திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்ட தெறி… திருப்பூர் சுப்பிரமணியனுக்கு தொடர்பு உண்டா?

938

கலைப்புலி தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த ‘தெறி’ படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது.

செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் சுமார் 45 தியேட்டர்களில் ‘தெறி’ படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.

அந்த ஏரியாவின் தியேட்டர் அதிபர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் சுமார் 50 லட்சம் கேட்டதாகவும், அதற்கு தாணு மறுத்துவிட்டதால் தெறி படத்தை வெளியிட முடியாதபடி சிக்கலை ஏற்படுத்திவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், கோவையில் உள்ள சாந்தி திரையரங்கில் பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்தினைச் சார்ந்தவர்கள் ‘தெறி’ படத்தின் முதல் 30 நிமிடக் காட்சிகள் திருட்டுத்தனமாக பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுவிட்டநிலையில், சென்னை ஃபிலிம் சேம்பரில் தயாரிப்பாளர் தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அந்த சந்திப்பின்போது ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

‘‘தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வெளிவந்துள்ள ‘தெறி’ படத்தை கோவையில் உள்ள சாந்தி திரையரங்கில் பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்தினைச் சார்ந்தவர்கள் கேமரா வைத்து படத்தினை பதிவு செய்ததை, ரசிகர் மன்றத்தினைச் சார்ந்தவர்கள் பார்த்து அவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் இதுவரை நடந்திராத வகையில், தொலைக்காட்சி நிறுவனத்தினைச் சார்ந்தவர்களே படத்தை திருட்டு விசிடி தயாரிக்க முனைந்துள்ளது திரையுலகைச் சார்ந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொழில் துரோகம் செய்த அந்த பாலிமர் தொலைக்காட்சியை திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, கோவை சாந்தி தியேட்டர் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான தியேட்டர்.

அவருக்கு தெரியாமல் அந்தத் தியேட்டரில் இப்படி ஒரு காரியம் நடைபெற வாய்ப்பே இல்லை.

லிங்கா நஷ்டஈடு விவகாரம் தொடர்பாக தாணுவுக்கும்,  திருப்பூர் சுப்பிரமணியத்துக்கும் இடையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

எனவே தாணுவை காலி பண்ண திருப்பூர் சுப்பிரமணியனே  பாலிமர் தொலைக்காட்சி ஆட்களை வைத்து தெறி படத்தை பதிவு  செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் திரையுலகில் உள்ள சிலர் எழுப்புகின்றனர்.