வேலைக்காரன் படத்தில் பஞ்சாயத்து…. இயக்குநருடன் மோதிய எடிட்டர் மாற்றம்…

1708

தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் – ‘வேலைக்காரன்’.

ஜெயம் ராஜா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் பண நெருக்கடி காரணமாக சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டதாக செய்திகள் அடிபட்டன.

தற்போது பணப்பிரச்சனை சரியாகிவிட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைக்காரன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் பாடல்காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்.

இதற்கிடையில் வேலைக்காரன் படத்தின் இயக்குநர் ஜெயம்ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனுக்கும் தகராறு ஏற்பட்டு அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

வேலைக்காரன் படத்தில் இயக்குநராக கமிட்டானபோது தனி ஒருவன் படத்தின் எடிட்டர்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டார் ஜெயம் ராஜா.

தயாரிப்பாளர் தரப்போ விவேக் ஹர்ஷனை எடிட்டராக வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதால், வேறுவழியில்லாமல் மண்டையை ஆட்டிவிட்டார் ஜெயம்ராஜா.

வேலைக்காரன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து விவேக் ஹர்ஷன்தான் எடிட்டராக பணிபுரிந்து வந்தார்.

வேலைக்காரன் படத்தை பல தடவை எடிட் பண்ணிய பிறகும் படத்தின் நீளம் குறையவில்லை.

கடைசியா, நாலரை மணி நேரத்துக்கு ஓடும்வகையில் படு நீ……………………ளமாக இருந்தது.

இது தொடர்பாக இயக்குநர் ஜெயம்ராஜாவுக்கும் எடிட்டர் விவேக்ஹர்ஷனுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் தலையிட்டு அவ்வப்போது சமானப்படுத்தி வைத்திருக்கிறார்.

ஆனாலும் ஒருகட்டத்தில் பிரச்சனை பெரிய அளவில் வெடித்திருக்கிறது.

இயக்குநர் ஜெயம்ராஜா பற்றி தயாரிப்பாளரிடம் எடிட்டர் விவேக் ஹர்ஷன் தவறான தகவல்களை சொன்னதாகவும், அதைக் கேட்டு தயாரிப்பாளர் ராஜா இயக்குநரிடம் கோபமுகம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, விவேக் ஹர்ஷன் எடிட்டராக இருந்தால் வேலைக்காரன் படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் ஜெயம்ராஜா.

தொடர்ந்து நடைபெற்ற பஞ்சாயத்தில் வேலைக்காரன் படத்தில் இதுவரை எடிட்டராக வேலைபார்த்துவந்த விவேக் ஹர்ஷனை நீக்கிவிட்டனர்.

இப்போது வேலைக்காரன் படத்தின் எடிட்டராக ரூபன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.