ஆறு வருடங்களுக்குப் பிறகு அர்ச்சனா

1581

மின்வெட்டு இல்லாத டவுன் என்ற காமெடியான விளம்பரத்தைத் தொடர்ந்து களமிறங்கியிருக்கிறது – புதுயுகம் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சியில் சினேகா, சிம்ரன் போன்ற ஆன்ட்டிகள் எல்லாம் ஆளுக்கொரு நிகழ்ச்சியில் தலைகாட்டுகிறார்கள். இந்தப்பட்டியலில் நடிகை அர்ச்சனாவும் உண்டு. கடந்த ஆறு வருடங்களாக எந்தவொரு சினிமாவிலும் நடிக்காமல் இருந்த இவர், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரைக்கு நடிக்க வருகிறார். இவரை ‘உணர்வுகள்’ என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அழைத்து வருகிறார்.

சுரேஷ் கிருஷ்ணா ஏற்கெனவே சன் டிவியில் ‘மகாபாரதம்’ என்ற தொடரை இயக்கினார். பிறகு என்ன காரணத்தினோலோ கழற்றிவிடப்பட்டார். இந்நிலையில்தான் புதுயுகம் தொலைக்காட்சியில் உணர்வுகள் தொடரை இயக்க வந்திருக்கிறார்.

உணர்வுகள்’ இது உங்களின் கதை… உங்களின் பிம்பம்… உங்களின் குடும்பம்…. உங்களின் உறவுகள்… உங்களை நீங்களே பார்க்கப்போகும் தொடர்தான் உணர்வுகள். சிரித்த தருணங்கள், ஆனந்த கண்ணீர் சிந்திய நிகழ்வுகள், இணைந்த உறவுகள், பிரிந்த உறவுகள், புரிந்து கொள்ள முடியாத உறவுகள், புதிய அர்த்தம் உணர்த்திய நிமிடங்கள் எல்லாம் கலந்ததுதான் ‘உணர்வுகள்’. சின்னத்திரை தொடர் பார்க்கும் உணர்வு இல்லாமல் வெள்ளித்திரையில் திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் தொடர்தான் ‘உணர்வுகள்’.
– என்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

தேனிசை தென்றல் தேவாவின் தாலாட்டும் இசையில், சஞ்சய் பி.லோக்நாத் ஒளிப்பதிவில், எல்.சேக்கிழார் திரைக்கதையில், ஜான் மகேந்திரன் வசனத்தில் திங்கட்கிழமை முதல் ‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.