போலீஸ் – ரவுடி கதைதான், புதிதாக எதுவுமில்லை… மனசிலிருந்து பேசிய விஜய்சேதுபதி…

1005

ஆர்யா நடித்த ஓரம்போ, மிர்ச்சி சிவா நடித்த வ (குவார்ட்டர் கட்டிங்) ஆகிய தலைசிறந்த(?) படங்களை இயக்கிய புஷ்கர் – காயத்ரி தம்பதியின் இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் ‘விக்ரம் வேதா’.

ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தில், மதயானைக்கூட்டம் கதிர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள விக்ரம் – வேதா படம் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய்சேதுபதி பாசாங்கு இல்லாமல் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினார்…

‘‘எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ‘விக்ரம் வேதா’ படப்பிடிப்பில்தான் நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்தேன்.

இந்த படத்தின் கதையை 2014- ல் கேட்டேன். தற்போது படமாக பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.

மாதவனுக்கும் எனக்கும் எது முதல் காட்சியோ, அதுதான் எங்கள் இருவரையும் வைத்து முதலில் படமாக்கப்பட்டது.

பெரிய படங்கள், பெரிய நடிகர்களோடு நடித்தவர் மாதவன்.

அவரோடு நடிக்கும்போது எப்படியிருக்கும், எதிர்வினை எப்படியிருக்கும், முதல் தடவை நம்மைக் காணும்போது என்ன பேச வேண்டும் என நிறைய யோசித்து வைத்திருந்தேன்.

அவர் வந்தவுடனே சாதாரணமாக அந்த இடம் மாறிவிட்டது. பழகுவதற்கு இனிமையானவர்.

ஒரு காட்சியைப் பற்றி எளிதாக அவருடன் விவாதிக்க முடிகிறது.

நீண்ட நாள் நண்பர்கள் இணைந்து பணியாற்றினால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் அவரோடு நடித்தது இருந்தது.

இந்தக் கதையில் கதிரும் ஒரு கதாநாயகன்தான். அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும் படமாக இது இருக்கும்.” என்று சக நடிகர்கள் பற்றி விவரித்த விஜய்சேதுபதி, விக்ரம் வேதா படம் பற்றி சொன்ன கருத்து கவனிக்க வைத்தது.

“போலீஸ் – ரவுடி கதைதான். புதிதாக எதுவுமே இல்லைதான். ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருக்கும். இப்படம் வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் பார்க்கச் சொல்கிறது.

இப்படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியுமே இயக்குநர் புஷ்கர் – காயத்ரி இருவரால் உருவாக்கப்பட்டவை. நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ‘விக்ரம் வேதா’ படம் மட்டும் எனக்கு பதட்டமாக உள்ளது. இப்படத்தை மக்களோடு திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன். ” என்று விஜய் சேதுபதி பேசியதில் பொய்யில்லை.