கோஷ்டிப்பூசலில் காங்கிரஸ் கட்சிக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல – தி.மு.க.
குறிப்பாக, மாவட்ட அளவில் நடக்கும் கோஷ்டி மோதலை, தி.மு.க. தலைமை யினாலேயே கட்டுப்படுத்த முடிந்ததில்லை – கடந்த காலங்களில்.
எதிரெதிர் துருவங்களாக நிற்கும் மாவட்ட நிர்வாகிகளை சமாதானப் படுத்துவதற்காகவே, மாவட்டங்களை எல்லாம் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு, நகரம், புறநகர் என்று கூறுபோட்டு, ஏகப்பட்ட மாவட்ட செயலாளர் பதவிகள் திமுகவில் உருவாக்கப்பட்டன.
அப்படி உருவாக்கப்பட்ட பதவிகளை கோஷ்டிகளை வளர்த்துக்கொண்டு மல்லுக் கட்டியவர்களுக்கு வழங்கியது திமுக தலைமை. அதன் பிறகாவது இவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்பது தலைமையின் எண்ணம்… எதிர்பார்ப்பு
ஆனால், நடந்ததோ வேறு.
மாவட்டச் செயலாளர் பதவியை வாரி இறைத்த பிறகும் கூட மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் சமாதானம் ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கையான உண்மை.
தன்னுடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்கு மாறாக, தன்னுடைய அரசியல் எதிரியை எப்படி ஒழித்துக்கட்டுவது என்று உறுமிக் கொண்டேதான் இருக்கின்றனர்.
இப்படி எதிரும்புதிருமாக இருந்தவர்களுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தால் என்னாகும்?
அமைச்சர் என்கிற அதிகாரம் வந்து சேர்ந்த பிறகு முன்னைவிட வலிமையாக வாளை சுழற்றிக்கொண்டிருக்கின்றனர்.
ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இந்த கோஷ்டிப்பூசல் மிகப்பெரிய மோதலாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
மதுரை, திருநெல்வேலி, திருச்சி உட்பட பல மாவட்டங்களில் இந்தப் பிரச்சனைகள் இருந்தாலும், உச்சத்தில் இருப்பது தூத்துகுடி மாவட்டம்தான்.
தூத்துகுடி மாவட்ட திமுகவில் இரண்டு அதிகார மையங்கள். ஒருவர் அனிதா ராதாகிருஷ்ணன். இன்னொருவர் கீதாஜீவன்.
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் பெரியசாமி.
சுமார் 30 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த பெரியசாமி, காலமான பிறகு தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக கீதா ஜீவன் நியமிக்கப்பட்டார்.
அதுவரை தெற்கு மாவட்ட எல்லைக்குள் இருந்த தூத்துக்குடியை வடக்கு மாவட்ட நிர்வாகத்தோடு திமுக இணைத்தது.
அதாவது தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை வடக்கு மாவட்டம் என்றும், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை தெற்கு மாவட்டமாகவும் நிர்வாக ரீதியாக பிரித்தது திமுக தலைமை.
நிர்வாகவசதிக்காக இப்படி பிரிக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்தாலும் உண்மையான காரணம்… அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவனுக்கு இடையிலான கோஷ்டி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான்.
இத்தனைக்குப் பிறகும் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவனுக்கு இடையிலான முட்டல் மோதல் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதுதான் தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் இருவருமே செல்வாக்கில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதாலலேயே இரண்டுபேருக்கும் கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டது.
இருவரும் வெற்றிபெற்றநிலையில் ஒருவருக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்தால், அது தலைமைக்கே மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும் என்பதால் இருவருக்குமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீன்வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறைகளும், கீதாஜீவனுக்கு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறைகளும் ஒதுக்கப்பட்டன.
தங்களுடைய இலாக்காக்களை கவனித்துக்கொண்டும், தங்களுடைய தொகுதி மக்களின் நலனை கவனித்துக்கொண்டும் இருந்தாலே இவர்களுக்கு 24 மணி நேரம் போதாது. ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், அமைச்சர் கீதாஜீவனும் வழக்கம்போல் ஒருவர்மீதுஒருவர்
புகார்பட்டியலை வாசித்துக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவித்துக்கொண்டிருப்பது தூத்துக்குடி திமுக தொண்டர்கள் மட்டுமல்ல, தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழியும்தான்.
கனிமொழி எப்போது தூத்துக்குடி வந்தாலும் தொகுதி பிரச்சனைகளையை தீர்ப்பதைவிட, அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், கீதாஜீவனுக்கும் இடையிலான சண்டையை தீர்ப்பதே முக்கிய வேலையாக இருக்கிறது.
அனிதா ராதாகிருஷ்ணன் மீது கீதாஜீவன் சொல்லும் குற்றச்சாட்டுகளையும், கீதாஜீவன் மீது அனிதா ராதாகிருஷ்ணன் சொல்லும் குற்றச்சாட்டுக்களையும் கேட்டு கேட்டு தலைகிறுகிறுத்து கிடக்கிறார் கனிமொழி.
இவர்களுடைய பிரச்சனையை கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காகவா தூத்துக்குடி எம்பி ஆனேன்? என்று கனிமொழி தன் சகாக்களிடம் வருத்தப்பட்டதாகவும் கேள்வி.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து இப்படி என்றால், திருநெல்வேலி, மதுரை, திருச்சி மாவட்ட அமைச்சர்கள் இடையே நடக்கும் கோஷ்டிப்பூசல்களும் அத தொடர்பான பஞ்சாயத்துகளும் வேற லெவல்.
காணொலி வடிவத்தில் காண…