ஜோக்கர் இயக்குநர் ராஜு முருகனின் தந்திரம்…

708

‘குக்கூ’ ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், காயத்ரி கிருஷ்ணா, ரம்யா பாண்டியன், மு.ராமசாமி, பவா செல்லதுரை உட்பட பலர் நடித்திருக்கும் படம் – ‘ஜோக்கர்’.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

செழியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘ஜோக்கர்’ படத்திற்கு விமர்சன ரீதியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதே நேரம் ஓப்பனிங் இல்லாமல் வசூல் சற்று  குறைவாக இருந்தது.

பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியான பாஸிட்டிவ்வான விமர்சனம் காரணமாக ஜோக்கர் படத்துக்கு தற்போது நாளுக்கு நாள் வரவேற்பு கூடிக் கொண்டே வருகிறது.

படம் வெளியான முதல் நாளைவிட இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஜோக்கர் படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாக படக்குழுவினர் சொல்கின்றனர்.

அதோடு, ‘ஜோக்கர்’ படத்திற்கான திரையரங்கங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள், விமர்சகர்கள் என பல தரப்பினரது பாராட்டுக்களையும் பெற்று வரும் ஜோக்கர் படத்தை, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போன நடிகர் தனுஷ், ‘‘ஜோக்கர்..- யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள்!’’ என்று  ‘ஜோக்கர்’ பற்றி ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஜோக்கர் படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.

ஜோக்கரை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்ன சொன்னார்?

“ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள் அதன் அடிப்படையில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராம புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம்.

ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள் பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார்.

இதிலே கதாநாயகனாக வருகிற குரு சோம சுந்தரம் சராசரி மனிதனாக இல்லாமல் மனநலம் பாத்திக்கப்பட்ட மனிதன் போல் நடந்து கொள்கிறார் இது தான் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

மனநலம் பாதிக்கப்படவனாக அல்லது பிறரால் இவன் ஒரு ஜோக்கர் என்று பார்க்ககூடிய வகையில் அந்த கதாபாத்திரத்தை படைத்திருப்பது தான் இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் செயல் தந்திரம் அல்லது ஒரூ தொழில் நுட்பம். அப்படி ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததால் தான் அவரால் இப்படி ஒரு செய்தியை பேச முடிந்தது.

அரசாங்கத்தை , அரசாங்க செயல்பாடுகளையும் அதனால் விளைகிற ஊழல் போன்ற தீங்குகளையும் மிகத்துணிச்சலாக இதிலே பேசி இருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு கோணத்தில் பார்க்கின்ற போது கேளிக்கூரியதாக இருக்கிறது என்றாலும் இதை எப்படியாவது சொல்லி தான் தீரவேண்டும், இந்த பிரச்சனைகளை பேசி தான் தீர வேண்டும் என்பதற்கு இந்த ஜோக்கர் இயக்குனருக்கு தேவைப்படுகிறார்.

இந்த ஜோக்கர் அவருக்கு கை கொடுத்திருக்கிறார்.

ராஜு முருகனின் தந்திரத்தை நாம் நெஞ்சார பாராட்ட வேண்டும். அவருடைய அந்த யுக்தி பாராட்டுதலுக்குரியது.

ஒரு ஜோக்கரின் மூலம் பல செய்திகளை இயக்குநர் கூறுகிறார்.

அவர் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறுவதும், அவர் இராணுவ ஆட்சியை இங்கே அமல்படுத்துவதாக அறிவித்து கொள்வதும் அதன் அடிப்படையில் அவர் செய்கிற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தில் தேவையாக உள்ளன. இப்படி பட்ட போராட்டம் தேவையாக உள்ளது.

ஆனால் அவர்கள் ஒரு தனி கட்சியாக ஒரு மாபெரும் அமைப்பாக இருந்து போராடாமல் உதிரியாக இருந்து ஓரிருவர் போராடுவதாக இந்த படம் விரிகிறது. அகவே தனி நபராக இருந்து எவ்வளவு பெரிய விஷயத்துக்காக போராடினாலும் அது நகைப்புக்கூரியதாக –பார்க்கப்படும் என்று இப்படம் சொல்லுகிறது.

எனவே மக்கள் போர் குணத்தோடு இருந்தால் போதாது ஒரு அமைப்பை திரள வேண்டும் அமைப்பை திரண்டால் தான் சமூகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்வதற்கு , மக்களை நல்வழிபடுத்துவதற்கு நெறிபடுத்துவதற்கு தேவையானதாக இருக்கிறது அமைப்பால் மட்டும் தான் மாற்றங்களை கொண்டு வர முடியும்.மக்கள் அமைப்பாக வேண்டும் என்பதையும் அவர் படத்தின் இறுதி நொடிகளில் பேசுகிறார். அமைப்பாக இருந்து போராட வேண்டும் என்கிற வகையில் அவர் படத்தை முடிக்கிறார்.

நாயகனின் உதவியாளராக உள்ள இசை என்கிற பெண் நாயகனின் இறப்புக்கு பின்னர் அவருடைய மனைவியும் இறந்த பிறகு மறுபடியும் அவர்கள் போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்பதை நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா என்று கூறுவது போல் இப்படம் நிறைவடைகிறது. ஆதலால் நாம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் அரசியல் சக்தியாக இருந்து போராட வேண்டும் என்பதைநமக்கு நினைவுபடுத்துகிறது.

இயக்குநருக்கு மிகச்சிறந்த அரசியல் புரிதலும் , தொலைநோக்கு பார்வையும் , சமூக சிந்தனையும் , மக்கள் நலனும் இருக்கிறது என்பதை இந்த படத்தின் ஊடாக அவர் பதிவுசெய்துள்ளார். இந்த இளம் இயக்குநர் இன்னும் பல மகத்தான சாதனைகளை படைக்க வேண்டும். இந்த படம் மிகப்பெரிய செய்திகளை பேசும் ஒரு படம் , இந்த படம் ஒரு மௌன புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது , மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்த படம் சமூக தளத்தில் அரசியல் தளத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாழ்க இளம் இயக்குநர் ராஜு முருகன் மற்றும் அவரோடு கைகோர்த்து களமாடிய அனைத்து கலைஞர்களுக்கும்” என்றார் திரு. திருமாவளவன்.