சீனு ராமசாமி படத்தில் இனி வைரமுத்து இல்லை…

1069

இளைய தலைமுறை பாடலாசிரியர்களின் திசைநோக்கி திரும்பிவிட்டது திரையுலகம்.

ஆனாலும், இன்னமும் சில இயக்குநர்கள் வைரமுத்துவை தேடிப்போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களில் இயக்குநர் சீனுராமசாமி முக்கியமானவர்.

சீனு ராமசாமியின் படங்களில்  வைரமுத்து நிச்சயமாக இருப்பார்.

அவரது வரிகள் சீனுராமசாமியின் படத்துக்கு மிகப்பெரிய பலமாகவும் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்  விஜய்சேதுபதியை வைத்து சீனுராமசாமி  இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக எழுதிய ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காக தேசிய விருது  பெற்றார் வைரமுத்து.

சீனுராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியபோது  யுவன்சங்கர்ராஜாவை இசையமைப்பாளராக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இளையராஜாவுக்கும்  வைரமுத்துவுக்கும் இடையிலான பல வருட பகை காரணமாக, இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து பாடல் எழுத யுவன் சங்கர் ராஜா உடன்பட மாட்டார் என்ற சூழல் ஏற்பட்டது.

வைரமுத்து இல்லாமல் இடம் பொருள் ஏவல்  படத்தை சீனுராமசாமியால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

உடனடியாய் களத்தில் இறங்கினார். யுவனையும், வைரமுத்துவையும் சந்திக்க வைத்தார். இடம் பொருள் ஏவல் படத்தில் புதிய கூட்டணியை உருவாக்கினார்.

அன்றைக்கு சீனுராமசாமி உருவாக்கிய யுவன்சங்கர்ராஜா – வைரமுத்து கூட்டணிதான் ‘தர்மதுரை’ படத்திலும் கை கோர்த்தது.

அவர்கள் உருவாக்கிய ‘எந்தப்பக்கம்’ என்ற பாடலுக்குத்தான்  வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

7 ஆவது முறையாக தேசிய விருது பெற்ற மகிழச்சியை பகிர்ந்து கொண்ட வைரமுத்து, பலருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஏனோ சீனு ராமசாமியை மறந்துவிட்டார்.

சீனு ராமசாமியின் பெயரை நன்றிப்பட்டியலில் வைரமுத்து உச்சரிக்க மறந்தது தற்செயலாகவும் இருக்கலாம்.

ஆனால், கவிஞர் தன்னை காயப்படுத்திவிட்டதாக எண்ணிய சீனு ராமசாமியின் மனசு புண்பட்டுவிட்டது.

தன் வருத்தத்தை நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த தகவலை சிலர் வைரமுத்துவின் காதிலும் போட்டிருக்கின்றனர்.

ஆனாலும் சீனு ராமசாமியை சமாதானப்படுத்த முனையவில்லை வைரமுத்து.

அதனால் இனி தன்னுடைய படங்களில் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சீனு ராமசாமி.