நான்கில், மூன்று முக்கியமான படங்கள்…

1278

பன்றி, கணக்கில்லாமல் குட்டிகளைப் போடுவதுபோல், எந்த வரைமுறையும் இல்லாமல், வாரம்வாரம் எக்கச்சக்கமான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் பல படங்கள் டிஜிட்டல் குப்பைகள். பத்து பைசாவுக்கு போறாத படங்கள்.

உதயநிதி நடித்த சரவணன் இருக்க பயமேன், ஜெயப்பிரகாஷ் இயக்கிய லென்ஸ், கலைஅரசன் நடித்துள்ள எய்தவன், ஹரியின் உதவியாளர் கே.ஜி. வீரமணி இயக்கியுள்ள திறப்பு விழா என இந்த வாரமும் சில படங்கள் வெளியாகின்றன.

இவற்றில் உதயநிதி நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

காமெடி என்ற பெயரில் மலிவான காட்சிகளை உள்ளடக்கிய மசாலாப்படம்.

lensஇந்தப் படத்தினால் மக்களுக்கோ, சமூகத்துக்கோ பைசா பிரயோஜனமில்லை. படம் பார்க்கும் ரசிகனுக்குத்தான் பணமும், நேரமும் நஷ்டம்.

மற்ற மூன்று படங்கள் பற்றி இப்படி மதிப்பிட முடியாது. கூடாது.

மிக அபூர்வமாக, சமூகத்துக்கு முக்கியமான செய்தியைத் தாங்கி வரும் மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் மே-12 குறிப்பிடத்தக்க நாள்.

சினிமா அனுபவம் இல்லாத ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் இயக்கிய படம் – லென்ஸ்.

எந்நேரமும் இணையவெளியில் உலவும் இளைஞர்களுக்கு மிக அவசியமான படம்.

முக்கியமாக, பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

 

காக்கா முட்டை படத்தை மார்க்கெட்டிங் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தது போல் இயக்குநர் வெற்றிமாறன் லென்ஸ் படத்தையும் வாங்கி, மினி ஸ்டுடியோவின் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

கோடிகோடியாய் கட்டணம் வசூலிக்கும் கல்விக் கொள்ளையர்கள் மலிந்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கலைஅரசன் நடித்த எய்தவன் படம் கல்விக்கொள்ளையர்களைப் பற்றி பேசுகிற படம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற படம்.

Thirappu Vizha Movie Stills

திறப்பு விழா என்ற பொருந்தாத தலைப்பில் எடுக்கப்பட்டாலும், டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக மக்கள் பேராடுகிற கதையம்சம் கொண்ட படம் இது.

மதுக்கடைக்கு எதிராக தீக்குளித்து உயிர்நீத்த ஒரு வீரத்தமிழச்சியின் கதை.

மனமும், பணமும் இருந்தால் மூன்று படங்களையும் பாருங்கள்.

நல்ல படம் பார்த்த திருப்தியுடன், நல்ல படங்களை ஆதரித்த மனநிறைவும் கூடுதலாக கிடைக்கும்.