கல்விக்கொள்ளைக்கு எதிராக ‘எய்தவன்’ தொடுக்கும் யுத்தம்

1484

வெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களால் மக்களுக்கு எவ்வித பிரயோஜனமுமில்லை.

ஒவ்வொரு திரைப்படமும் அது உருவாகிற பிரதேசத்தின் வாழ்வியலை பிரதிபலிக்க வேண்டும்.

மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டும்.

இந்த வகையான படங்களே பல நேரங்களில் மக்களிடம் பாராட்டையும், வரவேற்பையும் பெறுகின்றன.

கலையரசன் – சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘எய்தவன்’ படத்தை இந்த வரிசையில் வகைப்படுத்தலாம்.

மதயானைக்கூட்டம் விக்ரம் சுகுமாரனிடம் உதவியாளராக பணியாற்றிய சக்தி ராஜசேகரன் இப்படத்தை  இயக்கியுள்ளார்.

ஆடுகளம் நரேன், வேல. ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், சான்ட்ரா ஆகியோர் நடித்துள்ள எய்தவன் படத்துக்கு பார்தவ் பார்கோ இசையமைத்துள்ளார்.

பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எய்தவன் படம் குறித்து இயக்குனர் சக்தி ராஜசேகரன் என்ன சொல்கிறார்?

“இன்றைய சூழ்நிலையில் கல்வி என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

கல்வியால் பாதிக்கப்படுவர்களை மையப்படுத்திய உருவாகியுள்ள படம்தான் ‘எய்தவன்’.

கல்வி தொடர்பாக சமகாலத்தில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றனவோ… அத்தனை விஷயங்களையும் இந்தப் படத்தில்  சுட்டிக்காட்டியுள்ளேன்.

கல்விக்கூடங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளைகள் தொடங்கி, கல்வியை சுத்தப்படுத்த வேண்டிய அவசியத்தையும்  உரக்கச்சொல்லி இருக்கிறேன்.

இந்தப்படத்தில் கலையரசன், சாத்னா டைட்டஸ் உட்பட மொத்தம் 16 கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த 16 கதாபாத்திரங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்கும்படி திரைக்கதையை அமைத்துள்ளோம்.

கலையரசன் இதுவரை  நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும், ஹீரோவாக இந்த படம் அவருக்கு பேசக்கூடியதாக அமையும்.

அந்தளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பானதாக அமைந்துள்ளது.

மக்கள் பிரச்சனையைப் பேசுகிற படமாக இருந்தாலும், இதை மக்கள் ரசிக்க வேண்டுமே? அதனால்தான் ஜனரஞ்சகமாக எய்தவன் படத்தை எடுத்திருக்கிறோம். படத்தில் காமெடி உண்டு. 4 பாடல்களும்  இடம்பெற்றுள்ளன.”

மே 5 ஆம் தேதி அன்று எய்தவன் திரைக்கு வருகிறது.