விஜய் சேதுபதி உண்மையிலேயே மக்கள் செல்வன்தான்…!

1572

‘ரேனிகுண்டா’, ‘18 வயசு’ ஆகிய படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் நீ…………ண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் – ‘கருப்பன்’.

விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ‘ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் வழங்க, எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார்.

பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்த, தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகும் கருப்பன் படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியானதை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டி.இமான்,“இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் கருப்பன் தான் வெளி வந்திருக்கிறது. ஒரு சில ஹீரோக்களின் படம் வெற்றி தோல்வி தாண்டி நமக்கு பிடிக்கும் படமாக இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.” என்று குறிப்பிட்டார்.

‘‘இந்தப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பே விஜய் சேதுபதியை சந்தித்து நீங்கள் இன்னும் பெரிய இடத்துக்கு போவீர்கள் என்று சொன்னேன். அதன் பிறகு இந்த வருடம் வெளியான விஜய் சேதுபதியின் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். கருப்பன் ஒரு லைவ்வான படம். விஜய் சேதுபதி உட்பட எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்” என்றார் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம்.

“நான் பஸ்ஸூக்காக காத்திருந்து காத்திருந்து தளர்ந்து போன நேரத்தில் எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது. டிரைவராக விஜய் சேதுபதியும், கண்டக்டராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம். ” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இயக்குநர் பன்னீர் செல்வம், கருப்பன் பட வாய்ப்பு தனக்குக் கிடைத்தது பற்றி விவரித்தார்…

‘‘சீனு ராமசாமி என்னை அழைத்து விஜய் சேதுபதியை சந்திக்க சொன்னார். விஜய் சேதுபதி இருக்கிற பிஸியில் கதை கேட்க முடியவில்லை. பல பேரின் உதவியால் இந்த படம் எனக்கு கிடைத்தது. இரண்டு படம் இயக்கிய எனக்கே இந்த நிலை என்றால் முதல் படம் இயக்க காத்திருக்கும் உதவி இயக்குனர்களின் நிலை ரொம்பவே கொடுமையானது.” என்ற பன்னீர் செல்வம், ‘கருப்பன்’ ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதை மறுத்தார்..

‘‘கருப்பன்’ ஜல்லிக்கட்டு பற்றிய படம் இல்லை. படத்தில் ஜல்லிக்கட்டும் இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை. திருமணத்திற்கு பிறகு அந்த காதல் கணவன், மனைவிக்குள் ஏற்படுகிற பாசம், நேசம், சண்டை, சச்சரவுகள், அதற்கு பிறகு அவர்களுக்குள் ஏற்படும் பேரன்பு இப்படி பயணிக்கும் கதை தான் கருப்பன். சுருக்கமாக சொல்வதென்றால் ‘கருப்பனி’ன் மைய கரு பேரன்புதான். அதனை முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் படமாக்கியுள்ளோம்.
இதில் கருப்பனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி, அவரது மனைவியாகநடித்திருக்கும் தன்யா, வில்லனான பாபி சிம்ஹா இவர்கள் தவிர்த்து வேறு யாரும் அந்த கதாபாத்திரங்களுக்கு பொருந்தாது என்று சொல்லும் விதமாக அவர்களது பங்களிப்பும், நடிப்பும் இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளன’’ என்றார் பன்னீர் செலவம்.

சரி.. கருப்பன் பற்றி விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்?

“ரேணிகுண்டா படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தை கூட மிகவும் கண்ணியமாக காட்டியிருப்பார் இயக்குனர் பன்னீர் செல்வம். துளி கூட கவர்ச்சி இருக்காது. இந்த படத்தில் கூட ஒரு முதலிரவு பாடல் மிகவும் கண்ணியமாக படம் பிடித்துள்ளார். நான் பழகியதில் இது நாள் வரை ஒருவரை பற்றி கூட பன்னீர் செல்வம் குறை சொன்னதில்லை. அவ்வளவு நல்ல மனிதர். ஒரு கமெர்சியல் படத்தை எப்படி எடுத்து செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏ.எம் ரத்னம். இந்த படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை, ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த போது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். அவனும் எதுவும் கேட்காமல் நடித்தான்.
சங்குத்தேவன் படம் டிராப் ஆனது எனக்கு பெரும் வருத்தம். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்செயலாக அதே இடத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.”

என்ற விஜய்சேதுபதி,“ இந்த படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர்.” என்று உண்மையையும் போட்டு உடைத்தார்.

ஜல்லிக்கட்டு காட்சியில் டூப் போடாமல் நானே ரிஸ்க் எடுத்து நடித்தேன் என்று பொய்யாய் பில்ட்அப் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்காமல் உண்மையை உள்ளபடி சொன்னவகையில் விஜய் சேதுபதி உண்மையிலேயே மக்கள் செல்வன்தான்.