விஜய்யின் ‘மாஸ்டர்’ பிளான் கை கொடுக்குமா? காலை வாருமா?

2138

முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரித்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை நீண்டநெடுங்காலமாகவே நிலவி வருகிறது. இது அண்மை ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பொய்யாகிக் கொண்டிருக்கிறது.

டாப் 10 ல் இருக்கும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் இன்றைக்கு இருக்குமிடம் தெரியவில்லை. இதைவைத்தே, முன்னணி ஹீரோக்களின் படங்கள், அப்படங்களைத் தயாரித்தவர்களுக்கு லாபத்தை அள்ளித்தரவில்லை என்பதையும், மாறாக அவர்களை நஷ்டம் என்ற பாதாளத்தில் தள்ளிவிட்டிருப்பதையும் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களையும் பதம்பார்த்துவிட்டது என்பதையும் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளின் பரபரப்புச் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அஜித் நடித்த விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் படநிறுவனத்துக்கு சுமார் 25 கோடிக்குமேல் நஷ்டம் ஏற்பட்டது. எனவேதான் உடனடியாய் அதேநிறுவனத்துக்கு விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொடுத்து தன்னால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டினார் அஜித்.

அதே சத்யஜோதி பிலிம்ஸ் படநிறுவனம் தனுஷை வைத்து தயாரித்த தொடரி என்ற படமும் பல கோடிகளை காலிபண்ணியது. நஷ்டத்திலிருந்த தயாரிப்பாளருக்கு நிவாரணம் செய்யும் பொருட்டே அடுத்து பட்டாஸ் உட்பட 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் தனுஷ். அதுமட்டுமல்ல, தொடர்ந்து தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் பேனரில் நடித்து வந்த தனுஷ், ஒருகட்டத்தில் அந்த படநிறுவனத்தையே மூடிவிட்டார். காரணம்…நஷ்டம்.

சிம்பு நடித்த ஏஏஏ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கு சுமார் 15 கோடிக்கு மேல் நஷ்டம். மற்ற ஹீரோக்களைப்போல், நஷ்டப்பட்ட தயாரிப்பாளருக்கு கை கொடுக்க முன்வரவில்லை சிம்பு. தன்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்ற உண்மையையே அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்.
விஷால் நடித்த ஆக்ஷன் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட 15 கோடி நஷ்டத்தை ஈடுகட்டும்வகையில் அதே தயாரிப்பாளருக்கு கால்ஷீட் தருவதாக உறுதியளித்திருக்கிறார் விஷால்.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா, அப்படங்களின் தோல்விக்குப் பிறகு எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் சமீபத்திய படமான ‘ஹீரோ’ படத்தை தயாரித்த படநிறுவனத்துக்கும் மிகப்பெரிய நஷ்டம்தான். எனவே அடுத்தடுத்து தான் நடிக்கும் மூன்று படங்களை அந்நிறுவனத்துக்கே கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

விஜய்சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் வெற்றிப்படத்தை விரல் விடாமலே எண்ணிவிடுமளவுக்குத்தான் இருக்கிறது அவருடைய சக்சஸ் ரேட்டிங். அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் எல்லாம் ஒரேபடத்தோடு தொலைந்துபோவதை வைத்தே இதை நாம் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு சூர்யாவும் விதிவிலக்கில்லை. சிங்கம் படத்துக்குப் பிறகு சூர்யா விடமிருந்து சூப்பர்ஹிட் படம் வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சூர்யா நடிப்பில் வெளியான 11 படங்களில் துரதிஷ்டவசமாக பெரும்பாலான படங்கள் தோல்விப்படங்கள்தான். அவற்றில் பலபடங்கள் அவருடைய குடும்ப நிறுவனங்கள் தயாரித்த படங்கள் என்பதால் நஷ்டக்கணக்குகள் வெளியே தெரியவில்லை.

ஷங்கர் இயக்கத்தில் 2015ல் வெளியான ஐ படம்தான் விக்ரம் கொடுத்த கடைசி வெற்றிப்படம். அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான 5 படங்களும் வணிகரீதியில் வெற்றியடையவில்லை.

இப்படியாக, முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் தோல்வியடைவது மட்டுமல்ல, அப்படங்களை தயாரித்தவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கு என்ன காரணம்?

அவர்கள் வாங்கும் அதிக (அநியாய?) சம்பளமே அடிப்படையான காரணமாக இருக்கிறது. சினிமாவைப்பொருத்தவரை உழைப்புக்கான ஊதியம் இல்லை. வெற்றியும், அதன்மீது உண்மையாகவோ, பொய்யாகவோ அல்லது மிகையாகவோ கட்டமைக்கப்படும் வியாபரமதிப்பும்தான் ஹீரோக்களின் சம்பளத்தையே தீர்மானிக்கின்றன. ஆனால் கடந்த சிலஆண்டுகளாக இந்த கணக்குகளும் மாறிப்போனதுதான் துரதிஷ்டம். வெற்றிப்படம் கொடுக்கும் ஹீரோக்கள் மட்டுமல்ல, தொடர்ந்து தோல்விப்படத்தைக் கொடுத்து வரும் ஹீரோக்களும் கூட தங்களுடைய சம்பளத்தை படத்துக்குப்படம் உயர்த்திவரும் கொடுமையும் கோலிவுட்டில் நடக்கிறது.

ஒரு இளம்ஹீரோ ஒரு வருடத்துக்கு முன்பு வாங்கிய சம்பளம் 3 கோடி. இன்றைக்கு அவர் கேட்கும் சம்பளம் 12 கோடி. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் நடித்து எந்தப்படமும் வணிகவெற்றியைப்பெறவில்லை என்பதுதான் வேடிக்கை.

பிறகு எந்த அடிப்படையில் தன்னுடைய சம்பளத்தை நான்கு மடங்கு உயர்த்தினார்?

அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு ஃபைனான்சியர்களிடம் கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது முதல் காரணம். இன்னொரு காரணம், சம்பளம் என்பது ஹீரோக்களின் வியாபாரத்தின் அடிப்படையிலானது, வெற்றியின் அடிப்படையிலானது என்றநிலை மாறி அவர்களுடைய கௌரவத்துக்கான அடையாளமாக மாறிவிட்டது. அவர் அத்தனை கோடி வாங்குகிறாரா…. நாமும் வாங்குவோம் என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள் இன்றைய ஹீரோக்கள்.

இவர்கள் கேட்கும் சம்பளத்தை வேறுவழியில்லாமல் தயாரிப்பாளர்களும் அள்ளிக்கொடுக்க, அதனால் படங்களின் பட்ஜெட் பல மடங்காக எகிறிவிட்டது. எனவே படங்களை பெரியவிலைக்கு விற்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.

படங்களின் தரத்துக்கு, தகுதிக்கு மீறி அதிகவிலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு, படம் வெற்றியடைந்து லாபம் கிடைத்தால் அல்லது போட்ட முதலீடு திரும்பக் கிடைத்துவிட்டால் பிரச்சனையில்லை. ஒருவேளை முதலீடே தொலைந்துபோகுமளவுக்கு நஷ்டம் ஏற்பட்டால், தயாரிப்பாளரையோ அல்லது ஹீரோவின் வீட்டுக்கதவுகளையோ தட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இதனால் தயாரிப்பாளருக்கு அவமானமோ… இல்லையோ… நிச்சயமாக ஹீரோக்களுக்கு அவமானம்தான். இந்த அவமானத்துக்கு பயந்துதான், கடந்த காலங்களில் ரஜினி, விஜய் உட்பட சில ஹீரோக்கள் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து அவர்களது வாயை அடைத்தனர். இன்றைக்கு தர்பார் படம் நஷ்டம் என்று ரஜினி வீட்டை விநியோகஸ்தர்கள் முற்றுகையிடுவதும்கூட இந்த கணக்கின் அடிப்படையில்தான்.

இப்படிப்பட்ட அவமானங்கள் எதிர்காலத்தில் ஹீரோக்களுக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

விசிலடிக்கும் ஆர்வக்கோளாறு ரசிகர்கள் ட்விட்டரில் பகிறும் வசூல்கணக்கை உண்மை என்று நம்பிக்கொண்டு உட்கார்ந்திருக்காமல், தன்னுடைய படத்தின் பட்ஜெட் என்ன? வியாபாரம் என்ன? வசூல் என்ன? என்பதை திறந்தமனதோடு தெரிந்து கொள்ள ஹீரோக்கள் முன்வர வேண்டும். அப்படி தெரிந்து கொண்டால்தான் நாம் வாங்கும் சம்பளம் நியாயம்தானா என்பதே அவர்களுக்குப் புரியும்.

கொடுக்க ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக அநியாய சம்பளம் கேட்பதும், வாங்குவதும் ஆரோக்கியமான விஷயமில்லை என்பதையும், தொழிலுக்கும் நேர்மையில்லை என்பதையும் நம் ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிதான். தற்போது அவர் நடித்து வரும் படத்துக்கு 110 கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய்யின் சம்பளம் 50 கோடி என்று உறுதியாக சொல்கின்றனர் திரையுலகினர்.

50 கோடி என்பது பிகில் படத்துக்குத்தான், தற்போது அவர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் சம்பளம் அதைவிட அதிகம் என்கின்றனர். அதுமட்டுமல்ல, படத்துக்குப் படம் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக்கொண்டேபோகும் விஜய் அதை நிர்ணயம் செய்வதற்கு ஒரு ஃபார்முலா வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர் படத்துறையினர்.

அதாவது, தன்னுடைய படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதையே தனக்கான சம்பளமாகக் கேட்கிறாராம் விஜய். தமிழ்சினிமாவின் வியாபாரத்தில் தமிழ்நாடு விநியோக உரிமை என்பது ஏறக்குறைய 40 சதவிகிதம். அதை விஜய்க்கு சம்பளமாகக் கொடுத்துவிட்டால் தயாரிப்பாளரின் கதி? அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும் வழியையும் விஜய்யே வகுத்துக்கொடுக்கிறாராம்.

அதாவது அவர் நடிக்கும் படங்களின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் மூலம் கிடைக்கும் தொகைக்கு மேல் படத்தின் தயாரிப்புச் செலவு இருக்கக் கூடாது என்பது விஜய்யின் கட்டளை. விஜய் சொல்லும் இந்த கணக்கின்படி படத்தை தயாரித்தால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வட இந்தியா மற்றும் ஓவர்சீஸ் மூலம் கிடைக்கும் வருவாய் தயாரிப்பாளர்களுக்கான லாபமாக இருக்க வேண்டும் என்கிறாராம்.

விஜய்யின் இந்த கணக்கு தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்குமா? காலை வாருமா?

நிச்சயம் காலம் பதில் சொல்லும்.

– ஜெ.பிஸ்மி