தாணு அன்று செய்தார்…. விஷால் இன்று செய்கிறார்….

1159

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி தாணு இருந்தபோது, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கட்டைப்பஞ்சாயத்து செய்வதாக குற்றம்சாட்டினார் நடிகர் விஷால்.

அதன் தொடர்ச்சியாய் ஏற்பட்ட பிரச்சனைதான், விஸ்வரரூபம் எடுத்து, அதே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை விஷால் கைப்பற்றுவதற்கு காரணமானது.

தாணு தலைவராக இருந்தபோது தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டைப் பஞ்சாயத்து நடப்பதாக சொன்ன விஷால், இன்றைக்கு அதே காரியத்தை அவரும் செய்ய வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டதுதான் வேடிக்கை.

‛பாகுபலி-2’ படம்  வருகிற 28-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தமிழகத்தில் ‘பாகுபலி-2’ படத்தை ‘ ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் ‘பாகுபலி -2’ படத்தை வெளியிட தடை கோரி ’ஏசிஇ’ என்ற நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தது.

அதில், ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அதிபர் சரவணன் ‘ பாகுபலி-2’ படத்திற்காக தன்னிடம் 1.8 ரூபாய் கோடி கடன் வாங்கியிருந்தாகவும், பாகுபலி-2 படம் வெளியீட்டிற்கு முன்பாக  மொத்த பணத்தையும் திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் தற்போது படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சிக்கிறார். ஆகவே, எங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாவிட்டால் பாகுபலி- 2  படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, பாகுபலி- 2 படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும், இது தொடர்பாக விநியோகஸ்தர் சரவணன் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறி, வழக்கை  தள்ளி வைத்தார்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இருதரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொண்டுவிட்டதாக தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பாகுபலி-2 பட ரிலீஸில் இருந்த சிக்கலும் தீர்ந்தது.

நீதிமன்றத்துக்குப் போன இந்தப் பிரச்சனையை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு சுமுகமாக தீர்த்து வைத்தது.

தாணு தலைவராக இருந்தபோதும் இதுபோன்ற பிரச்சனைகள்தான் பேசி தீர்த்துவைக்கப்பட்டன.

அதைத்தான் கட்டைப்பஞ்சாயத்து என்றார் விஷால்.

இப்போது விஷால் செய்வது என்ன?