விஜய் என்கிற ஆடியோலான்ச் அரசியல்வாதி

2614

முன்னணி நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் இசைவெளியீட்டுவிழா என்றால்… பாட்டு நல்லாருக்குமா… ஹிட்டாகுமா? என்பதுதான் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு. ஆனால் விஜய் படங்களின் இசைவெளியீட்டுவிழாவில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

மொக்கப்பாட்டு என்றாலும், விஜய் ரசிகர்களுக்கு கவலையில்லை. அதை உலகமகாப்பாட்டு ரேன்ஜுக்கு சற்றுநேரத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கிவிடுவார்கள். மாஸ்டர் பாடல்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

பாட்டெல்லாம் ஒரு மேட்டரே இல்லை அவர்களுக்கு. விஜய் ரசிகர்களைப் பொருத்தவரை, இசைவெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? அங்கே அவர் சொல்லப்போகும் குட்டிக்கதை என்ன என்பதுதான் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.

விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்யின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஆளும்கட்சித்தலைகளும்கூட, விஜய்யின் இசைவெளியீட்டுவிழாப்பேச்சை இமைமூடாமல் உற்றுநோக்குகிறது.

விஜய்யின் முந்தைப்படங்களான சர்கார். பிகில் படங்களின் இசைவெளியிட்டு விழாவில் அவர் பேசிய அரசியல்பேச்சுகளும், சொன்ன குட்டிக் கதைகளும் பரபரப்பை பற்றவைத்தன. அதுவே அந்தப்படங்களுக்கு போதுமான புரமோஷனாகவும் அமைந்தது.

தன்னுடைய அரசியல் பேச்சும், குட்டிக்கதையும் தான் நடிக்கும் படத்துக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியாக அமைவதையும், அதன் தொடர்ச்சியாக படமும் மாபெரும் வெற்றியைக் குவிப்பதையும் புரிந்து கொண்ட விஜய் அதையே தன்னுடைய சக்சஸ்ஃபார்முலாக்களில் ஒன்றாக மாற்றிக்கொண்டார் – தந்திரமாக.

சர்கார் ஒரு அரசியல் படம். எனவே, அந்த நேரத்தில் தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்துவது சர்கார் படத்தை ஓடவைக்க உதவும் என்பதை புரிந்து கொண்டு, “நிஜத்தில் நீங்கள் முதலமைச்சர் ஆனால்?” என்ற தொகுப்பாளர்களின் செட்டப் கேள்விக்கு “நிஜத்தில் நான் முதலமைச்சரானால்… முதலமைச்சரா நடிக்க மாட்டேன். உண்மையா இருப்பேன்” என்று பதில் சொன்னார் விஜய்.

பிகில் இசைவெளியீட்டுவிழாவில், ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற திருக்குறளைச் சொல்லி, “எவனை எங்க உக்கார வைக்கணுமோ அவனை அங்க கரெக்டா உக்கார வச்சிங்கன்னா…” என்று அதற்கு புதிய பொழிப்புரையும் சொன்னார்.

இப்படியாக கடந்த சில ஆண்டுகளாக “ஆடியோலான்ச் அரசியல்வாதியாக” விஜய் மாறிப்போனதால், மாஸ்டர் இசைவெளியீட்டுவிழாவிலும் அரசியல் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் விஜய்யை நன்கு அறிந்த, திரையுலக அனுபவம் வாய்ந்தவர்களோ, மாஸ்டர் இசை வெளியீட்டுவிழாவில் நிச்சயமாக விஜய் அரசியல் பேச மாட்டார் என்று அடித்துச் சொன்னார்கள். காரணம், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விஜய்யின் நெருங்கிய உறவினர்.

தான் அரசியல் பேசும்போதெல்லாம் அப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் பி.பி. எகிறுவதை விஜய் நன்கு அறிவார். அந்த அவஸ்தையையும், அதிர்ச்சியையும் தன்னுடைய உறவினரான பிரிட்டோவுக்குத் தர மாட்டார் என்பதுதான் அவர்கள் சொன்ன லாஜிக்.

மாஸ்டர் படத்தின் உண்மையான தயாரிப்பாளரே விஜய்தான். சேவியர் பிரிட்டோ, இணை தயாரிப்பாளர் லலித் இருவருமே விஜய்யின் பினாமிகள் என்ற பேச்சும் திரைப்படத்துறையில் அடிபடுகிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தாலும், மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் அரசியல் பேசி, தன்னுடைய பி.பி.யை தானே எகிற வைத்துக்கொள்வாரா விஜய்?

இப்படியாக, மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் விஜய்யின் பேச்சு குறித்து இரண்டுவிதமான யூகங்கள் நிலவியநிலையில், மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் மாஸ்டர் இசைவெளியீட்டுவிழா நடைபெற்றது.

விஜய் படங்களின் இசைவெளியீட்டுவிழாவை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாட்டமாக மாற்றுவது ரசிகர்கள்தான். இந்தமுறை ரசிகர்களுக்கு அனுமதியில்லை. நட்சத்திர ஹோட்டலில் விழா நடப்பதால், ரசிகர்களை அனுமதித்தால் ரசாபசாமாகிவிடும் என்பதால் அவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பது விஜய்யே எடுத்த முடிவுதான்.

“மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வரமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கும் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே நடந்த ஒரு விழாவில், அரங்கத்துக்கு வெளியே நடந்த விஷயங்கள்தான். அப்புறம் ஹெல்த் இஸ்யூஸ். இந்த விழாவை நடத்துவதற்கும் கூட அரை மனதோடுதான் ஒப்புக்கொண்டேன்.” என்று பழியை ரசிகர்கள் மீதும் கொரோனா மீதும் போட்டதுதான் விஜய்யின் சாமர்த்தியம்.

பொதுவதாகவே விஜய் படங்களின் இசைவெளியீட்டுவிழாவில் தொகுப்பாளர்கள் விஜய்யிடம் கேட்கும் கேள்விகள் அனைத்தும் விஜய்யின் ஒப்புதலோடு ரெடி பண்ணப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்படுபவை. அந்தக்கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்பதையும் விஜய் ஏற்கனவே ரிகர்சல் பார்த்துவிட்டுத்தான் மேடைக்கு வருவார். மாஸ்டர் படவிழாவின் மேடையில் கேட்கப்பட்ட கேள்விகளும் கூட இப்படியான செட்டப் கேள்விகள்தான்.

அதில் ஒரு கேள்விக்குத்தான் விஜய் இப்படி பதில் சொன்னார்….

“என்னுடைய படத்தில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.. பாடலில் நீ நதி போல ஓடிக்கொண்டு இரு’ என்ற வரிகள் இருக்கும். நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். கிட்டதட்ட அனைவருடைய வாழ்க்கையும் நதி மாதிரிதான். நதியை சில இடங்களில் வணங்குவார்கள். சில இடங்களில் பூக்களைத் தூவி வரவேற்பார்கள். பிடிக்காதவர்கள் கல் எறிந்து விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக் கொண்டே இருக்கும்.

அந்த நதி மாதிரி தாங்க, நம்ம வாழ்க்கையும். நம்ம வேலை, நம்ம கடமைகளை செமயாக செய்துவிட்டு, அந்த நதி மாதிரியே போய்க் கொண்டே இருக்க வேண்டும். Life is very short Nanba. Always be Happy. டிசைன் டிசைனா problems will come and go, கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. அவ்வளவுதாங்க மேட்டர்” என்ற விஜய், “உண்மையாக இருக்கணும்னா சில நேரத்தில ஊமையா இருக்க வேண்டியதாக இருக்கு” என்று குட்டிக்கதையை நிறைவு செய்தார்.

“நீங்கள் 20 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கைக்கு சென்றால், அப்போதைய விஜய்யிடம் என்ன கேட்பீர்கள்? என்று இன்னொரு செட்டப் கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்வி புரியாததுபோல் முதலில் பாவ்லா பண்ணிய விஜய், “அப்போது ரெய்டு எல்லாம் இல்லாமல் பீஸ்ஃபுல்லா இருந்தேன். இப்போதும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கேன்.”

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவுதான் விஜய் பேசிய அரசியல்(?) பேச்சு. சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர் பற்றி எல்லாம் விஜய் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்த அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதிலிருந்து மீண்டவர்கள், “மக்களுக்கு எது தேவையோ, அதை சட்டமாக்க வேண்டும். மக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது.” என்று விஜய் பேசியதாக சமூகவலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்ப ஆரம்பித்தனர். அதை உண்மை என நம்பிய சில தொலைக்காட்சிகள் ஸ்க்ராலிங் வர ஆரம்பித்தது. உண்மையில் அப்படி எல்லாம் பேசவே இல்லை.

இதற்கிடையில் விஜய் ஊமை என்று பேசியதை கண்டிக்கும்வகையில், ‘உண்மையா இருக்கணும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கணும்’னு சொன்னீங்கண்ணா! ‘உ’னாவுக்கு ‘ஊ’னாலும் கொஞ்சம் சங்கடமாதான் இருக்கு.

மௌனமா, அமைதியானு கூட வச்சிருக்கலாம். ‘உ’ க்கு ‘உ’ தான் வேணும்னாலும் ‘உண்மையா இருக்கணுக்கணும்னா நாம உறுதியா இருக்கணும்’னு கூட பஞ்ச் பேசிட்டுப் போயிருக்கலாம்.

குருடு, நொண்டி, ஊமைன்னு வார்த்தைகள் இருக்கக் கூடாதுன்னுதான் மாற்றுத்திறனாளிகள்னு மொழியை சீராக்கினோம். ஒரு தலைமுறை தொலைத்துக் கொண்டிருக்கும் சொல்லை இப்படி பொது மேடையில் பேசும் போது கவனம் வேண்டுமல்லவா?

வலிந்து பேசியதோ வாய்த்தவறிப் பேசியதோ நம் எண்ணங்களில் இருந்தே சில சொற்களைத் தூக்கி எறிதல் அவசியம்!” என்று பதிவுகளும் வரத்தொடங்கின.

இந்த சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசாமல் அமைதியாக இருந்ததற்கு என்ன காரணம்? அண்மையில் அவர் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டுக்கும் விஜய்யின் அமைதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

தொடர்பு இருக்கிறது என்பதை விஜய்யின் பேச்சிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

“அப்போது (20 வருடத்துக்கு முன்பு) ரெய்டு எல்லாம் இல்லாமல் பீஸ்ஃபுல்லா இருந்தேன்.” என்பதிலிருந்தே தற்போது ஐடி ரெய்டினால் விஜய் அமைதி இழந்திருக்கிறார்.

“உண்மையாக இருக்கணும்னா சில நேரத்தில ஊமையா இருக்க வேண்டியதாக இருக்கு” என்ற அவரது பேச்சும்கூட ஐடி ரெய்டு கொடுத்த படிப்பினை என்றே தோன்றுகிறது.

– ஜெ.பிஸ்மி