‘சின்ன சின்ன ஆசை’ ஜூன் 19 முதல் திரையரங்குகளில்…

பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில், வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது.

காசி நகரின் பின்னணியில், எதிர்பாராத விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் உணர்வுகள், உறவுகள் மற்றும் வாழ்க்கையின் நுண்ணிய தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு மனதை வருடும் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபீல்-குட் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’யில், இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரங்களில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடித்திருக்கின்றனர். அதேபோல், அபர்ணா பாலமுரளி அற்புதமான ஒரு கதாபாத்திரத்திலும், தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட் சுவாரஸ்யமான வேடங்களிலும் தோன்றுகின்றனர்.

இப்படத்திற்கு ‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆறு இனிமையான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை சாபு மோகன், உடை வடிவமைப்பை சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பை ரெங்கநாத் ரவி, ஒப்பனையை ரஞ்சித் அம்பாடி மேற்கொண்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம், தணிக்கைக் குழுவினரிடமிருந்து ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

திரைப்படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், “ஒவ்வொரு மனிதரின் மனதிலும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் இருக்கின்றன. அந்த நுண்ணிய உணர்வுகளின் அழகை அதன் இயல்பும் உண்மையும் மாறாமல் திரையில் பதிவு செய்யும் முயற்சிதான் ‘சின்ன சின்ன ஆசை’. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து ரசிக்கும் வகையில் கதையும், கதாபாத்திரங்களும், தொழில்நுட்ப அம்சங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தனர்.

 

மனதை வருடும் கதைக்களம், திறமையான நட்சத்திர பட்டாளம் மற்றும் உணர்வுகளை இசையால் உயிர்ப்பிக்கும் கோவிந்த் வசந்தாவின் இசை ஆகியவற்றால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’, வரும் ஜூன் 19ஆம் தேதி ரசிகர்களை சந்திக்க தயாராக உள்ளது.

‘Chinna Chinna Aasaay’ in theaters from June 19thசின்ன சின்ன ஆசை
Comments (0)
Add Comment