‘தப்புத்தண்டா’ படத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது காட்சியாக…

835

‘கிளாப் போர்ட் புரொடக்‌ஷன்’ என்ற படநிறுவனம் சார்பில் வி.சத்தியமூர்த்தி தயாரித்துள்ள படம் ‘தப்பு தண்டா’.

பாலுமகேந்திராவின் திரைப்பட கல்லூரியில் படித்த மாணவர் ஸ்ரீகண்டன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

புதுமுகம் சத்தியா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, சுவேதா கய் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சத்தியா, சுவேதா கய்யுடன் மைம் கோபி, ஜான் விஜய், ஈ.ராமதாஸ், ‘மெட்ராஸ்’ ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, ஜீவா ரவி, ஆத்மா ஆகியோரும் ‘தப்பு தண்டா’வில்  நடித்துள்ளனர்.

இவர்களுடன், ‘விசாரணை’ பாடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அஜய் கோஷ் இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக நெகட்டிவ்வான வேடத்தில் நடித்துள்ளார்.
வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ்.பி.ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார்.

நரேன் பாலகுமார் என்ற அறிமுக இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார்.

தப்பு தண்டா  படத்தின் பாடல்களை இயக்குநர் பாலுமகேந்திராவின் மனைவி அகிலா பாலுமகேந்திரா வெளியிட்டார்.

பாலுமகேந்திராவின் திரைப்பட பயிற்சிப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் இயக்குநராகியிருக்கும் முதல் மாணவராம் ஸ்ரீகண்டன்!

எந்த சினிமா விழாக்களுக்கும் செல்லாத அகிலா பாலுமகேந்திரா, தன் கணவரின் மாணவரான ஸ்ரீகண்டனை வாழ்த்துவதற்காக இந்த விழாவுக்கு வந்ததாக தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரும், தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு, செயற்குழு உறுப்பினரும், நடிகருமான உதயா, இயக்குனர் சக்தி சிதம்பரம் உட்பட திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

தப்புத்தண்டா  படம் குறித்து இயக்குநர் ஸ்ரீகண்டன் பேசும்போது, ‘‘இன்றைய காலத்தில் நடக்கும் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற விஷயங்களை வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும்’’ என்று தெரிவித்தார்.

தப்புத்தண்டா படத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் அஜய் கோஷ், “ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘விசாரணை’ படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு பெருமை  கிடைத்தது.” என்று தெரிவித்ததோடு, தமிழ் சினிமா ரசிகர்கள் தந்த ஆதரவு குறித்து நெகிழ்ந்துபோய், விழா மேடையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கமும் தெரிவித்தார்.

“இந்திய சினிமா உலகில் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குவது தமிழ் சினிமாதான்” என்றும் பாராட்டும் தெரிவித்தார் அஜய் கோஷ்.