ஆதரவற்ற நிலையில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் !

868

நாடெங்கும் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளரான திருமதி. ராஜம் கிருஷ்ணன் தந்தி வேருக்கு நீர்  என்ற நாவலுக்காக 1973இல் சாகித்ய  அகடெமி விருது பெற்றவர். இவரது உத்தரகாண்டம், கரிப்புமணிகள் போன்ற நாவல்கள் பெரிதும் பேசப்பட்டவை. ஏராளமான சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.  சிறந்த சிறுகதைக்கான நியூயார்க் ஹெரால்ட் ட்ரிபியூன் விருதை 1950இல் பெற்று உலகின் கவனத்தை ஈர்த்தார்.

எண்ணற்ற தமிழ் படைப்புகளுக்கும் புகழுக்கும் உரித்தான திருமதி.ராஜம் கிருஷ்ணன் அவர்களின் இப்போதைய நிலை மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகும்.  கவனிக்கக் கூட ஆளில்லாமல் ஆதரவற்ற நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக  சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் ஏழைகளுக்கான இலவசப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார், இப்போது இவருக்கு வயது 87. இப்போதும் நல்ல நினைவாற்றலுடனும் பேச்சுத் திறனுடனும் இருக்கும் இவர் எழுந்து நடமாட முடியாத நிலையில் மருத்துவமனையின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.

சந்திக்கக் கூட ஆளற்ற நிலையில் கண்ணீரும் வேதனையும் முதுமையும் தனிமையுமாக தன இறுதி நாட்களை கழித்து வரும் ராஜம் கிருஷ்ணன் அவர்களை பேணி அவருக்கு உரிய உதவிகளை செய்து தரும்படி தமிழக முதல்வர் அவர்களை இந்திய கலாசார நட்புறவுக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தமிழக முதல்வருக்கு இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளரும், பத்திரிகையாளருமான ரதன் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.