விவரம் தெரியாமல் பேசும் விஷால்….

675

நெறி பிறழாமல் ஊடகங்கள்  திரைப்படங்களை விமர்சனம் செய்வதை படத்துறையினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அதை அவர்களால் தடுக்கவே முடியாது என்பதால் குறுக்குவழியை தேடுகின்றனர்.

அதாவது, ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை  வைத்திருக்கும்,  சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத தனி நபர்களுக்கு பணத்தைக் கொடுத்து, தங்கள் படத்தைப் பற்றி ஆகா ஓகோவென புகழ்பாட  வைக்கிறார்கள்.

வாங்குகிற பணத்துக்கு ஏற்ப ட்விட்டர் காக்கைகளும் கத்திக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம்,  யு டியூப் போன்ற தளங்களில் சினிமா விமர்சனம் செய்ய கிளம்பிவிட்டனர் பலர்.

இப்படிப்பட்டவர்களில், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை  வைத்திருப்பவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கும் பணத்தைக் கொடுத்து தங்களுடைய படத்தைப் பற்றி பாசிட்டிவ்வாக விமர்சனம் செய்ய வைக்கின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு மொக்கப் படத்தை எல்லாம் சூப்பர் படம் என்று பாராட்டித் தள்ளுகின்றனர்.

இதுபோன்ற போலி விமர்சகர்களை மக்கள் புரிந்து கொண்டுவிட்டதால் இவர்களின் விமர்சனங்களை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

அதேசமயம்,  பணம் கொடுத்து படம் பார்த்துவிட்டு, படம் நன்றாக இல்லை என்றால் இந்தப் படத்தை கழுவி ஊற்றுகிறவர்களின் குரல் மக்கள் மத்தியில் செமத்தியாய் எடுபடுகிறது.

அது விமர்சனம் இல்லை, பணம் கொடுத்தவனின் வயிற்றெரிச்சல்.

ட்விட்டரில் பணம் வாங்கிக் கொண்டு படத்தை பாராட்டுகிறவர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்றால், ஃபேஸ்புக்கில் பணம் கொடுத்து படம் பார்க்கிற சமான்ய மக்கள் நிறைந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தில்தான் உண்மை இருக்கிறது.   இந்த உண்மை விமர்சனங்கள் சரக்கு இல்லாத காற்று வெளியிடை போன்ற படங்களின் வசூலை காலி பண்ணிவிடுகின்றன.

இதை சினிமாக்காரர்களால் தாங்க முடியவில்லை. சமயம் கிடைக்கும்போதெல்லாம் சங்கு ஊதுகிறார்கள்.

விக்ரம் பிரபு நடித்து, தயாரித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று காலை நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில்  கலந்துகொண்ட விஷால், விமர்சனத்துக்கு எதிராக புலம்பித்தள்ளினார்…

‘‘இப்போது படம் எடுப்பதும், வெளியிடுவதும் பெரும் சவாலாக இருக்கிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ; வெளியாகி மக்களிடையே போய் சேருவதற்குள் வெளியாகும் சில தவறான விமர்சனங்களால் அப்படங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இப்போதெல்லாம் படம் பார்த்துக் கொண்டே ட்விட்டரில் படத்தை விமர்சித்து எழுதுகிறார்கள்! விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அதை ஆரோக்கியமான முறையில் செய்யுங்கள்! இப்படி வெளியாகும் விமர்சனங்களை மக்கள் நம்புவதால் தியேட்டருக்கு அவர்கள் வருவதில்லை. அதனால் படம் வெளியாகி 3 நாட்கள் கழித்து விமர்சனங்களை வெளியிடுங்கள். ஒரு திரைப்படத்திற்கு மூன்று நாளாவது அவசாகம் கொடுங்கள்! காரணம் ஒரு படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார். சினிமாவை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள்! அவர்களின் வாழ்வாதாரம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சினிமா நன்றாக இருக்க வேண்டும். சினிமா நன்றாக இருக்க நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று வெவரம் புரியாமல் பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் வைத்தார் விஷால்!

சமூக ஊடகங்களில் படங்களை விமர்சனம் செய்வது பத்திரிகையார்கள் இல்லை, பொதுமக்கள். இந்த வேறுபாடு கூட விஷாலுக்கு தெரியவில்லை.

இவர்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர்.