கமல் தோல்வி – இனி சினிமா மாயை செல்லுபடியாகுமா?

121

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு, பாஜகவின் அடிமையாக இருந்த அதிமுக அரசுக்கு முடிவுரை எழுதியுள்ளது.

மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி மதவெறியை வளர்க்கும் பாஜக

சாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாமக,

தேர்தல் நேரத்தில் கடைவிரித்து கல்லாகட்டும் தேமுதிக

– போன்ற கட்சிகளுக்கும் தமிழக வாக்காளர்கள் தக்கபாடத்தைப் புகட்டி இருக்கின்றனர்.

23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு 5 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது.

20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. தமிழக பாஜக தலைவர் முருகன், ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்களை மண்ணைக்கவ்வ வைத்துவிட்டனர் தமிழக மக்கள்.

அமமுக கூட்டணியில் 60 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதாவுக்கு டெப்பாசிட் கிடைக்கவில்லை. இவருக்கே டெப்பாசிட் கிடைக்கவில்லை என்றால் மற்றவர்களின் நிலை பற்றி சொல்லணுமா என்ன? இந்த தேர்தலோடு தேமுதிக என்ற கட்சி தமிழக அரசியல் களத்திலிருந்தே காணாமல்போவதை யாராலும் தடுக்க முடியாது.

அரசியலை அசுத்தப்படுத்தும் இதுபோன்ற கட்சிகளுக்கு மரணஅடி கொடுத்தது மட்டுமல்ல இன்னொரு நற்காரியத்தையும் மிகச்சிறப்பாக செய்துமுடித்துள்ளனர் தமிழக வாக்காளப்பெருமக்கள்.

சினிமா புகழை முகமூடியாக, மூலதனமாகக் கொண்டு தேர்தல் களத்துக்கு வந்த பவுடர்முகங்களையும் மண்ணைக்கவ்வ வைத்திருக்கின்றனர்.

இதுதான் இந்த தேர்தல் முடிவிலேயே ஆகச்சிறந்த அம்சம்.

40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் சம்பாதித்த புகழைக் கொண்டு அரசியலிலும் வென்றுவிடலாம் என்ற கனவில் இருந்தார் கமல். அவரது கனவை கலைத்துப் போட்டிருக்கிறது தேர்தல் முடிவு.

அவருடைய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்றாலும், கோவை தெற்கு தொகுதியில் களம் கண்ட கமல், அந்த தொகுதியில் நிச்சயம் வெல்வார் என்ற கணிப்பே நிலவியது. மக்கள் நீதி மய்யம் கட்சி மற்ற தொகுதிகளில் மண்ணைக்கவ்வினாலும் கமல் மட்டும் வெற்றியடைவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின்போதும் கடைசிநிமிடம்வரை கமலின் கை ஓங்கியே இருந்தது. இறுதியில் கமலுக்குக் கிடைத்தது தோல்வி.

கமலைப்போலவே அவரது கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்ற சினிமா பிரபலங்களாள நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகனும் தோல்வியைத்தழுவியுள்ளனர்.

பாஜக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பூவுக்கு கிடைத்ததும் தோல்விதான். தன்னுடைய சினிமாப்புகழை வைத்து ஆயிரம்விளக்கு தொகுதியில் தாமரையை மலரவைக்கலம் என்று நினைத்தார் குஷ்பூ. அவரது எண்ணத்தில் விழுந்தது ஒரு கூடை மண்.

இவர்கள் மட்டுமல்ல, சுயேட்சையாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமியும், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மன்சூரலிகானும் தோல்வியடைந்து உள்ளனர்.

இந்தப்பட்டியலில் உதயநிதி ஸ்டாலினை சேர்க்க முடியாது. அவர் சினிமா நடிகர்தான் என்றாலும் அவரை சினிமாக்காரர் என்ற வட்டத்துக்குள் அடைப்பது அபத்தமாகி விடும். கருணாநிதி என்கிற பாரம்பர்யமிக்க அரசியல்வாதியின் மூன்றாம் தலைமுறை அவர். அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தாலும் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அடையாளமே அவருக்கு வெற்றியை வசப்படுத்திக் கொடுத்திருக்கும்.

சீமானும் ஒருவகையில் சினிமாக்காரர்தான் என்றாலும், அவருக்கு அரசியலில் முகவரியைக் கொடுத்தது சினிமாப்புகழ் அல்ல, சீமானின் சீற்றமும், கொள்கைப் பிரகடனங்களுமே தமிழக அரசியல்களத்தில் அவரை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியது. 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட அவரது கட்சி வெல்லவில்லை என்றாலும், வாக்குவங்கியில் மூன்றாவது கட்சி என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது.

என்னதான் சினிமாவில் சிகரம் தொட்டாலும், அரசியலில் அட்ரஸை தொலைத்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொண்டவர் ரஜினிதான். உங்களை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கிறோம் என்றெல்லாம் அவருக்கு பாஜக பதவி ஆசையைக்காட்டியபோது, ஆரம்பத்தில் அதற்கு தலையாட்டிய அதன் பிறகு உஷராகி ஒதுங்கிக்கொண்டார்.

ரஜினியின் இந்த புத்திசாலித்தனம் கமலிடம் இல்லாமல்போனதுதான், இன்றைய தோல்விக்கு அடிப்படையான காரணம்.

பாஜகவிடம் வெற்றியை பறிகொடுத்துவிட்டாரே என்பதுதான் கமல் மீது நமக்கு எழும் ஏற்படும் பரிதாப உணர்வு.

மற்றபடி கமலுக்கு ஏற்பட்ட தோல்வி கைதட்டி வரவேற்க வேண்டிய ஒரு நிகழ்வுதான்.ஒருவேளை கமல் வெற்றியடைந்திருந்தால் எதிர்காலத்தில் மேலும் பல சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பாக அமைந்திருக்கும்.

இப்போது கமலுக்கு ஏற்பட்ட தோல்வி, எதிர்காலத்தில் அரசியலுக்கு வர திட்டமிட்டிருக்கும் விஜய் போன்றவர்களுக்கு நிச்சயம் அச்சத்தைக் கொடுக்கும். அரசியலுக்கு வந்தால் அசிங்கப்பட நேரும், இதுநாள்வரை சினிமாவில் சேர்த்த பேரும் புகழும் நாறிப்போகும் என்ற பயம் வரும். அதனால் அரசியல் ஆசையை மூட்டைக்கட்டி வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இந்த காரணத்தை வைத்து சொல்வதென்றால் இந்த தேர்தலில் தோற்றதன் மூலம் தமிழ்நாட்டுக்கு நன்மைபயக்க காரணமாகி இருக்கிறார் கமல்.