மாணிக் பாட்ஷாவின் மறுபெயர் வேதாளம்? வேதாளம் சொல்லும் கதை…!

1418

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தொடங்கப்பட்ட நாள் முதலே அப்படத்தின் கதை பற்றிய ஹேஸ்யங்களுக்குக் குறைவில்லை.

தினம் தினம்…ஆளுக்கு ஒரு கதையை அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஊடகங்களும் தங்கள் பங்குக்கு கதைவிட்டுக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒரு கதையில் மட்டும் சின்னதாக லாஜிக் இருந்தது.

பாட்ஷா படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் என்பதே அந்த ஹேஸ்யம்.

இந்த தகவலை நம்புவதற்கு சில காரணங்கள் இருந்தன.

பாட்ஷா படத்தில் ரஜினியின் தங்கை மருத்துவக்கல்லூரியில் படிப்பார்.

மாணிக் பாட்ஷா என்ற பெயரில் மும்பையில் தாதாவாக இருந்த ரஜினி தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சென்னையில் மாணிக்கம் என்ற ஆட்டோ டிரைவராக இருப்பார்.

அஜித் நடிக்கும் வேதாளம் படத்தில், அவரது தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் கல்லூரி மாணவி.

இந்தப் படத்திலும் ப்ளாஷ்பேக் இருக்கிறது.

ப்ளாஷ்பேக் காட்சிகள் கொல்கத்தாவில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது பாட்ஷாவில் மும்பை, இந்தப் படத்தில் கொல்கத்தா.

இதுபோன்ற சின்னச் சின்ன ஒற்றுமைகளை வைத்தே இந்தப் படத்தின் கதையும் பாட்ஷா படத்தின் கதையும் ஒன்றதான் என்ற தகவல் வெளியானது.

தல 56 என்று சொல்லப்பட்டு வந்த இந்தப் படத்துக்கு நேற்றிரவு வேதாளம் என்ற பெயரை வைத்துள்ளனர்.

வேதாளம் என்று தலைப்பு வைத்த பிறகு, இது பாட்ஷா படத்தின் ரீமேக்தான் என்ற செய்திக்கு கூடுதல் அழுத்தம் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் ப்ளாஷ்பேக்கில் அஜித் ரௌடியாக நடித்திருக்கிறார். அந்த கேரக்டரின் பெயர் வேதாளம் என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், வேதாளம் என்ற தலைப்புக்கு அஜித் ஏற்று நடித்துள்ள கேரக்டர் மட்டும் காரணமல்ல, படத்தின் கதைக்கும் பொருத்தமாக இருப்பதால்தான் அதையே தலைப்பாக வைத்ததாக சிலர் சொல்கிறார்கள்.

ரௌடியாக வாழ்ந்த அஜித் எல்லாவற்றையும் விட்டொழித்துவிட்டு வேறு ஒரு ஊரில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பழைய பகையாளிகள் மீண்டும் துரத்த ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் மீண்டும் ரௌடியாகிறார் அஜித்.

அதாவது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது.