8 தோட்டாக்கள் படத்தை ரஜினி பார்க்க விரும்பியது ஏன்?

1144

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் நான்கு படங்களேனும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிகபட்சமாக ஆறேழு படங்கள் கூட  திரைக்கு வந்திருக்கின்றன.

அவற்றில் பெரும்பாலான படங்கள் குப்பையாக இருப்பதுதான் சோகத்திலும் சோகம்.

அதனால் படம் எடுப்பவர்களின் பணமும் தொலைந்துபோகிறது. படம் பார்ப்பவர்களின் பணமும் விரயமாகிறது.

இப்படி தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் குப்பைப்படங்களுக்கு நடுவே மிக அபூர்வமாக ஒரு சில நல்ல படங்களும் வெளியாகத்தான் செய்கின்றன.

சில வாரங்களுக்கு முன் வெளியான  ‘8 தோட்டாக்கள்’ படம் இந்த ரகம்.

இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகணேஷ்  26 வயது இளைஞர். மிஷ்கினிடம் உதவியாளராக இருந்தவர்.

8 தோட்டாக்கள் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கரும், நாசரும் ஸ்ரீ கணேஷின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அவரை அநியாயத்துக்கு  அலட்சியம் ப்ளஸ் அவமானப்படுத்தியுள்ளனர்.

முக்கியமாக எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் என்றும் பார்க்காமல் ஸ்ரீகணேஷுக்கு இம்சை கொடுத்துள்ளார்.

அதே, எம்.எஸ்.பாஸ்கர் 8 தோட்டாக்கள் படம் வெற்றியடைந்ததும் ஸ்ரீகணேஷை அழைத்து அவருக்கு தங்கச்சங்கிலி பரிசளித்திருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் அணிவித்த தங்கச்சங்கிலி சந்தோஷத்தை தந்ததோ இல்லையோ  8 தோட்டாக்கள் படத்தைப் பார்த்துவிட்டு அவரை ரஜினி பாராட்டியது ஸ்ரீகணேஷுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

8 தோட்டாக்கள் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட  ரஜினி படத்தைப் பார்க்க விரும்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து படக்குழு அவருக்கு பிரத்யேகமாக திரையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

முழுப்படத்தையும் பார்த்துவிட்டு  இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகணேஷிடம் ரஜினி என்ன பேசினார்?

அற்புதமான படம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. என்ன ஒரு திரைக்கதை? அற்புதமாக அனைவரிடமும் நடிப்பை வாங்கியுள்ளீர்கள். இந்தப் படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். அனைவருமே நன்றாக இருக்கிறது என்றவுடன்தான் பார்த்தேன். இவ்வளவு பேர் பாராட்டுவதற்கு தகுதியான படம் தான். இதே மாதிரி இன்னும் நிறைய நல்ல படங்களை நீங்கள் இயக்க வேண்டும். பெரிய வெற்றி உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்த்துகள்  என்று  ஸ்ரீகணேஷிடம் தெரிவித்திருக்கிறார் ரஜினி.

ரஜினியின் பாராட்டு ஸ்ரீகணேஷ் வாழ்வில் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.