மனதின் போராட்டத்தை சொல்லும் பாடல்

0

புஷ்பநாதன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLP இணைந்து தயாரித்துள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மனித மனதில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள இந்த பாடல், தற்போது யூடியூபில் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் எப்படி இருக்கும்?” என்ற சிந்தனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், கோபத்தையும் வஞ்சத்தையும் நேர்மறை ஆற்றலாக மாற்றி, வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் வரிகளிலும் காட்சியமைப்பிலும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார் புஷ்பநாதன் ஆறுமுகம். வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்கள், வலிகள், நிராகரிப்புகள் போன்றவை பழிவாங்குவதற்கான காரணங்களாக அல்ல; மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதற்கான ஊக்கமாக மாற வேண்டும் என்ற வாழ்க்கைச் செய்தியை அவர் இந்தப் படைப்பின் மூலம் பதிவு செய்துள்ளார்.

முன்னணி இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய புஷ்பநாதன் ஆறுமுகம், தனது சொந்த அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

பிரபல இயக்குநரும் நடிகருமான அருண் ராஜா காமராஜ், இந்தப் பாடலைப் பாடியிருப்பதுடன், முற்றிலும் மாறுபட்ட “சாத்தான்” கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சிவப்பு நிற உடையுடன் சாத்தானை பிரதிபலிக்கும் அவரது தோற்றம், பாடல் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த வித்தியாசமான காட்சியமைப்பு சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ வழங்கியுள்ள இசை, பாடலின் கருத்துக்கு ஏற்ற துள்ளலுடனும் ஆற்றலுடனும் அமைந்துள்ளது. துடிப்பான பின்னணி இசை பாடலின் உணர்வை மேலும் உயர்த்துகிறது.

இந்தப் பாடலின் ஒளிப்பதிவை விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பை தின்சா, கலை இயக்கத்தை எஸ்.ஜி. திவாகர், நடன அமைப்பை சுரேந்திரன் ஜோ மேற்கொண்டுள்ளனர். மாங்கோ போஸ்ட் கலர் கிரேடிங் பணிகளையும், ரேமேக்ஸ் ஸ்டுடியோ மற்றும் பிக் செல் பேக்டரி நிறுவனங்கள் அனிமேஷன் பணிகளையும் சிறப்பாகச் செய்துள்ளன. மேலும், ஐஸ்வர்யா ரகுநாத் ஆடை வடிவமைப்பிலும், ரதி ராதிகா மேக்கப் வடிவமைப்பிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

மொத்தத்தில், “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல், பழிவாங்கும் எண்ணத்தை வெற்றியாக மாற்றும் வாழ்க்கைப் பாடத்தை வித்தியாசமான காட்சியமைப்பு, சக்திவாய்ந்த இசை மற்றும் வீரியமிக்க வரிகள் மூலம் சொல்லும் தரமான படைப்பாக உருவாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் பாடல், இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.