வண்ணமயமான கொண்டாட்ட போஸ்டருடன் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!**
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், 2026 ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வண்ணமயமான புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய போஸ்டரில், மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட சூழல் நிரம்பியிருப்பது, படத்தின் ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தன்மையையும், உறவுகளின் மகிழ்ச்சியையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக் (NEEK)’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற இதயப்பூர்வமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு மனதை வருடும் குடும்பப் படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross-Cultural Love Story ஆக உருவாகியுள்ளது. வடசென்னையின் நடுத்தர குடும்ப வாழ்க்கை, காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளின் அழகை உணர்வுபூர்வமாகச் சொல்லும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ திரைப்படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.
வெளியான ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் ‘அன்பே டயானா’, காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை இணைத்த முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. வண்ணமயமான வெளியீட்டு போஸ்டருடன் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ள இப்படம், ஜூலை 17, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குடும்ப ரசிகர்களின் மனதை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.