இயக்குநர் ஷங்கர், ரன்வீர் சிங் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள ‘அந்நியன்’

4

இந்திய சினிமாவின் பெரும் பிரபலங்கள், தென்னிந்திய திரை ஆளுமை இயக்குநர் ஷங்கர் மற்றும் பாலிவுட் நட்சத்திர நாயகன் ரன்வீர் சிங் ஆகிய இருவரும் பன்மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் இணையவுள்ளார்கள்.

தமிழில் பெரு வெற்றி பெற்ற கல்ட் கிளாசிக் திரைப்படமான ‘அந்நியன்’ திரைப்படம் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ளது.

இப்பெரும் ஆளுமைகளை இணைத்து படத்தினை Pen Studios சார்பில் தயாரிக்கிறார் Dr.ஜெயந்திலால் காடா.

இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில் மிகப்பிரமாண்டமான இயக்குநர், நட்சத்திர நடிகர் கூட்டணி இது தான்.

இயக்குநர் ஷங்கர் தன் பிரமாண்ட கற்பனைகளை ,திரையில் கொண்டுவந்து, தமிழ் திரையை, வணிகத்தை உலக அளவில் எடுத்து சென்றததற்காக கொண்டாடப்படுபவர்.

நடிகர் ரன்வீர் தன் திரை வரலாற்றில் கமர்ஷியல் மட்டுமல்லாது பல அட்டகாசமான படங்கள் மூலம் தன் நடிப்பு திறமையை நிரூபித்து பல அற்புத படங்கள் தந்தவர். இவ்விருவரும் மிகச்சிறந்த ஒரு படத்தின் மீளுருவாக்கத்தில் இணைகிறார்கள்.

இயக்குநர் ஷங்கர் தன் திரைவரலாற்றில் மிகப்பெரும் வெற்றியை தந்த ‘அந்நியன்’ படத்தினை ரன்வீர் நடிப்பில் மீளுருவாக்கம் செய்கிறார். இப்படம் இந்திய திரை உலகம் கண்டிராத மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ளது.

இந்த அதிரடியான ஆச்சர்ய அறிவிப்பு வட இந்தியாவில் பைசாகி விழா நாளிலும், தமிழில் புத்தாண்டு விழா நாளிலுமாக, இரு இடங்களிலும் புதுவருட கொண்டாட்ட தினத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. God Bless Entertainment நிறுவனம் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் இசை Saregama வில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஷங்கர்…

இந்தி மொழியில் “அந்நியன்” படம் உருவாக மிகச்சிறந்த நடிப்புதிறன் கொண்ட, திரையினில் ரசிகர்களை கட்டிப்போடும் திறன் கொண்ட வசீகரம் மிக்க நடிகர் வேண்டும். அந்த வகையில் ரன்வீர் சிங் இன்றைய தலைமுறையின் இணையற்ற நடிகராக, தன் நடிப்பு திறனால் எக்காலத்திலும் அழியாத பாத்திரங்களால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து இந்தியாவெங்கும் உள்ள ரசிகர்களுக்காக “அந்நியன்” படத்தை மீளுருவாக்கம் செய்வது மிக மகிழ்ச்சி. தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற இந்த அழுத்தமிகு கதை, இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவரும் எனும் நம்பிக்கை உள்ளது.

ரன்வீரும் நானும் இப்படத்தினை இந்தி மொழியின் ரசிகர்களுக்காக, அந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாராக கதையினை மாற்றம் செய்து, மீளுருவாக்கம் செய்யும், எங்கள் கனவினை புரிந்து கொள்ளும் அற்புத தயாரிப்பாளராக Dr. காடா பெற்றிருக்கிறோம். எல்லா வகையிலும் மிகச்சிறந்த படைப்பாக இப்படம் வெளிவரும்.

நடிகர் ரன்வீர் சிங்…

இயக்குநர் ஷங்கரின் அற்புதமான கற்பனையில் உருவாகும் படைப்பில் வாய்ப்பு கிடைத்ததை பெரும் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். நாம் நினைத்து பார்த்திராத பல அரிய சாதனைகளை திரையில் நிகழ்த்தி காட்டியவர் அவர். என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து படம் செய்வேண்டுமென்பது எனது கனவு. இப்படம் ஒரு பெரிய மேஜிக்கை நிகழ்த்துமென உறுதியாக நம்புகிறேன்.

‘அந்நியன்’ போன்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது, எந்த ஒரு நடிகருக்குமே பெரிய வரமாகும். இந்திய சினிமாவில் நான் மிகவும் மதிக்கக்கூடிய ஆளுமையான நடிகர் விக்ரம் அவர்கள் எவராலும் நிகழ்த்த முடியாத, மிகச்சிறந்த நடிப்பை இப்படத்தில் தந்திருந்தார்.

அவரை போல் நடிப்பது கடினம். வாழ்வில் கிடைத்திராத அரிய கதாப்பாத்திரம் இது . என் முழு உழைப்பையும் தந்து இந்த கதாபாத்திரத்தில் ரசிகர்களுடன் இணையும் மேஜிக்கை நிகழ்த்துவேன் என நம்புகிறேன். இயக்குநர் ஷங்கர் அவர்கள் ஒரு வரலாற்று ஆளுமை அவருடன் பணிபுரிவதை, மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்.

Pen Studios சார்பில் தயாரிப்பாளர் Dr. ஜெயந்திலால் காடா…

இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் ரன்வீர் இருவரும் ஒரு படத்தில் இணைவது இந்திய திரையுலகின் மிகப்பெரும் திரை நிகழ்வு. Pen Studios மூலம் இந்த இருவரது கூட்டணியில் ஒரு படத்தினை தயாரிப்பது மற்றும் உலகளவில் விநியோகம் செய்யவுள்ளது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி.

இவர்களது கூட்டணி இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும். இப்படத்தின் அறிவிப்பு, வட இந்தியாவில் பைசாகி விழா நாளிலும் தமிழில் புத்தாண்டு விழா நாளிலுமாக, இரு இடங்களிலும் புதுவருட கொண்டாட்ட தினத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இயக்குநர் ஷங்கர் மற்றும் ரன்வீர் கூட்டணி இந்திய அளவில் மிகப்பிரமாண்ட வெற்றியை தரவுள்ளதையே குறிக்கிறது.