பாலசந்தரிடம் குட்டு… பாரதிராஜாவிடம் திட்டு… பாக்யராஜிடம் கிள்ளு…

1219

தென்னிந்தியாவில் film projection திரைப்படத்திரையிடலை முதல் முதலாகக் கொண்டு வந்த வின்செண்ட் சாமிக்கண்ணுவின் பிறந்த நாளான ஏப்ரல் 18, திரையரங்கு தினமாகக் கொண்டாடப்பட்டது.

இதை முன்னெடுத்த  திருநாவுக்கரசு பேசும்போது, “விகடன்ல வின்செண்ட் சாமிக்கண்ணு பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு பிரமித்துப் போனேன்.

இன்றைக்கு நம் கையில் இருக்கும் பொழுதுபோக்கு சாதனம் மொபைல். ஆகவே திரையரங்குகளுக்கு வருவது குறைந்து போய்விட்டடது. ஆனாலும் இன்றைக்கும் எல்லோரும் வந்து மகிழ்வாகத் திரும்பிச் செல்லும் இடம் திரையரங்கம் தான்.

அந்த வகையில் திரையரங்குகளை நமக்கு அறிமுகப்படுத்திய வின்செண்ட் சாமிக்கண்ணு நினைவாக 2014 ல் சிறிதாக இந்த திரையரங்கு தினக் கொண்டாட்டத்தை  ஆரம்பித்தேன்.

ஆங்காங்கே சிறிய அளவில் நடத்தினோம். F N entertainment செந்தில் வினாயகம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

வாகை சூடவா படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்று பலரும் சொன்னதையடுத்து இந்த நிகழ்ச்சியை அந்தப் படத்தைத் திரையிடுதல் மூலம் திரையரங்கு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்…” என்றார்.

1914 இல் கோவையில் வின்செண்ட் சாமிக்கண்ணுவால் தொடங்கப்பட்ட டிலைட் திரையரங்கம் 100 ஆண்டுகளைக் கடந்து கோவையின் கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சங்கர், “ 30 வருடங்களுக்கு முன் திரையரங்குக்குப் போவது என்றாலே சந்தோஷமாக இருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் 5க்கும் குறைவாகப் பிள்ளைகளின் எண்ணிக்கை இருக்கும்… எங்க வீட்டில் 10 பேர்.. ஆனாலும் குடும்பத்தோடு திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்போம்.. ஆனால், இன்று 2-3 பேர் சென்றாலே 1000 ரூ செலவாகிறது. இண்டெர்நெட் இலவசமாகக் கிடைப்பதால் பலரும் மொபைலிலேயே படங்கள் பார்த்து விடுகிறார்கள். இதெல்லாம் மாற வேண்டும்… கே.பாக்யராஜ் போன்று நல்ல படைப்பாளிகள் உருவாகவேண்டும். மக்களும் திரையரங்கிற்குச் சென்று தான் படம் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்…” என்றார்.

கண்ணுபடப்போகுதய்யா படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ், “ஆண்டிப்பட்டி ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் புதிய வார்ப்புகள் கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டபோது, வில்லனை ஊர்மக்கள்.சேர்ந்து அடிக்கும் காட்சி.  பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த நான் அந்த காட்சியில் ஊர்மக்களுள் ஒருவரனாக நடித்தேன்… அது தான் நான் சினிமாவுக்கு வருவதற்கான உந்துதலாக அமைந்தது… அந்த வகையில் கே.பாக்யராஜ் தான் எனது குரு.  தமிழ் சினிமாவில் ஒரு செண்டிமெண்ட் இருக்கிறது. பாலசந்தரிடம் குட்டு , பாரதிராஜாவிடம் திட்டு, பாக்யராஜிடன் கிள்ளு வாங்கிவிட்டால் பெரிய ஆளாகிவிடலாம் என்பதே அது… எனது கண்ணுபடப்போகுதய்யா படத்தைப் பார்த்து விட்டு கே.பாக்யராஜ் என் தோளைத் தட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த மூன்று ஜாம்பவான்களுக்கும் மரியாதை செய்யவேண்டும் என்பதற்காகவே எனது பெயரை பா வில் ஆரம்பித்து பாரதி கணேஷ் என்று வைத்துக் கொண்டேன்.’‘ என்றார்.

பூபேஷ் நாகராஜன், “ என் அப்பா தேவகோட்டையருகே ஓரியூர் எனும் கிராமத்தில் டூரிங் டாக்கீஸ் நடத்தினார். மக்கள் இன்னமும் திரையரங்குக்கு வருவதில் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள்.  வெள்ளைக்காரங்க கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு தமிழன் வின்செண்ட் சாமிக்கண்ணு திரையரங்குகளை முதன் முதலில் கொண்டுவந்திருக்கிறார் என்றால் அது நமக்குப் பெருமை… சினிமா இல்லாமல் எதுவும் இல்லை….” என்றார்.

வாகை சூடவா படத்தை தயாரித்த வில்லேஜ் தியேட்டர்ஸ் முருகானந்தம் பேசும்போது, “1914 லில் வின்செண்ட் சாமிக்கண்ணு விதைத்த விதைதான் இன்று பலராலும் அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது… பலரும் பயன் பெறுவது போன்ற நல்ல விதைகளை விதைப்போம்..” என்று கேட்டுக் கொண்டார்.

கே.பாக்யராஜ் பேசும் போது, “வின்செண்ட் சாமிக்கண்ணுவைக் கொண்டாடும் இந்த நல்ல நிகழ்ச்சிக்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும், ஒவ்வொருவரும் நிறைவான மனதுடன் வந்திருப்பது தான் சிறப்பு… நேர்மை. பாராட்டு வாங்கிக் கொடுக்கும் ஆனால், பட்டினி போட்டுவிடும்… ஆனால், நேர்மையாக சினிமா கொடுத்தால் என்றைக்காவது பலன் கிடைக்கும்…

அந்தக்காலத்தில் கிராமங்களில் இரண்டு பேரைத் தான் ஹீரோவாகக் கொண்டாடுவார்கள். ஒருவர் மின்வாரிய ஊழியர் பீஸ் போடுபவர், இன்னொருவர் தியேட்டர் ஆப்ரேட்டர்… அந்த அளவுக்கு ஆப்ரேட்டரை ச் சினிமாவைக் கண்டுபிடித்தவர் என்கிற ரேஞ்சுக்குக் கொண்டாடுவார்கள்…

வெள்ளக்கோவிலில் இருந்து கோபிக்குச் சைக்கிளில் சென்று படம் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகிறது… அந்த கிராமத்தில் இருந்து ஈரோடு போய்ட்டு வந்தாலே அதிசயமாகப் பார்ப்பார்கள். தப்பித் தவறி மெட்ராஸ் போயிட்டு வந்தவர்களை உட்கார வைத்து கடல் பார்த்தியா , கப்பல் பார்த்தியா என்று கேட்டுவிட்டு கடைசியாக எம்ஜிஆர் – சிவாஜி பார்த்தியா என்று கேட்பார்கள்… பார்க்கவில்லையென்று சொன்னால் அடப்போப்பா என்று சலித்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு சினிமா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது…. எதுவுமே தெரியாத எங்க ஊர்க்காரர்கள் இன்று டிஸ்கவரி சேனல் பார்த்துக் கொண்டே டீக்கடையில் வடை சுட்டுக் கொண்டிருப்பார்கள்… அந்த அளவிற்குச் சினிமா தான் அவர்களை மாற்றியிருக்கிறது…

திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் எல்லோருமே ஒரே அணி தான்… நடிகர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கட்டும், ஆனால், தயாரிப்பாளருக்கு சம்பாதித்துக் கொடுத்து விட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளட்டும். சிறிய நடிகர்கள். படங்களுக்கு திரையரங்குகள் கொடுங்கள்…. பாரதிராஜா, நான் எல்லோருமே புதிதாக இருந்து வந்தவர்கள் தான்… திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு திரையரங்குகளின் பங்கு மகத்தானது…. அந்த வகையில் இந்தப் பாரமரியத்தைத் தோற்றுவித்த வின்செண்ட் சாமிக்கண்ணுவை நன்றியுடன் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்… அவரது நினைவாகத் திரையரங்க தினம் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்று..” என்றார்.