‘பிச்சைக்காரன்’ கூட்டணி மீண்டும் இணைந்த ‘நூறு சாமி’

0

‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் சசி – நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம், உலகம் முழுவதும் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற பிரம்மாண்ட பிரீ-ரிலீஸ் விழா, சென்னை கமலா திரையரங்கில் திரையுலக முன்னணி இயக்குநர்கள் மற்றும் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தை மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார். இயக்குநர் சசி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.பி. தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, புதிய இசையமைப்பாளராக பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், ஏ.ஆர். முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், ராஜூ முருகன், நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட முன்னணி படைப்பாளிகள் பங்கேற்று, படத்தையும் இயக்குநர் சசியையும் மனதார பாராட்டினர்.

இந்நிகழ்வில் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராம் அவர்களை, இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ்.எஸ். குமரன், சிமோன், சித்து குமார் ஆகியோர் இணைந்து மேடையில் அறிமுகப்படுத்தி வாழ்த்தினர்.

படத்தை பார்த்து பேசிய சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், ‘நூறு சாமி’ திரைப்படம் பெண்களின் வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய முக்கியமான கருத்துகளை உணர்வுபூர்வமாகவும், வணிக அம்சங்களுடன் இணைத்தும் சொல்லும் சிறந்த படைப்பு என பாராட்டினர்.

இயக்குநர் வெற்றிமாறன், “இது அனுபவமிக்க இயக்குநரின் படைப்பு போல அல்ல; புதிய இயக்குநரின் புத்துணர்ச்சியுடன் உருவான திரைப்படம். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்” என்று பாராட்டினார்.

பா. ரஞ்சித், “இந்தப் படம் பல இடங்களில் என்னை உணர்வுபூர்வமாக இணைத்தது. சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய கருத்துகளை எளிமையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் சசி” என்றார்.

ஏ.ஆர். முருகதாஸ், “இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வலிமையான திரைப்படம். சுவாசிகாவின் நடிப்பு தேசிய விருதுக்குரியது. பெண்களைப் பற்றிய முக்கியமான பார்வையை இப்படம் பதிவு செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

மிஷ்கின், “சசி ஒரு இயக்குநர் மட்டுமல்ல, மனிதநேயத்தின் அடையாளம். சமூகத்தில் பெண்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை பேசும் முக்கியமான திரைப்படம் இது” என்று தெரிவித்தார்.

ராஜூ முருகன், “ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படமும், பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படமும் இதுதான். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதை உலுக்கும் ஒரு திரைப்படம்” என்று பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சசி, “‘பிச்சைக்காரன்’ படத்தில் தாயை தெய்வமாக பார்த்த மகனைச் சொன்னேன். ‘நூறு சாமி’யில் தாயை ஒரு மனிதராக பார்க்கும் மகனின் கதையைச் சொல்கிறேன். இந்தப் படம் பார்த்த பிறகு ஒவ்வொருவரும் தங்களது அம்மாவை ஒரு மனிதராக புரிந்துகொள்வார்கள்” என்றார்.

நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி, “‘நூறு சாமி’ என் திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. இந்தப் படம் ரசிகர்களை ஒருபோதும் ஏமாற்றாது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உணர்வுகளும், சமூக அக்கறையும், வணிக அம்சங்களும் இணைந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘நூறு சாமி’, ஜூன் 19 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.