அடிமை அதிமுக

125

திமுகவிலிருந்து விலகி எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, அந்த கட்சிக்கு அவர் சூட்டிய பெயர் – அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். சுருக்கமாக அதிமுக.

கட்சியின் பெயர் இப்படி இருந்தாலும், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் கீழ் இருந்தபோது கட்சி அதிமுகவாக மட்டும் இல்லை, ஆதிமுகவாகவும் இருந்தது. அதாவது ஆளுமைமிக்கதிமுகவாக இருந்தது.

இன்றைக்கு ஓபிஎஸ், எடப்பாடி கூட்டுத்தலைமையில் இயங்கும் அதிமுக, ஆளுமைமிக்கதிமுகவாக இல்லை. மாறாக அடிமைஅதிமுகவாகிவிட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவி ஏற்ற ஓபிஎஸ், சசிகலாவின் அடிமையாக இருந்தார்.

அதன் பிறகு முதல்வர் பதவியில் உட்கார்ந்த எடப்பாடியோ… பாஜகவின் அடிமையாகவே தன்னுடைய பதவிக்காலத்தை கழித்தார்.

சொல்லப்போனால், சேலம் எட்டுவழிச்சாலை உட்பட பாஜகவின் பல்வேறு அஜண்டாவை தமிழ்நாட்டில் நிறைவேற்ற நியமிக்கப்பட்ட ஒரு ஏஜன்டாகவே இருந்தார் எடப்பாடி.

அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களும், அவர்கள் சேர்த்த சொத்துக்களின் பட்டியலும் பாஜக கையில் இருந்தன. அதனாலோ என்னவோ அவர்களை பகைத்துக்கொண்டால் என்னாவது என்ற பயம் அவர்களை பாஜகவின் அடிமையாக மாற்றி வைத்திருந்தது.
இந்த பயம்தான்… அதிமுகவையே பாஜகவிடம் அடகுவைக்கும் நிலைக்கு எடப்பாடியை தள்ளியது.

யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை வெடித்து, ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் மோதிக்கொண்டனர். பிறகு உடன்பாடு ஏற்பட்டு, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டநிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் தீர்மானிக்கும் என்று சொன்னார் தமிழக பாஜக தலைவர் முருகன்.

இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு ஒட்டுண்ணி தான் பாஜக.

1996 – சட்டமன்ற தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக வெற்றியடைந் திருந்தாலும், அந்த வெற்றி என்பது சி. வேலாயுதனின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைத்த வெற்றி.

உண்மையில் பாஜக என்ற கட்சியை தமிழக மக்களிடம் பரிச்சயப்படுத்தியதே அதிமுகதான். 1998 – மக்களவை தேர்தலில் பாஜகவை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக்கொண்டு –நீலகிரி, திருச்சி, கோவை தொகுதிகளில் வெற்றியடைய வைத்து 3 எம்.பி.க்கள் கிடைப்பதற்கு காரணமே அதிமுக தான்.

அதன் பிறகு 2001ல் நடைபெற்ற – சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூர், தளி தொகுதிகளில் வெற்றியடைந்தது பாஜக.

அதன் பிறகு சட்டசபையில் அயெடுத்து வைக்கும் பாக்கியமே பாஜகவுக்குக் கிடைக்கவில்லை.

20 வருடங்களுக்குப் பிறகு அதிமுகவின் புண்ணியத்தில் அவர்கள் போட்ட பிச்சையில் மீண்டும் 4 பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்ல இருக்கின்றனர்.

பாஜகவினரின் பாஷையில் சொல்வது என்றால் தமிழகத்தில் தாமரையை மலர வைத்தவர்களே அதிமுகவினர். அவர்கள் அளித்த வாக்குகளினால்தான் பாஜகவுக்கு இன்றைக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அல்லது அதிமுக கூட்டணி இல்லை என்றால் பாஜகவினால் டெப்பாசிட் கூட வாங்க முடியாது என்பதே யதார்த்தம்.

இதை எல்லாம் பாஜகவினர் நினைத்துப்பார்க்காமல் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று சொல்கிறார்கள். இந்த உரிமையை இவர்களுக்குக் கொடுத்தது யார்?

இப்படி ஒரு கருத்தை அதே கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேறு கட்சியின் தலைவர் சொல்லி இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி இப்படி ஊமைச்சாமியாக இருந்திருப்பாரா?

ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று முருகன் சொன்னதற்கு எடப்பாடி வாய் திறக்கவில்லை. எடப்பாடி மட்டுமல்ல ஓபிஎஸ் உள்ளிட்ட மற்ற அடிமைகளும் கூட வாயைத்திறக்கவே இல்லை.

இந்தப்பிரச்சனையில் எடப்பாடியும் அவரது சகாக்களும் சவத்தைப்போல் இருந்ததற்கு ஒரே காரணம்…அவர்கள் மீதான ஊழல்பட்டியல். எவ்வளவு அவமானப்பட்டாலும் பரவாயில்லை… நம்முடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணி அடங்கிக்கிடந்தனர்.

இதோ இப்போது தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சியைப்பிடித்துவிட்டது.

ஆட்சியை இழந்த அதிமுக 66 இடங்களில் மட்டும் வெற்றியடைந்து எதிர்க் கட்சியாகி இருக்கிறது.

எதிர்க்கட்சித்தலைவர் ஓபிஎஸ்ஸா? இபிஎஸ்ஸா? என்ற விவாதம் நடந்துவரும் நிலையில், பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் எதிர்கட்சித்தலைவர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார்.

அதிமுகவிடம் ஒட்டிக்கொண்டு 4 இடங்களில் வென்றுள்ள ஒட்டுண்ணியான பாஜக, 66 இடங்களில் வென்ற அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர் யார் என்பதை முடிவு செய்யுமாம்.

என்ன கொடுமை பாருங்கள்?

முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என்று முருகன் சொன்னபோது எப்படி வாயை மூடிக்கொண்டிருந்தார்களோ அதேபோன்று எதிர்கட்சித்தலைவரை பாஜக தலைமை முடிவு செய்யும் என்று வானதி சொல்லும்போது அதிமுக தலைமை அமைதியாக இருக்கிறது.

எங்கள் கட்சிவிவகாரத்தில் தலையிட நீங்கள் யார் என்று கேட்கக்கூட தைரியமற்ற திராணியற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஆட்சியில் இருந்தபோதுதான் பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அமைதியாக இருந்தார்கள். அடிமையாக இருந்தார்கள்.

இன்றைக்கு அதிமுக ஆட்சியில் இல்லை.

இன்னமும் அமைதி ஏன்?