சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியீடு!

1682

ஜூலை 31 அன்று ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் – அப்பாடக்கர், விஜய்சேதுபதி நடித்த ஆரஞ்சுமிட்டாய், விக்ரம்பிரபு நடித்த இது என்ன மாயம் உட்பட அரை டஜன் படங்கள் வெளிவருவதாக பேச்சு அடிபடுகிறது.

அதோடு, ஜூலை 17 அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையினால் வெளிவராமல்போன வாலு படத்தையும் ஜூலை 31 அன்று வெளியிட டி.ராஜேந்தர் தீவிரமான முயற்சியில் இருக்கிறார்.

இதற்கிடையில் அதே தினத்தில் வேறு சில படங்களும் வருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

அவற்றில் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மமன் படமும் ஒன்று…

இந்தப் படத்தை ராஜ் டிவி நிறுவனம் வெளியிடுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட ஏகப்பட்ட பழைய திரைப்படங்களின் உரிமை ராஜ் டிவியின் வசம் உள்ளது.

ராஜ் டிவியிடமிருந்து உரிமை பெற்று கடந்த வருடம் கர்ணன் படத்தை வெளியிட்டார் ஒரு விநியோகஸ்தர்.

டிஜிட்டலில் வெளியிடப்பட்ட கர்ணன் படத்தைப் பார்க்க மக்கள் படையெடுத்தனர்.

சில லட்சங்கள் கொடுத்து ராஜ் டிவியிடமிருந்து உரிமை பெற்றவருக்கு பல கோடிகள் லாபம் கிடைத்தது.

அதைப்பார்த்து வயிறு எரிந்த ராஜ் டிவி நிறுவனம், அப்போதே ஒரு முடிவு எடுத்ததாம்.

தங்களிடம் உரிமம் உள்ள படங்களை இனி வேறு யாரிடமும் விற்காமல் தாங்களே வெளியிடுவது என்பதுதான் அந்த முடிவு.

அதன்படிதான் தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை ராஜ் டிவி வெளியிடுகிறது.

ஜூலை 31 அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்தால் அன்றைய நாள் சிறப்பான தினம்தான்.

சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் மட்டுமின்றி, அவரது மகன் பிரபு நடித்த சகலகலா வல்லவன் – அப்பாடக்கர், சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு நடித்த இது என்ன மாயம் ஆகிய படங்களும் அதே தினத்தில் வெளியாகின்றன.

என்ன ஒரு ஒற்றுமை!