‘கருடன்’, ‘மாமன்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட புதிய கதைக்களத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்குகிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் ஆழமான பாசத்தையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும், உறவுகளின் மதிப்பையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை கே. குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவை முன்னணி ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கணேஷ் சிவா கவனிக்கிறார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகும் இந்த திரைப்படம், தரமான குடும்பப் படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக தொடங்கப்பட உள்ளது. கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் வலிமையால், இந்த திரைப்படம் தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மதுரை மண்ணின் இயல்பான வாழ்க்கை முறையையும், அப்பா – மகன் உறவின் உணர்வுபூர்வமான தருணங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யவுள்ள இந்த திரைப்படம், நடிகர் ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.