விநாயகர் சதுர்த்தி…. ஆயுதபூஜை…. தீபாவளி…. கிருஸ்துமஸ்… பொங்கல்… – விடுமுறையை நோக்கி ஓடும் சிவகார்த்திகேயன்…

1133

தன்னுடைய மார்கெட் சூடுபிடித்ததும், இனிமேல் வெளி தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுவதில்லை என்றும் சொந்தபேனரில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்த சிவகார்த்திகேயன், தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து 24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார்.

முதல் தயாரிப்பாக ரெமோ படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயன், தொடர்விடுமுறை நாளை குறிவைத்து கடந்த வருடம் அக்டோபர் 7 அன்று ரெமோ படத்தை வெளியிட்டார்.

எதிர்பார்த்த அளவுக்கு ரெமோ படத்தில் விஷயம் இல்லை என்றாலும், விடுமுறை தினத்தில் படத்தை வெளியிட்டதால் அரங்குகள் நிறைந்தன.

இதே யுத்தியில் தனது அடுத்த தயாரிப்பான வேலைக்காரன் படத்தையும் வெளியிட திட்டமிட்ட சிவகார்த்திகேயன், விநாயகர் சதுர்த்தி அன்று நாள் குறித்தார்.

அடுத்தடுத்து விடுமுறைநாட்கள் என்பதால், ரெமோ படத்தைப் போலவே வேலைக்காரனுக்கும் கல்லா கட்டிவிடலாம் என்ற கனவில் இருந்தார்.

அவரது கனவில் மண்ணைப்போட்டது விவேகம்.

சிவகார்த்திகேயன் திட்டமிட்ட தேதியில் விவேகம் படம் வெளியானதால், வேலைக்காரன் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறைக்கு தள்ளி வைத்தார்.

ஆயுதபூஜைக்கு கருப்பன், ஸ்பைடர் ஆகிய படங்களும் களத்தில் குதிக்க, சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து நயன்தாராவின் ‘அறம்’, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘செம’, சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மஹாதேவகி’, ஜெய்யின் ‘பலூன்’, அர்விந்த்சாமியின் ‘சதுரங்கவேட்டை 2’ ஆகிய படங்களும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக செய்திகள் வர ஆரம்பித்ததும், ‘வேலைக்காரன்’ படத்தை தீபாவளிக்கு தள்ளி வைத்தார் சிவகார்த்திகேயன்.

தீபாவளிக்கு விஜய் நடித்த மெர்சல் படம் வெளியாகவிருப்பதால் வேலைக்காரன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது… அதனால் நிச்சயமாக நஷ்டம் ஏற்படும் என விநியோகஸ்தர்கள் எச்சரித்தனர்.

எனவே, தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தை கைவிட்டு, டிசம்பருக்கு தள்ளி வைத்துவிட்டதாக தகவல் வெளியானது.

லேட்டஸ்ட் தகவலின்படி… வேலைக்காரன் படம் கிருஸ்துமஸ் விடுமுறையிலும் வெளியாகவில்லை.

யெஸ்… அடுத்த வருட பொங்கலுக்கு ‘வேலைக்காரன்’ படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது.

காரணம்… கிருஸ்துமஸ் விடுறையை முன்னிட்டு நிறைய படங்கள் வெளிவந்தால் வேலைக்காரன் படம் வேலைக்கு ஆகாமல் போய்விடும் என்ற பயம்தான்.

அது மட்டுமல்ல, ரஜினி முருகன் படம் 2015 பொங்கலுக்கு வெளியாகி கமர்ஷியலாக வெற்றி பெற்றது.

இந்த சென்ட்டிமென்ட் காரணமாகவும் வேலைக்காரன் படத்தை 2018 பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்தாராம் சிவகார்த்திகேயன்.

பொங்கலுக்கு வேறு பெரிய ஹீரோக்கள் படம் வெளியானால் சிவகார்த்திகேயன் என்ன செய்வாரோ?

– ஜெ.பிஸ்மி