மூன்றாவதாக ஒப்பந்தமாகி, முதலாவதாக ரிலீஸாகும் படம்…

1115

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில்  எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக, ரெஜினா நடித்திருக்கிறார்.

இன்னொரு கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சூரி, மனோபாலா, லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், யோகி பாபு, மன்சூரலிகான், சாம்ஸ், ரவிமரியா என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படத்தொகுப்பை ஆனந்தலிங்க குமார் கவனித்துள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி பண்பலை வானொலிகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

மே 12ஆம் தேதி திரைக்கு வருகிறது – சரவணன் இருக்க பயமேன்.

படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டநிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் சரவணன் இருக்க பயமேன் படக்குழுவினர்..

“நான் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன், அதனாலேயே பார்த்த உடனே நடிப்பில் யார் தேறுவார்கள் என சொல்லி விடுவேன். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் படங்கள் பார்த்திருக்கிறேன், அவர் பெரிய ஹீரோவாக நிச்சயம் வருவார். ரெஜினா கஸாண்ட்ரா சிறந்த நடிகை. அவர் தமிழ் சினிமாவின் ஜூலியா ராபர்ட்ஸ்” என்று கலகலப்பாக பேசினார் நடிகர் லிவிங்ஸ்டன்.

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கிடைத்த அளவுக்கு இந்த படத்தில் எனக்கு தீனி இல்லை. ஒரிரண்டு சீன்கள் தான் என்றாலும் எழில் படம் என்பதால் மட்டுமே நடித்தேன். வசந்தபாலன் எனக்கு கடவுள், இயக்குனராக இருந்த என்னை நடிகராக்கியவர். எனக்கு காமெடியும் வரும் என்பதை எனக்கு உணர்த்தியவர் என் அண்ணன் இயக்குனர் எழில்.

அதனால் தான் ஒரு சீன் என்றாலும் நான் நடிக்கிறேன்.  உதயநிதி ஸ்டாலின் பெரிய குடும்பத்தின் வாரிசு என்றாலும் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். நல்ல மனிதர்” என்றார் நடிகர் ரவி மரியா.

“பல முக்கியமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது மானிட்டரில் மிகவும் அமைதியாக அமர்ந்திப்பார் இயக்குனர்  எழில். அவர் பொறுமைசாலி மட்டும் இல்லை, புத்திசாலி.

எடிட்டிங் தெரிந்த ஒரு இயக்குனர். அதுதான் இயக்குனர் எழிலின் வெற்றிக்கான முக்கிய காரணம். நல்ல இயக்குனர்கள் இங்கு அதிகமாக இல்லை. எழில் மாதிரி குறைந்தபட்சம் 10 இயக்குனர்கள் தற்போதைய தமிழ் சினிமாவுக்கு தேவை.” என்றார் இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார்.

“இது தான் கதையா? என்ற ரீதியில் ஒரு மெல்லிய கதையை சொல்லுவார் இயக்குனர் எழில். ஆனால் படமாக பார்க்கும்போது மிகவும் பிரமாதமான படமாக எடுத்து வைத்திருப்பார். அப்படி நான் நினைத்த நான்கு படங்களும் சூப்பர் ஹிட். அந்த மாதிரி  இந்த படமும் பெரிய வெற்றி பெறும். ”என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.

“இதுநாள் வரை பரோட்டா சூரியாக எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்திருந்தார் சுசீந்திரன். அதை உடைத்து எனக்கு புஷ்பா புருஷன் என்ற புதிய அடையாளத்தை கொடுத்தவர் சுசீந்திரனின் குரு எழில். ஷூட்டிங்கில் நடிக்கும் நாங்கள் எவ்வளவு எக்ஸ்ட்ராவா பேசினாலும் அதை அனுமதிப்பார் இயக்குனர் எழில். அவருக்கு தெரியும் எதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று. உதயநிதி சின்சியரான நடிகர், நல்ல மனசுக்காரர். ரெஜினா பாடல் ஒன்ஸ் மோர் கேட்கும் வகையில் வந்திருக்கிறது. அதுவே 50 நாட்கள் வரை ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வரும்” என்றார் நடிகர் சூரி.

“இமானும், யுகபாரதியும் சேர்ந்துட்டாலே தன்னால சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும்.”என்றார் இயக்குனர் எழில்.

“எம்புட்டு இருக்குது ஆசை என்ற பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு இவ்ளோவ் பெரிசா பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினாதான். நான் மூணாவதா ஒப்பந்தமான படம் தான் சரவணன் இருக்க பயமேன். ஆனா முதல்ல ரிலீஸ் ஆகுது, அது தான் எழில் சாரின் வேகம். படம் பார்த்துட்டு நல்லா இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க, இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க” என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.