தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா நடைபெற்றது. R Take Studios மற்றும் Wunderbar Films இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு “ஓம்: சேப்டர் 1” என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
விழாவில் பேசியவர்கள்…
Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ்
“இந்த திரைப்படம் என் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகும். R Take Studios நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தமிழில் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம். மேலும் பல வெற்றிகரமான கூட்டணிகளுக்கு இந்தப் படம் தொடக்கமாக அமையும் என நம்புகிறேன்.
இது ரசிகர்கள் எதிர்பார்த்த பழைய பாணியிலான தனுஷின் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும். டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். வரும் அக்டோபர் 16 அன்று அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்கிறோம்.”
R Take Studios சார்பில் ஷ்ரத்தா
“ராஜ்குமார் , தனுஷ் மற்றும் முழு படக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அக்டோபர் 16-ஆம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்த திரைப்படம் அனைவரையும் மகிழ்விக்கும்.”
R Take Studios சார்பில் அஸ்மத்
“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு பெருமை. எங்களை இந்தப் பயணத்தில் இணைத்த ராஜ்குமாருக்கு நன்றி. எங்களால் முடிந்த முழு அர்ப்பணிப்பையும் இந்தப் படைப்பிற்கு வழங்குவோம்.”
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
“‘ஓம்’ என்ற தலைப்புடன் இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. தலைப்பு தேர்வு முதல் முதல் கட்ட படப்பிடிப்பு வரை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் இணைந்துள்ள ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் இந்தப் படத்தை மிகவும் சிறப்பான ஒன்றாக மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
தனுஷ் , மம்முட்டி , சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். மிகப்பெரிய தொழில்நுட்பக் குழுவும் இப்படத்தில் பணியாற்றி வருகிறது.
இன்று வெளியிடப்பட்டிருப்பது வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோ அல்ல. தனுஷ் சார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி. அடுத்த சில வாரங்களிலும், மாதங்களிலும் டீசர், கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகும்.
படத்திற்கு ‘ஓம்: சேப்டர் 1’ என பெயரிட்டுள்ளோம். இது வெறும் ஆன்மீகத் தலைப்பு அல்ல; பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பு. அதன் முழு பொருள் படம் வெளியாகும்போது ரசிகர்களுக்குப் புரியும்.”
Divo Music சார்பில் விஷு
“இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு பெருமை. தனுஷ் நடித்த திரைப்படத்துடன் இணைவது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவம். ‘அமரன்’ வெற்றிக்குப் பிறகு உருவாகும் இந்த கூட்டணியில் இணைந்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. ‘ஓம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.”
Warner Music Group India சார்பில் ஜே மேத்தா
“இந்தத் திரைப்படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே இந்தக் குழுவுடன் பயணிக்கிறோம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு அசாதாரண திறமைசாலி. தனுஷ் உலக அளவில் தனது திறமையை நிரூபித்துள்ள கலைஞர். சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்முட்டி உள்ளிட்ட வலுவான நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகும் இந்தப் படம், இந்திய அளவில் மட்டுமல்ல உலகளாவிய அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.”
பிரமாண்ட நட்சத்திரக் கூட்டணி
இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற ராஜ்குமார் பெரியசாமி, இந்த முறை ஆக்சன் திரில்லரை ரசிகர்களுக்காக உருவாக்கி வருகிறார். தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி முதல் முறையாக இணையும் இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு இளம் தலைமுறையின் கவனம் பெற்ற இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
“ஓம்: சேப்டர் 1” என்ற தலைப்பின் அறிவிப்புடன், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் டீசர் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி, மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோரின் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் “ஓம்: சேப்டர் 1” திரைப்படம், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.