ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’

0

தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival – SIFF 2026)-வில் திரையிடப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த விழாவில், இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏழு திரைப்படங்களில் தென்னிந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருப்பது, படக்குழுவிற்கும் தமிழ்த் திரைப்பட உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

‘காளிதாஸ்’ மற்றும் ‘காளிதாஸ் 2’ ஆகிய இரு பாகங்களையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். நடிகர் பரத் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கூடுதல் திரைக்கதையை அரவிந்த் ஆனந்த் எழுதியுள்ளார்.

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான ‘காளிதாஸ் 2’, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று, தரமான திரில்லர் திரைப்படமாக தனது முத்திரையைப் பதித்தது.

தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது, ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் கலைநயம், தொழில்நுட்பத் தரம் மற்றும் உலகளாவிய திரையரங்கு மொழியில் அதன் வலிமையை அங்கீகரிக்கும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம், தமிழ் சினிமாவின் உலகளாவிய பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், தரமான தமிழ் திரைப்படங்களுக்கு சர்வதேச அரங்கில் கிடைத்து வரும் மதிப்பிற்கும் மற்றுமொரு சான்றாக திகழ்கிறது.