144 தயாரிப்பாளர்களின் மருத்துவ காப்பீடு ரத்து…. – விஷாலின் பழிவாங்கும் படலம் ஆரம்பம்?

1616

திரைப்படத்துறையின் நலனுக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் விஷால் பாடுபட்டு வருவதுபோல் ஒரு பக்கம் செய்திகள் வந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவருடைய இமேஜுக்கு முற்றிலும் மாறான செய்திகளும் வெளியாகி இருக்கிறது.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது தனக்கு எதிராக செயல்பட்டவர்களின் மெடிக்ளைம் பாலிஸியை ரத்து செய்து பழிதீர்த்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் விஷால்.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு, வருடத்துக்கு சுமார் 99 லட்சம் பிரீமியம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பல உறுப்பினர்கள் பயன்அடைந்துள்ளனர்.

விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் காப்பீடு மூலம்தான் 4 லட்சம் க்ளைம் செய்திருக்கிறார்.

விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவிக்கு வந்த பிறகு,144 தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவக் காப்பீட்டை ரத்து செய்துள்ளனர்.

இதை சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தெரியாமலே ரகசியமாக செய்து முடித்துள்ளனர் என்பதுதான் அதிர்ச்சி.

suresh-kamatchi

பாலசந்தர் என்ற சிறுபடத் தயாரிப்பாளர் ஒருவர் அண்மையில் தன் மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு, தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த மருத்துவ காப்பீட்டு அட்டையை மருத்துவமனையில் கொடுத்திருக்கிறார். அவருடைய பாலிஸி கேன்ஸல் செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக பணத்தைக் கட்டுங்கள் மருத்துவமனை நிர்வாக சொல்ல, அதிர்ந்துபோன பாலசந்தர் இது பற்றி வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்க….

அதன் பிறகே விஷால் தரப்பினர் செய்த இந்த காப்பீடு பழிவாங்கல் வெளியே தெரிய வந்திருக்கிறது.

முன்னால் தலைவரான கலைப்புலி தாணு தொடங்கி, கலைப்புலி சேகரன், கங்கை அமரன், எஸ்.பி.முத்துராமன், அன்பாலாயா பிரபாகரன், ஐங்கரன் விஜயகுமார், வி.சி.குகநாதன் என முன்னணி தயாரிப்பாளர்கள் பலருடைய காப்பீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் விளக்கம் கேட்டபோது, நீங்கள் எல்லாம் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிள் வரவு செலவு ஸ்டேட்மெண்ட்டை காட்டினால்தான் காப்பீடு கிடைக்க செய்வோம் என்று பதில் அளித்திருக்கிறார்.

இது குறித்த தயாரிப்பாளர் சுரேஷ்காமட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

“தயாரிப்பாளர்கள் சிலரின் காப்பீட்டுக் கணக்குகளை விஷால் நிர்வாகம் ரத்துசெய்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததும், அதுகுறித்து எழுத்துப் பூர்வமாக தெரிந்து கொள்ள நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு இமெயில் அனுப்பினேன். அதற்கு எனது கணக்கு அழிக்கப்பட்டு விட்டதாக பதில் வந்தது.

வரும் பிப்ரவரி மாதம் வரை எனக்கு இன்சூரன்ஸ் உள்ளது. அதற்கான பிரீமியம் தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது. எதற்காக இப்போதே இந்த காப்பீட்டுக் கணக்கை அழித்தார்கள்? எங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் காப்பீட்டு பாலிசி கொடுத்தார்கள். இப்போது எங்களைக் கேட்காமலேயே அழித்துள்ளனர். கணக்கு அழிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் பலர் மூத்தவர்கள். அவர்களுக்கு உடல் நீதியான பிரச்சினை வரும்போது, பணம் செலுத்தி பெற்ற காப்பீட்டு கணக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

இது திட்டமிட்ட மோசடி. தயாரிப்பாளர் சங்கம் தன் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது.

எனவேதான்இன்சூரன்ஸ் கம்பெனி மீதும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். என்னுடைய வக்கீல் சரவணன் இந்த வழக்கை நடத்துகிறார்.
நிச்சயமாக எங்களுக்கு நீதி கிடைக்கும்.” என்கிறார் சுரேஷ்காமாட்சி.

உயர்ந்த லட்சியத்தோடு பதவிக்கு வந்த விஷால், தனி மனித பழிவாங்கலில் ஈடுபடலாமா?

துப்பறிவாளன் விஷால்…. துப்புரவாளனாகவும் இருக்க வேண்டும்.

-ஜெ.பிஸ்மி

 

மருத்துவகாப்பீட்டை இழந்த 144 தயாரிப்பாளர்கள் பட்டியல்…