விஜய் 60 படத்துக்கு என்ன டைட்டில்? தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

624

பி. வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரொடெக்ஷன்ஸ் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில்  பரதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜயின்  60 ஆவது படம் இது என்பதை குறிக்கும் வகையில் “தளபதி 60”  என்று தற்காலிகமாக குறிப்பிடப்பட்டு வரும் இந்தப் படத்துக்கு  எம்.ஜி.ஆர். நடித்த  எங்கள் வீட்டு பிள்ளை  படத்தின்  தலைப்பு வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக, விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு  எம்.ஜி.ஆர். நடித்த  எங்கள் வீட்டு பிள்ளை  படத்தின் பெயரை சூட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

அதோடு விரைவில் விஜய் வீட்டு முன் போராட்டம் நடத்த இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் விஜய்யின் 60 ஆவது படத்தைத் தயாரித்து வரும் விஜயா புரொடெக்ஷன்ஸ் சார்பில் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

“எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல் முற்றிலும் தவறான செய்தி. எங்கள் வீட்டு பிள்ளை என்ற தலைப்பை எங்கள் படத்துக்கு சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.