தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்கள், வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் எல்லைகளைக் கடக்கும் கற்பனை ஆகியவற்றை மையமாகக் கொண்டு தனித்துவமான திரைப்படங்களை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என ஆர்.டி. ராஜா தெரிவித்துள்ளார்.
33 ஆண்டுகளாக கலை இயக்குநராக பணியாற்றி வரும் டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம், மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான காட்சியமைப்பு முறைகளின் இணைப்பில் உருவாகி வருகிறது.
டி. முத்துராஜுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக பல்வேறு தளங்களில் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆர்.டி. ராஜா, அவரது புதிய முயற்சிக்கு தனது மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
‘மந்திரா ஸ்டுடியோஸ்’ வெறும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக இல்லாமல், புதிய சிந்தனைகள் மற்றும் புதுமையான படைப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் தளமாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை சாத்தியமில்லை எனக் கருதப்பட்ட முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து, ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டி. முத்துராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படம் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.