துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ டிரெய்லர் வெளியீடு

மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐ ஆம் கேம்’ (I’m Game) திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த பான்-இந்தியா திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி திரில்லர், துல்கர் சல்மானின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது. ‘RDX’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை, துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

திரைக்கதையை சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் எழுதியுள்ளனர். வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

வெளியாகியுள்ள டிரெய்லர், தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கண்கவர் காட்சியமைப்புகள், ஆக்ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அளவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் தோன்றுவது டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் வழங்கியுள்ள பின்னணி இசை டிரெய்லருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான காட்சியமைப்புகளும், அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்த அதிரடியான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

‘லோகா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’, பான்-இந்தியா திரைப்படமாக ஆகஸ்ட் 20 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் குழு

  • தயாரிப்பு: Wayfarer Films
  • தயாரிப்பாளர்கள்: துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ்
  • இயக்கம்: நஹாஸ் ஹிதாயத்
  • திரைக்கதை: சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து
  • வசனம்: சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத்
  • ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
  • இசை: ஜேக்ஸ் பிஜாய்
Dulquer Salmaan's I Am Game Trailer Out - News
Comments (0)
Add Comment