வெற்றிக்கு எதிர்திசையில் விஜய்சேதுபதி

468

வெற்றிக்கு எதிர்திசையில் விஜய்சேதுபதி
…………………..

ஜெ.பிஸ்மி

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்கள் தங்களின் சம்பளத்தை அவர்கள் நடிக்கும் படங்களின் வியாபாரம், வெற்றி, வசூல் அடிப்படையிலேயே நிர்ணயிக்கின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் 100 கோடிக்குமேல் சம்பளம் கேட்பதற்கு இதுவே காரணம்.

அதேநேரம், வெற்றிப்படங்களையே கொடுக்காத, தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துவரும் நடிகர்களின் சம்பளமும் உயர்த்தப்படுகிற வினோதமும் கொடுமையும் இங்கே நடந்து கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. அவருக்கு அவ்வளவு சம்பளமா? எனக்கும் அதே சம்பளத்தைக்கொடு என்று அழுகுணி ஆட்டம் ஆடி அநியாயத்துக்கு அதிகமான சம்பளம் கேட்கும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி இந்த ரகம். இன்றைய தேதியில் விஜய்சேதுபதியின் சம்பளம் 15 கோடி. வில்லன் வேடத்தில் நடிக்க 25 கோடி கேட்பதாகவும் தகவல் உண்டு. இதை நீங்கள் வாசிக்கும்போது அவரது சம்பளம் மேலும் சில கோடிகள் அதிகமாகியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படி சொல்லக் காரணமிருக்கிறது. 2019 ல் சிந்துபாத் என்ற படத்தில் நடிப்பதற்கு அவர் வாங்கிய சம்பளம் வெறும் 5 கோடிதான். அதன் பிறகு விஜய்சேதுபதி நடிப்பில் சுமார் 20 படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் மாஸ்டர், விக்ரம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வணிகரீதியில் வெற்றியடைந்த படங்கள். இந்த இரண்டு படங்களின் ஹீரோவும் விஜய்சேதுபதி அல்ல. ஆனாலும் இந்த மூன்று வருடகாலத்தில் தன்னுடைய சம்பளத்தை பலமடங்கு உயர்த்திக் கொண்டுவிட்டார்.

சினிமா என்பதே வணிகம்தான். எந்தப்பொருளுக்கு டிமாண்ட் அதிகமோ அந்தப் பொருளுக்கு கிராக்கி ஏற்படத்தான் செய்யும்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?

எல்லாம் சரிதான். அதில் ஒரு நியாயம் வேண்டும், நேர்மை வேண்டும். அது விஜய்சேதுபதியிடம் இல்லை என்பதே திரையுலகினர் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன், கிட்டத்தட்ட பத்துக்கும் மேலான படங்களில் துணை நடிகராக தலைகாட்டியவர்jன் விஜய்சேதுபதி. இப்படி நடித்தவர்களில் பலர் இன்னமும் துணை நடிகர்களாகவே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

நல்லவேளை. விஜய்சேதுபதியின் தலைஎழுத்து மாறியது. தமிழ்சினிமாவுக்கு நல்லதொரு கதைநாயகன் கிடைத்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்களும், அவர் தேர்வு செய்த கதாபாத்திரங்களும் இப்படித்தான் எண்ண வைத்தன. அதுமட்டுமல்ல, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என ஒவ்வொரு படங்களிலும், இயல்பான நடிப்பால் நம்மை வசீகரித்தார்.

அந்த விஜய்சேதுபதிதானா இவர் என்று கேட்கும் அளவுக்கு காலப்போக்கில் அவர் மாறிப்போனதுதான் வருத்தம். பணத்துக்காக தனக்கு பொருத்தமற்ற, தன் பெயரைக்கெடுக்கும் வேடங்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருக்கிறார்.

பணம்… பணம்… என ஆளாய்ப்பறக்கும் விஜய்சேதுபதி, தன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களின் எதிர்காலத்தையும் நினைத்துப்பார்ப்பதில்லை. அவரை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட படம் திரைக்குவரவிருக்கும் சூழலில் பணத்துக்கு ஆசைப்பட்டு திடீரென வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுவிடுகிறார். அதனாலேயே அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் எடுபடாமல்போய்விடுகின்றன. ஒரு பக்கம் தயாரிப்பாளருக்கு நஷ்டம், இன்னொரு பக்கம் இயக்குநரின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றன. இப்படி விஜய்சேதுபதியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எக்கச்சக்கம்பேர் என்று பட்டியலிடுகின்றனர் படத்துறையினர்.

வில்லனாக நடிப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பணத்துக்காக வதவதவென்று கெஸ்ட்ரோல்களிலும் நடித்துத்தள்ளிக்கொண்டிருக்கிறார். இதுவரை சுமார் 45 படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி கெஸ்ட்ரோலில் மட்டுமே 11 படங்களில் நடித்துள்ளார். பெரிய சம்பளத்தைக் கொடுத்து அவரை கெஸ்ட்ரோலில் நடிக்க வைப்பதால் விளம்பரங்களில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்தது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அதைப்பார்த்துவிட்டு படத்தை அதிகவிலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைகின்றனர். தியேட்டருக்குப்போகும் ரசிகனோ ஏமாந்துபோகிறான். இப்படியாக தன்னை வாழவைத்த ரசிகர்கள் ஏமாறுவதற்கு விஜய்சேதுபதியே காரணமாகவும், கருவியாகவும் இருக்கிறார். இதற்கு மிகப்பெரிய உதாரணம் அவருடைய 25 ஆவது படமான சீதக்காதி. சில நிமிடங்கள் மட்டும் விஜய்சேதுபதி தலைகாட்டிய சீதக்காதி படத்துக்கு கொடுக்கப்பட்ட பில்ட்அப்பும் பப்ளிசிட்டியும் அனைவரும் அறிந்ததுதான்.

கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிப்பது நல்ல கலைஞனுக்கு அழகல்ல. வில்லன், ஹீரோ, கெஸ்ட்ரோல் என கலந்துகட்டி நடிப்பது விஜய்சேதுபதி என்ற கலைஞனின் திறமை பட்டைதீட்டப்பட உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம் அவரை நம்பி பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களையும் நினைத்துப்பார்க்க வேண்டாமா? என்ற கேள்வியில் உள்ள நியாயத்தையும் நிராகரிக்க முடியாதே?

விஜய்சேதுபதி மீது வைக்கப்படும் மற்றொரு விமர்சனம்… தனக்கு ஜோடியாக யார் நடிக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார் என்பது. ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, ரம்யா நம்பீசன் என அவருடைய ‘குட்புக்கில்‘ இருக்கும் குறிப்பிட்ட சிலநடிகைகளையே கதாநாயகியாக புக் பண்ண வேண்டும் என்று இயக்குநர்களை நிர்ப்பந்திக்கிறார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்ல, தனக்கு நெருக்கமான இயக்குநர்கள் வேறு ஹீரோவை வைத்து இயக்கும் படத்திற்கும் தன்னுடைய சிபாரிசுவிரலை நீட்டுவதுதான் கொடுமை. ஜிவி பிரகாஷ்குமாரை வைத்து சீனுராமசாமி இயக்கியுள்ள இடிமுழக்கம் படத்திற்கு காயத்ரியை சிபாரிசு செய்தது விஜய்சேதுபதிதான்.

நடிகைகள் விஷயத்தில் அவர் காட்டும் கரிசனத்தில் கால்பங்குகூட சீனியர் இயக்குநர்களுக்குக் காட்டுவதில்லை. சில வருடங்களுக்கு முன் விஜய்சேதுபதிக்கு ஒரு கதை சொன்னார் இயக்குநர் சேரன். கதை சூப்பர் என்று சொன்னவர், தயாரிப்பாளருடன் வரும்படி சொன்னார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் ஒரு கோடி. ஆனால் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டார். அன்றைய சூழலில் அவருக்கு அத்தனை சம்பளம் கொடுத்து படம் எடுத்தால் நஷ்டம் வரும் என்பதால் தயாரிப்பாளர் தயங்க, அதன் பிறகு இன்னொரு தயாரிப்பாளருடன் போனார் சேரன். அப்போது விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் 3 கோடி. அவர் கேட்ட சம்பளத்துக்கு பிசினஸ் இல்லை என்று அந்தத் தயாரிப்பாளரும் நடையைக்கட்ட, வேறு தயாரிப்பாளரைப்பாருங்க என்று சொல்லி இருக்கிறார் கூலாக. சேரன் கஷ்டப்பட்டு ஒரு தயாரிப்பாளரை தேடிப்பிடிக்க, விஜய்சேதுபதி அதிக சம்பளம் கேட்க…ஒரு கோடியில் துவங்கிய இந்த கண்ணாமூச்சி விளையாட்டு பதினைந்து கோடியானநிலையிலும் இன்னமும் முற்றுப்பெறவில்லை. ஆனால் மேடைகளில் மூத்த இயக்குநர்களை மதிப்பவர்போல் தன்னைக் காட்டிக்கொள்கிறார் விஜய்சேதுபதி.

அதேபோல் பொது இடங்களில் தன்னுடைய ரசிகர்களை கட்டிப்பிடித்து அவர்களுக்கு முத்தம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். ரசிகர்கள் அருகில் வந்தாலே, “வேப்பண்ணை நாத்தம் எடுப்பதாக“ விலகி நின்ற ஹீரோக்களைப்பார்த்த தமிழ்சினிமாத்துறையில், ரசிகர்களை கட்டியணைத்து ஒரு நடிகர் அன்புமிகுதியில் முத்தமிடுகிறார் என்றால்… ஆகா.. அவரல்லவோ மாமனிதன் என்று விஜய்சேதுபதியை எண்ணி வியக்காத நாளில்லை – அந்த சம்பவத்தைக் கேள்விப்படும்வரை.

எந்த சம்பவம்?

விஜய்சேதுபதி நடித்த ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி. தன்னுடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களை அங்கே வரவைத்துவிட்டார் விஜய்சேதுபதி. ஊடகங்கள் கேமராவை அவர் பக்கம் திருப்ப, தன்னைச்சுற்றி நின்ற ரசிகர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களை கட்டியணைத்து முத்தமழை பொழியத் தொடங்கியுள்ளார் விஜய்சேதுபதி. நிகழ்ச்சி முடிந்ததும் கேரவானுக்குள் வந்தவர், அருகில் இருந்த தன் நண்பரிடம் கேட்டிருக்கிறார்.

“எப்படி என் நடிப்பு?“

அவர் என்ன கேட்கிறார் என்று நண்பருக்கு விளங்கவில்லை. பிறகு விஜய்சேதுபதியே விளக்கினாராம். என் ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேனே? அதைக் கேட்கிறேன் என்றாராம். விஜய்சேதுபதியின் இன்னொரு முகத்தை அதாவது அவரது நிஜமுகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தாராம் நண்பர்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ விஜய்சேதுபதிக்கு மிகச்சரியாகப்பொருந்தும். துணை நடிகராக நடித்துக் கொண்டிருந்த காலத்தில், ஓரளவுக்கு முகம் தெரியும்படியான கேரக்டரில் நடித்தது சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் என்ற படத்தில். அப்படத்தின் இசைநிகழ்ச்சி பிரசாத் லேப் என்ற தியேட்டரில் நடைபெற்றபோது, தன் மனைவி குழந்தைகளுடன் வந்தார் விஜய்சேதுபதி. நிகழ்ச்சி நடக்கும் தியேட்டருக்குள் நுழையமுடியாதபடி செம கூட்டம்.

மனைவி, குழந்தைகளை வைத்துக் கொண்டு உள்ளே நுழையமுடியாமல் வருத்தம் மேலிட வாசலிலேயே நிற்கிறார் விஜய்சேதுபதி. அவரது தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்டு, அப்படத்தின் பி.ஆர்.ஓ. விஜய்சேதுபதியை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறார். விழா துவங்கியபின் அப்படத்தில் நடித்தவர்கள் எல்லாம் மேடையேற்றப்பட்டநிலையில் விஜய்சேதுபதியை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இதை கடைசிநேரத்தில் கவனித்த பி.ஆர்.ஓ. நான்காவது வரிசையில் உட்கார்ந்திருந்த விஜய்சேதுபதியை மேடையேற்றி அமரவைத்தார். அந்த நன்றியை மறக்காததினாலோ என்னவோ, தன்னுடைய ஆரம்பகாலங்களில் அவரையே தன்னுடைய பர்சனல் பி.ஆர்.ஓ.வாக வைத்திருந்தார். திடீரென ஒருநாள் அவரை மாற்றிவிட்டு, ஐஸ்வர்யா ராஜேஷின் பி.ஆர்.ஓ.வையே தன்னுடைய பி.ஆர்.ஓ.வாக நியமித்துவிட்டார் விஜய்சேதுபதி.

சினிமாவில் உச்சம் தொட்ட பலரை அவர்களது கெட்ட சகவாசமும். கெட்ட பழக்கமும் வீழ்த்தியகதைகள் விஜய்சேதுபதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக குடிப்பழக்கம். இந்தப்பழக்கம் இல்லாதவர்களை சினிமாத்துறையில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். என்றாலும் ஒரு கல்லூரி விழாவிலேயே எனக்கு குடிப்பழக்கம் உண்டு என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு விஜய்சேதுபதி அந்தப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதை அது அவரது தனிப்பட்ட விஷயம் என்று கடந்துபோய்விடமுடியாது. மிகத்திறமையான கலைஞனான விஜய்சேதுபதி மீதான அக்கறையில் அதை சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகங்களின் கடமைதானே?

அப்படி விஜய்சேதுபதி செய்யவிருந்த ஒரு மிகப்பெரிய தவறை அவர்மீதான அக்கறையில் ஊடகங்கள் சுட்டிக்காட்டியதை அவரால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாமல்போனதை என்னவென்று சொல்வது? இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தமிழர் என்றாலும், ஈழப்போரின்போது அவர் சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர். அதனாலேயே தமிழர்கள் மத்தியில் இனதுரோகியாகப் பார்க்கப்படுபவர். அவருடைய வாழ்க்கையைத்தழுவி எடுக்கவிருந்த 800 என்ற படத்தில் கதாநாயகனாக அதாவது முத்தையா முரளீதரனாக நடிக்க ஒப்புக்கொண்டதுதான் விஜய்சேதுபதி செய்யவிருந்த தவறு. அந்தப்படத்தில் அவர் நடித்திருந்தால் உலகம் முழுக்க வாழும் தமிழ்மக்களின் கோபத்துக்கு ஆளாகி இருப்பார். அந்தக்கோபம் விஜய்சேதுபதியின் திரைவாழ்க்கையை காலி பண்ணி இருக்கும். அப்படி ஒரு துயர சம்பவம் நிகழாமல் அவரை காப்பாற்றியது ஊடகங்கள்தான். இந்த உண்மை புரியாமல், 800 படத்தில் நடிக்கவிடாமல் செய்ததன் மூலம் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய 5 கோடி சம்பளத்தை கிடைக்கவிடாமல் செய்துவிட்டார்களே என்ற விஜய்சேதுபதியின் கோபம் அர்த்தமற்றது எப்போது அவர் உணர்வாரோ?

விஜய்சேதுபதி இதுவரை சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் வெற்றியடைந்த படங்களை விரல்விடாமலே எண்ணிவிடலாம் என்கிற அளவுக்குத்தான் இருக்கிறது அவருடைய சக்சஸ் ரேட்.

2012 – பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம்,

2013 – சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

2015 – நானும் ரௌடிதான்

2016 – விக்ரம்வேதா,

2018 – 96

ஆக விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்களில் ஏழு படங்கள் மட்டுமே வணிக வெற்றியைப் பெற்றுள்ளன. முக்கியமாக அவர் ஹிட் கொடுத்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் விஜய்சேதுபதியின் சம்பளம் மட்டும் உயர்ந்து கொண்………………………………………டே போகிறது.

ப்பா….

 

பின்குறிப்பு – குமுதம் இதழுக்காக எழுதிய கட்டுரை