டி.வி. சேனல்களுடன் மோதும் தயாரிப்பாளர் சங்கம்… – நஷ்டம் யாருக்கு?

1103

“அன்புள்ள திரைப்பட முதலாளிகளுக்கு,  நமது திரைப்படத்தின் பாடல்கள், காட்சிகள், ட்ரெய்லர் மற்றும் கடிதம் எதுவும் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் இன்று முதல் இலவசமாக தர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். மானம் காப்போம், வருமானம் பெருக்குவோம்”

இப்படி ஒரு செய்தி தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரில் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த தகவல், மீடியாக்களுக்கும் கசியவிடப்பட்டது.

பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியைப் பிடித்த நடிகர் விஷால் சுறுசுறுப்பாகிவிட்டார் போலிருக்கிறது என்ற எண்ணத்தில், தமிழ்த்திரையுலகில் என்ன நடக்கிறது? என்று விசாரித்தோம்.

சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில்,  வெற்றி பெற்ற விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’ அணியினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறார்களாம்.

அதில் ஒன்றுதான்… தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இனிமேல் பணமின்றி படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ட்ரெய்லர்களை கொடுப்பது இல்லை என்பதும்.

“சமீபகாலமாக எந்ததொரு படத்தின் தொலைக்காட்சி உரிமையும் விற்கவில்லை. மேலும், தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்து தயாரித்து, தொலைக்காட்சி உரிமையை வாங்க ஆளில்லை. ஆனால் இலவசமாக அப்படத்தின் பாடல் காட்சிகள், படக் காட்சிகள், ட்ரெய்லர் மட்டும் கொடுக்கிறோம். நியூஸ் சேனல் என்கிற செய்தி தொலைக்காட்சிகளில் 30 நிமிடங்கள் மட்டும்தான் சினிமாவுக்கு  நேரம் ஒதுக்குகிறார்கள். அதனால் எந்த ஒரு நன்மையும் இல்லை. ஆகவேதான் இப்படி ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம்” என்று இந்த முடிவு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு முடிவை தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த காலங்களில் பலமுறை எடுத்துள்ளனர்.

சிறுபட தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிரான இந்த முடிவு தோல்வியையே தழுவி இருக்கிறது.

இந்தமுறையும் அதுவேதான் நடக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, இந்த முடிவு குறித்து சிறு படத்தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

“ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமையை எந்த தொலைக்காட்சி நிறுவனம் வாங்குகிறதோ அவர்களுக்கு மட்டும் பாடல் காட்சிகள், படக் காட்சிகள், ட்ரெய்லர்  என அனைத்தையும் கொடுக்கலாம் என்கிறார்கள். இந்த முடிவால் பலன் அடையப்போவது பெரிய பட்ஜெட் படங்கள்தான். பெரிய பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை நிச்சயமாக ஏதாவது ஒரு சேனல் வாங்கிவிடும். அதனால் அந்தப் படத்துக்கு டிவியில் பப்ளிசிட்டி கிடைத்துவிடும். சிறு பட்ஜெட் படங்களை எந்த சேனலும் வாங்குவதில்லை. அதனால் எந்த டிவிக்கும் பாடல் காட்சிகள், படக் காட்சிகள், ட்ரெய்லர்  என எதையுமே கொடுக்க முடியாது. அதனால் பாதிக்கப்படப்போவது சிறு பட்ஜெட் படங்கள்தான்” என்று  தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதியமுடிவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

தொலைக்காட்சி நிறுவனங்களுடன் மோதல்போக்கை தொடங்கி வைத்த தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளே இன்னொரு பக்கம், கொல்லைப்புற வழியாக சேனல் நிர்வாகத்துடன் ரகசிய ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டதெல்லாம் கடந்தகாலத்தில் நடந்துள்ளன.

அதே காட்சிகளை இப்போதும் எதிர்பார்க்கலாம்.