம்எல்ஏவுக்கு போட்டியிடும் கூத்தும் நடக்கிறது.

ஒரு பதவியில் இருந்து கொண்டே இன்னொரு பதவிக்கு போட்டியிட்டவர் தோல்வியடைந்தால் பிரச்சனையில்லை.

வெற்றியடைந்துவிட்டால், ஏற்கனவே வகித்த பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அங்கு இடைத்தேர்தல் நடக்கும். யார் அப்பன் வீட்டுப்பணம்?

இரண்டு தொகுதியில் போட்டியிட்டவர்- ராகுல்காந்தியைப்போல் – ஒரு தொகுதியில் தோற்றுப்போய்விட்டால் பிரச்சனையில்லை. இரண்டு தொகுதியிலும் ஜெயித்துவிட்டால்? ஒரு தொகுதியின் பதவியை ராஜினமா செய்ய வேண்டும். அங்கம் இடைத்தேர்தல். மக்களின் வரிப்பணம் விரயம்.

தங்களுடைய சுயநலத்துக்காக மக்களின் பணத்தை வீணடிக்கும் இந்தக்கொடுமைகள் காலம்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. சட்டமும் அனுமதிக்கிறது. நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்.
இதை தடுக்க வழியே இல்லையா?

இதை தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக பண்ண முடியாது என்கின்றனர். காரணம் ஏற்கனவே உள்ள விதிகளை தேர்தல் கமிஷனால் நடைமுறைப்படுத்த முடியுமே தவிர தானே புதியவிதிகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

பாராளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும். அப்படி சட்டம் இயற்றினால் அதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றும். ஆனால் தங்களுக்கு பாதகமான இந்த விஷயத் தஎந்த கட்சி சட்டமாக இயற்ற முன் வரும்?

தேர்தல் ஆணையத்தால் முடியுது எனில் உச்சநீதிமன்றம் தலையிட்டு இதுபோன்ற மக்கள்விரோத சட்டத்தை நீக்க முடியாதா?

குறிப்பிட்ட ஒரு விஷயம் சட்டத்துக்கு உட்பட்டதா இல்லையா என்பதை பார்ப்பதுதான் கோர்ட்டின் வேலை. நீதிமன்றம் சட்டத்தை இயற்ற முடியாது என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.

தீர்ப்புகள் திருத்தப்படுகிற காலம் இது.

ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது.

வேறு ஒரு பதவியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிடுவது என்கிற இந்த சட்டம் நிச்சயமாக மக்களின் பணத்தை விரயமாக்கும் மக்கள்விரோத சட்டம்.

இதை உடனடியாக நீக்க வேண்டும்.

இல்லை என்றால் குறைந்தபட்சம், எந்த கட்சியால், எந்த நபரால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிற சூழல் உருலுவாகிறதோ அந்த நபரிடம் அல்லது அந்த கட்சியிடம் தேர்தல் நடத்துவதற்கான மொத்த செலவையும் வலிக்க வகை செய்ய வேண்டும்.

அப்படி செய்தால்மட்டுமே….

ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது.

வேறு ஒரு பதவியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிடுவது என்கிற இந்த அபத்தம்… அயோக்கியத்தனம் இல்லாமல் போகும்.

மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.

இது நடக்கிறதோ இல்லையோ…அதற்கு முன் மக்களாகிய நாம் ஒன்றை செய்ய வேண்டும். இரண்டு தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களையும், ஒரு பதவியில் இருந்துகொண்டே தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களையும் தோல்வியடையச் செய்து அவர்களது பதவி ஆசைக்கு பாடம் புகட்ட வேண்டும்.