ஆகஸ்டில் திரைக்கு வரும் ‘ஃபீல் மை லவ்’

1

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love) திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் திரைப்படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் திரைப்படமாக ‘ஃபீல் மை லவ்’ உருவாகியுள்ளது.

இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் மதுசூதனன் ராவ் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஒளிப்பதிவாளர் எம்.எஸ். சதீஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர்கள் ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இணைந்து இசையமைத்துள்ள நிலையில், ‘LOVE’, ‘கொலை சேவல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ள ஹரி பிரகாஷ் எம், “வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மனதைத் தொடும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, காதல், நகைச்சுவை, இயல்பான மனித உறவுகள், ஆழமான உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

திரைப்படத்தின் இதமான கதைக்களமும், விறுவிறுப்பான திரைக்கதையும், இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் சமமாக கவரும் என்ற நம்பிக்கையை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மூனாரின் அழகிய மலைப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ‘ஃபீல் மை லவ்’, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடையும் வகையில் தயாராகி வருகிறது.

இதனிடையே, திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.