விசேஷ கவனிப்பும்….! – விவேகம் படத்தின் வசூல் விவரங்களும்…!

1719

சினிமா நடிகர்களின் ரசிகர்கள் ஊடகங்களில் ஊடுருவிவிட்டதால் கடந்த சில வருடங்களாகாவே ஊடக அறம் என்பது அறவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

தன்னுடைய அபிமான நடிகனைப் பற்றிய செய்திகளிலும், அந்த நடிகனின் படம் குறித்த செய்தி, விமர்சனம், பாக்ஸ் ஆபீஸ் தகவல்களிலும் தன்னுடைய சார்புத்தன்மையை புகுத்தி வாசகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஊடகப் பயிற்சியோ, இலக்கணமோ, திறமையோ, அறிவோ இல்லாத தனிநபர்கள் ஆளுக்கொரு ஆண்ட்ராய்ட் மொபைலை கையில் வைத்துக் கொண்டு, சமூகவலைத்தளங்களை சம்பாதிக்கும் தளமாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வைத்திருக்கிறார்கள், ட்விட்டரில் அதிக எண்ணிக்கையில் ஃபாலோயர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இப்படிப்பட்ட ஆட்களுக்கு பணத்தைக் கொடுத்து தங்களுடைய படங்களைப் பற்றிய பொய்யான, மிகையான தகவல்களை பரப்பி வருகின்றனர் – படத்துறையினர்.

பத்து பைசா தேறாத படங்களை எல்லாம் பாராட்டித்தள்ளுவதையும், பல கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்களை பரப்புவதையும் பிழைப்பாக வைத்திருக்கும் இதுபோன்ற நபர்களுக்கு விவேகம் தயாரிப்பாளர் தரப்பிலும் ‘விஷேச கவனிப்பு’ நடந்திருக்கிறது.

வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் இல்லாமல் விவேகம் படத்தை உலகமகா திரைக்காவியம் என்பதைப்போலவும், ஹாலிவுட் படத்துக்கு நிகரான படம் என்பதைப்போலவும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், விவேகம் படத்தின் வசூல் பற்றியும் சகட்டுமேனிக்கு பொய்யான தகவல்களை தட்டிவிடுகின்றனர்.

சென்னையில் முதல் நாள் வசூல் 1.21 கோடி என்றும், தமிழ்நாடு முழுக்க முதல் நாள் வசூல் 16 கோடி என்றும், உலக அளவில் முதல் நாள் வசூல் 45 கோடி என்றும் கொஞ்சம் கூட அடிப்படையற்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.

சென்னையின் இரண்டாவது நாள் வசூல் 1.51 கோடி என்றும் அதிகாரபூர்வமற்ற அப்டேட்கள் ட்விட்டரில் தெறிக்கவிடப்படுகின்றன.

அது மட்டுமல்ல, இது போன்ற நம்பகத்தன்மையற்ற புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து, ‘கபாலி’, ‘தெறி’ படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்து, ‘விவேகம்’ முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது என்று முன்னணி ஊடகங்களும் செய்திகளை வெளியிடுகின்றன.

சென்னையில் ‘தெறி’ படத்தின் முதல் நாள் வசூல் 1.05 கோடி.

சென்னையில் ரஜினி நடித்த ‘கபாலி’ படம் முதல் நாளில் 1.12 கோடி வசூல் செய்தது. இதுவே சாதனையாக இருக்கிறது.

‘விவேகம்’ படம் தற்போது கபாலியின் சாதனையை முறியடித்துவிட்டதாக மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

இதுபோன்ற தகவல்கள் எல்லாம் விவேகம் படத்தை வெற்றிப்படமாக்கிவிடும் என்று நம்புகிறவர்களை என்ன சொல்வது?