‘தபாஹி’ பாடலின் வரவேற்பைத் தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தடுமாறுதே’ வெளியாகியுள்ளது.
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா நடித்துள்ள இந்தப் பாடல், திரைப்படத்தில் வரும் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரங்களின் உறவை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது. முதல் பாடலான ‘தபாஹி’ தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில், ‘தடுமாறுதே’ காதலின் மென்மை, ஏக்கம் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை இசையின் மூலம் சித்தரிக்கிறது.
பாடலில் யாஷ் மற்றும் தாரா சுதாரியாவின் திரைவேதியியல் (Chemistry) புதிய கோணத்தில் வெளிப்படுகிறது. வெளிப்படையாக மகிழ்ச்சியான தருணங்கள் காணப்பட்டாலும், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் ஏக்கமும், மனக்குழப்பமும் கதாபாத்திரங்களுக்கு மேலும் ஆழம் சேர்க்கிறது.
இந்தப் பாடலுக்கு தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடலை சித்தார்த் பஸ்ரூர் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் ‘மதோஷ்’ (இந்தி), ‘மனமோஹகா’ (கன்னடம்), ‘மனசகதே’ (தெலுங்கு), ‘தடுமாறுதே’ (தமிழ்), ‘மதுமோஹினி’ (மலையாளம்) ஆகிய பெயர்களில் வெளியாகியுள்ளது. தமிழ் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி கூறுகையில், “‘தடுமாறுதே’ எங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். ராயா மற்றும் ரெபெக்காவின் உணர்வுப்பூர்வமான பயணத்தை இந்தப் பாடல் அழகாக பிரதிபலிக்கிறது. காதல், ஏக்கம் மற்றும் உணர்ச்சிகளின் பல அடுக்குகளை ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.
பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் கூறுகையில், “‘தடுமாறுதே’ என்பது பிரிவு அல்லது ஏமாற்றத்தைப் பற்றிய பாடல் மட்டுமல்ல; சொல்லப்படாத உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல். அதன் மென்மையும், படிப்படியாக அதிகரிக்கும் தீவிரமும் இந்தப் பாடலை மிகவும் சிறப்பாக்குகின்றன,” என்று தெரிவித்தார்.
யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ளனர்.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.